27 மே, ரேச்சல் கார்சன் பிறந்தநாள்: இயற்கை மீது கனிவோடு இருங்கள்!

By எஸ்.சுஜாதா


'இயற்கை மீது மனிதர்கள் தொடுக்கும் போர், மனிதர்கள் தம் மீதே தொடுக்கும் போர்’ - ரேச்சல் கார்சன்

1907, மே 27 அன்று அமெரிக்காவில் பிறந்தார் ரேச்சல் கார்சன். இயற்கையை நேசிப்பதும் கனவு காண்பதுமாக அவருடைய குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாகக் கழிந்தது. 8 வயதில் விலங்குகளை வைத்துக் கதைகளை எழுத ஆரம்பித்தார். 11 வயதில் அவருடைய முதல் கதை, பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து கதைகள் எழுதினார். அவருடைய கதைகளில் கடல் முக்கியப் பங்கு வகித்தது.

பென்சில்வேனியா பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஓர் ஆய்வுக்கூடத்தில் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டு, முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியைத் தொடர நினைத்தார். ஆனால், ரேச்சலின் தந்தை இறந்ததால், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழல் உருவானது.

மேரி ஸ்காட் சிங்கர் உதவியால் அமெரிக்க மீன்வளத் துறையில் தற்காலிக வேலை கிடைத்தது. கடல், கடல்வாழ் உயிரினங்கள் பற்றி நிறைய படித்தார். ஆராய்ச்சிகளைச் செய்தார். தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். இலக்கியம் அல்லாத அறிவியல் கட்டுரைகளில்கூட ரேச்சலின் எழுத்துத் தனித்துவம் மிக்கதாக இருந்தது. அவர் எழுத்தையும் அவர் எழுதிய விஷயங்களையும் ஏராளமானவர்கள் கொண்டாடினார்கள்.

1936ஆம் ஆண்டு தேர்வு எழுதி, மீன்வளத் துறையில் முழுநேர வேலையைப் பெற்றார் ரேச்சல். மீன்களின் எண்ணிக்கையை ஆராய்ந்து, தொகுப்பதுதான் அவருடைய வேலை. அந்த வேலையில் கிடைத்த விஷயங்களை, பொதுமக்கள் அறியும் விதத்தில் பத்திரிகைகளில் எழுதினார்.

'ஆழ்கடல்' என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளை மேலும் விரிவாக்கிப் புத்தகமாக எழுதும்படி ஒரு பதிப்பகம் கேட்டது. அதன்படி 1941ஆம் ஆண்டு 'Under the sea-wind' என்ற தலைப்பில் அவரது கட்டுரைகள் புத்தகமாக வெளிவந்தது. ஆரோக்கியமான விமர்சனங்கள் வந்த அளவுக்குப் புத்தகம் விற்பனை ஆகவில்லை. சூழலியல் தொடர்பான பத்திரிகைகளில் ரேச்சல் தொடர்ந்து எழுதினார். அதுவரை எழுத்தாளராக இருந்த ரேச்சல், பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தப் பதவியின் மூலம் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அவருடைய விருப்பத்துக்கு ஏற்றவாறு எழுதவும் முடிந்தது; ஆராய்ச்சி செய்யவும் முடிந்தது.

'The sea around us' என்ற அடுத்த புத்தகம் வெளிவந்தது. எதிர்பாராத அளவுக்கு வரவேற்பைப் பெற்றது. அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் தொடர்ந்து 86 வாரங்களுக்கு இந்தப் புத்தகம் முதல் இடத்தில் இருந்தது. புத்தகத்தின் தாக்கம் ஆவணப்படமாகவும் உருவானது. மிகச் சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதும் கிடைத்தது. ரேச்சலின் பொருளாதார நிலைமை சீரடைந்தது. பணம், புகழ், விருது எல்லாம் வந்து சேர்ந்தன.

ரேச்சல் தன்னுடைய வேலையிலிருந்து விலகி, முழுநேர எழுத்துப் பணியில் மூழ்கினார். பல்வேறு இடங்களில் சூழலியல் குறித்து உரைகளை நிகழ்த்தினார். சூழலியல் குறித்து மக்களுக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட ரேச்சல், தன்னுடைய ஆராய்ச்சியை மேலும் தீவிரப்படுத்த முடிவுசெய்தார்.

1957இல் ரேச்சல் செய்த ஆராய்ச்சியில் சில பறவைகளும் மண்புழுக்களும் எண்ணிக்கையில் குறைந்து வருவதைக் கண்டறிந்தார். அதற்கான காரணத்தைத் தேடும்போதுதான் சிவப்பு எறும்புகளை ஒழிப்பதற்கு, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கும் விஷயம் தெரியவந்தது. இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளால்தாம் பறவைகள், புழுக்கள் போன்றவை பாதிப்படைகின்றன என்பதை உணர்ந்தார். பரிசோதனைகளைச் செய்தார். விஞ்ஞானிகளிடம் விவாதித்தார். தன்னுடைய கருத்துகளை ஆணித்தரமாகப் பத்திரிகைகளில் எழுதினார்.

பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனிகள் கடுமையாக ஆட்சேபித்தன. வழக்கு போட்டன. பல்வேறு விதங்களில் நெருக்குதல் கொடுத்தன. பயம் காட்டின. எது ஒன்றும் ரேச்சலின் துணிச்சலை அசைத்துப் போடவில்லை. எதிர்ப்பு, பூதாகரமாக உருவெடுக்க, உருவெடுக்க அவருடைய வாதத்தை மேலும் மேலும் வலுச்சேர்க்க அதிக உழைப்பைச் செலவிட்டார் ரேச்சல்.

நான்கு ஆண்டு உழைப்பில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் மண், தாவரம், விலங்குகள், பறவைகள், புழுக்கள், பூச்சிகள், மனிதர்கள் என்று அனைத்து உயிர்களும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை ஆதாரத்தோடு நிரூபித்தார். பூமியில் உள்ள ஒவ்வோர் உயிரினமும் இன்னோர் உயிரினத்தைச் சார்ந்து வாழ்கிறது. அப்படி வாழும்போது ஓர் உயிரினத்தில் ஏற்படும் பாதிப்பு இன்னோர் உயிரினத்துக்கும் பரவிவிடுகிறது. நாளடைவில் அந்த உயிரினம் அழியும் சூழலுக்குத் தள்ளப்படுகிறது. அதேபோல பூச்சிக்கொல்லி மருத்துகளைப் பயன்படுத்துவதால் அந்தப் பூச்சிகள் மடிவதில்லை. அவை அந்தப் பூச்சிக்கொல்லி மருந்துக்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக்கொண்டு, முன்பைவிட அதிக வீரியத்தைப் பெற்றுவிடுகின்றன. விவசாயத்தில் செயற்கை உரமாகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்கள் மூலம் மனிதன் உள்பட அதைச் சார்ந்து வாழும் பல்வேறு உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு உள்ளாகின்றன என்றார் ரேச்சல்.

ஆராய்ச்சி, எதிர்ப்பு என்று சமாளித்துக்கொண்டிருந்த ரேச்சலை மார்பகப் புற்றுநோய் தாக்கியது. ஆனாலும் அவர் பின்வாங்கவில்லை. 'மௌன வசந்தம்' (Silent Spring) என்ற பெயரில் நியூ யார்க்கர் செய்தித்தாளில் தொடராக எழுத ஆரம்பித்தார். மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிராகப் போரட்டங்கள் வெடித்தன. வேறுவழியின்றி அரசாங்கம் டிடிடி பூச்சிக்கொல்லி மருத்தைத் தடை செய்தது.

1962ஆம் ஆண்டு ‘மௌன வசந்தம்’ புத்தகமாக வெளிவந்தது. ஓராண்டுக்குள் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனையாயின.

56 ஆண்டுகளே வாழ்ந்த ரேச்சல், அவர் மறைந்து 58 ஆண்டுகளுக்குப் பிறகும் 'மௌன வசந்தம்’ உலகம் முழுவதும் உரத்த குரலில் எச்சரிக்கை செய்துகொண்டிருக்கிறது!

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE