பூச்சிகளின் ‘கண்ணீர்த் தாகம்’

By செய்திப்பிரிவு

மக்குத் ‘தண்ணீர்த் தாகம்’ தெரியும். ‘கண்ணீர்த் தாகம்’ தெரியுமா? வண்ணத்துப்பூச்சிகள், தேனீ, ஈக்கள் போன்ற முதுகெலும்பற்ற சிற்றுயிர்கள் ஊட்டச்சத்துக்காக விலங்குகளின் கண்ணீரைக் குடிக்கும். இது லாக்ரிபெஜி (Lacryphagy) எனப்படுகிறது.

மனிதர்கள் அழுவார்கள், அதன் விளைவாகக் கண்ணீர் வெளிப்படும். விலங்குகள் எப்படி அழும், எப்படி அவற்றின் கண்ணீரை இவை குடிக்கும் என்கிற கேள்வி தோன்றலாம். விலங்குகளின் கண்களையொட்டி உள்ள உள்ளுறுப்பான ‘லாக்ரிமல்’ சுரப்பி, கண்ணீரைச் சுரக்கும். இது விலங்குகளின் கண்களை எப்போதும் ஈரப்பதத்துடன் பராமரிக்க உதவும். கண்ணில் தூசி விழுவதையும் ஆபத்தான பொருட்களை வெளியேற்றவும் இந்தக் கண்ணீர் உதவும்.

இப்படிச் சுரக்கும் கண்ணீரைத்தான் வண்ணத்துப்பூச்சி உள்ளிட்டவை உறிஞ்சிக் குடிக்கின்றன. இந்தக் கண்ணீரில் தண்ணீர், சளிப்பொருள், புரதச் சத்து, உப்புச் சத்து, கொழுப்பு போன்றவை இருக்கும். வண்ணத்துப்பூச்சிகளின் வளர்சிதை மாற்றத்துக்கும் இனப்பெருக்கத்துக்கும் உப்புச் சத்து அவசியம். அவற்றுக்குத் தேவையான சோடியத்தையும் மற்ற கனிமச் சத்துகளையும் விலங்குகளின் கண்ணீரிலிருந்து அவை பெறுகின்றன. வண்ணத்துப்பூச்சிகள் பொதுவாக முதலை, ஆமை போன்ற ஊர்வனவற்றிடமிருந்து கண்ணீரை உறிஞ்சும். கரப்பான்பூச்சிகளும் கண்ணீரை உறிஞ்சுவதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பல்லி இனத்தைச் சேர்ந்த ஊர்வனவற்றின் கண்ணீரை இவை உறிஞ்சுகின்றன.

இயற்கைச் சங்கிலியில் உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வது இயல்பு. தன் தேவைக்காக மற்றொரு உயிரியைச் சார்ந்து இருக்கும்போது, சார்ந்திருக்கும் உயிரினத்துக்கு எந்தப் பாதிப்பும் நேராது. அது மட்டுமல்லாமல் பொதுவாகச் சார்ந்திருக்கும் உயிரினம் சிற்றுயிராகவும், அதற்கு உதவும் உயிரினம் அளவில் பெரிய உயிரினமாகவுமே இருக்கும். உயிரின உலகில் இதுபோன்ற இணக்கமான உறவு மிகச் சாதாரணமானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE