கதை எழுதினேன்; ஹீரோவானேன்! - டாக்டர் கு. கணேசன்

By கு.கணேசன்


நான் 40 வருடங்களாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் வசிக்கிறேன். நான் பிறந்தது, வளர்ந்தது, பள்ளிப் படிப்பை முடித்தது எல்லாமே அதே மாவட்டத்தில் உள்ள புதுச்செந்நெல்குளம் எனும் சிறு கிராமத்தில்.

பெற்றோர் இருவரும் விவசாயிகள். எனக்கு அண்ணன் ஒருவர், தம்பி ஒருவர், மூன்று அக்காக்கள். நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது கடைசி அக்கா ராமலட்சுமி பள்ளிப்படிப்பை முடித்திருந்தார். அவர் புத்தகப் பிரியர்.

பகலில் காட்டில் வேலை பார்த்துவிட்டு வருவார். இரவில் ஏதாவது ஒரு புத்தகம் வாசிக்க வேண்டும் என்பார். எங்கள் ஊர் சிறிய கிராமம்தான் என்றாலும் அங்கே ஒரு நூலகம் இருந்தது. நான் தினமும் பள்ளி முடிந்து வந்ததும் அந்த நூலகத்துக்குப் போய் ஏதாவது ஒரு நாவல் அல்லது வார, மாத இதழ்களை எடுத்துவந்து கொடுப்பேன். அக்கா இரவில் அதை எனக்கும் வாசித்துக் காட்டுவார். அப்போதெல்லாம் ‘இது மாதிரி நீயும் எழுதிப் பார்’ என்பார். ஆசை யாரை விட்டது! எனக்குத் தோன்றியதை எல்லாம் எழுதிக் காண்பிப்பேன். பத்திரிகைகளுக்கு அனுப்பச் சொல்வார். அனுப்புவேன். ஆனால், எல்லாமே சுவரில் அடித்த பந்தாகத் திரும்பி வந்துவிடும்.

அடிக்கடி நூலகத்துக்குச் சென்றதால், நூலகர் வரதராஜன் என் மேல் பிரியம் காட்டினார். நான் கதைகள் எழுத ஆர்வம் காட்டியதைப் பாராட்டினார். ‘இன்னும் நிறைய வாசித்தால்தான் அச்சில் வரும் அளவுக்குத் தரமாக எழுத முடியும்’ என்று ஆலோசனை சொன்னார். நான் எங்கள் ஊர் நூலகத்தில் இருந்த பெரும்பாலான புத்தகங்களை வாசித்துவிட்டேன். ஆகவே, திருவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் நூலகத்துக்குப் போய்ப் படிக்கச் சொன்னார்.

எங்கள் கிராமத்திலிருந்து திருவில்லிபுத்தூர் 15 கி.மீ. தொலைவு. டவுன் பஸ்ஸில் செல்வதற்கு வசதியில்லை. நான் தனியாக நடந்து செல்வதற்கு வீட்டில் அனுமதியில்லை. ஆனாலும் வாசிப்புத் தாகம் எனக்கு அடங்கவில்லை. வீட்டில் சொல்லாமல் ஒரு ஞாயிற்றுக்கிழமை திருவில்லிபுத்தூருக்கு நடந்து சென்றேன். நான் தனியாக நடந்து செல்வதைக் காடுகளில் வேலை செய்த பெண்கள் கவனித்து விசாரித்தனர். அப்போதெல்லாம் வீட்டில் கோபித்துக்கொண்டு போகும் சிறுவர், சிறுமியர் இப்படித்தான் காடுகள் வழியாக நடந்துபோவார்கள். அதனால், அந்தச் சந்தேகத்தில் என்னையும் விசாரித்தார்கள். நான் பென்னிங்டன் நூலகத்துக்குப் போகிறேன் என்று சொன்னாலும் அவர்கள் அதை நம்பவில்லை. என்னைப் பிடித்துவைத்துக்கொண்டு, ஊருக்குத் தகவல் அனுப்பினார்கள். அதை அறிந்து என் உறவினர் ஒருவர் அந்த இடத்துக்கு வந்து, என்னை மறுபடியும் வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டார்.

அந்தச் சோகத்தை என்னால் தாங்க முடியவில்லை. வீட்டில் பல நாட்கள் அழுதுகொண்டிருந்தேன். புத்தக வாசிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்து ஒருவழியாக பென்னிங்டன் நூலகத்துக்குச் செல்ல வீட்டில் அனுமதி கொடுத்தார்கள். அதற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் நான் திருவில்லிபுத்தூருக்கு நடந்தே சென்று, பென்னிங்டன் நூலகத்தில் வாசிப்பதை வழக்கமாக்கிக்கொண்டேன்.

அந்த நேரத்தில் எங்கள் பள்ளிக்குப் புதிதாக ஒரு வரலாற்று ஆசிரியர் வந்தார். அவர் பெயர் அழ. கிருஷ்ணமூர்த்தி. திருவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள மம்சாபுரம் அவருடைய ஊர். அவர் எழுத்தாளர். அவர் பாடம் நடத்தும்போது வரலாற்றுக் கதைகள் நிறைய சொல்வார். அது எனக்குப் பிடிக்கும். கவிதை, கதை எழுதுவது எப்படி என்று சிலாகித்துப் பேசுவார். அப்படி எழுதச் சொல்லி மாணவர்களைத் தூண்டுவார். ஒரு தலைப்பு கொடுத்துக் கவிதை எழுதிவரச் சொல்வார். ஒரு சிறிய கதையைச் சொல்வார். அதன் முடிவை மாணவர்கள் நாங்கள் சொல்ல வேண்டும். நல்ல முடிவு சொன்ன மாணவருக்குப் பென்சிலைப் பரிசாகக் கொடுப்பார். அப்படி நான் பலமுறை பரிசு வாங்கியிருக்கிறேன். அதனால், என்னிடம் அதிகமாகப் பிரியம் காட்டுவார். அப்போது நான் எழுதி வைத்திருந்த பல சிறுவர் கதைகளை அவரிடம் காட்டினேன். படித்துவிட்டுப் பாராட்டினார். அவை பத்திரிகைகளுக்கு அனுப்பி திரும்பி வந்த விஷயத்தையும் சொன்னேன். அப்போதுதான் அவர் எந்தப் பத்திரிகைக்கு எதை அனுப்ப வேண்டும் என்கிற சூட்சுமத்தைச் சொன்னார். ‘கோகுல’த்துக்கு அனுப்ப வேண்டியதை ‘குமுத’த்துக்கு அனுப்பினால் யார் பிரசுரிப்பார்கள்?

என் ஆசிரியர் அப்போது வெளிவந்துகொண்டிருந்த சிறுவர் இதழ்களான கண்ணன், முயல், அணில், டமாரம் போன்ற பத்திரிகைகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஒருமுறை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவருடைய நூலகத்தைக் காண்பித்தார். நிறைய சிறார் நூல்களைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவர் எழுதிய கதைகளையும் வாசிக்க வைத்தார். அதனால், எனக்குள் எழுதும் ஆர்வம் இன்னும் அதிகமானது. எப்படியும் என் எழுத்தை அச்சில் பார்த்துவிட வேண்டும் என்கிற தாகம் பல மடங்கு அதிகரித்தது. அதை அறிந்த என் ஆசிரியர், ‘வாரா வாரம் ‘முயல்’ பத்திரிகைக்கு ஒரு கதை அனுப்பு. தொடர்ந்து அனுப்பினால் கட்டாயம் பிரசுரித்துவிடுவார்கள்’ என்று யோசனை சொன்னார். அப்படியே செய்தேன். பல கல் அடித்தால் ஒரு கல்லிலாவது பழம் விழாமலா போகும்? விழுந்தது.

டாக்டர் கு. கணேசன்

அப்போது நான் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் தபால்காரர் என் வகுப்புக்கு வந்து எனக்கு ஒரு புத்தகம் தபாலில் வந்திருப்பதாகச் சொல்லி, கொடுத்துவிட்டுப் போனார். நான் ஆவலோடு அதைப் பிரித்துப் பார்த்தேன். அது ‘முயல்’ பத்திரிகை. அதில் நான் எழுதிய ‘யாருக்கு முத்துமாலை?’ என்கிற சிறுவர் கதை பிரசுரமாகியிருந்தது. அந்த நிமிடத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! அதைச் சக மாணவர்களிடம் காண்பித்து மகிழ்ந்தேன். ஓடிச்சென்று என் ஆசிரியரிடமும் காண்பித்து ஆசீர்வாதம் வாங்கினேன். அன்றிலிருந்து வகுப்பில் நான் பெரிய ஹீரோ ஆகிவிட்டேன். அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் முயல் பத்திரிகையிலிருந்து எனக்கு மூன்று ரூபாய் மணி ஆர்டர் வந்தது. அதற்குக் கடலை மிட்டாய் வாங்கி நண்பர்கள் எல்லோருக்கும் கொடுத்து மகிழ்ந்தேன்.

ஒரு சிறிய கிராமத்தில் அன்று ஆரம்பித்த என் எழுத்துப் பயணம் 63 வயதிலும் தொடர்கிறது!

கட்டுரையாளர், மருத்துவர், எழுத்தாளர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்