சொந்த ஊர் தேவகோட்டை. ஆனால், பிறந்தது திருப்பாதிரிப்புலியூரில். மூன்று மாடிகள் கொண்ட வீடு, சமையல், பிற வேலைகளுக்கு ஆட்கள் என வசதியான குடும்பம். இவ்வளவு இருந்தும் மூன்றாம் வகுப்பில் என்னை உள்ளூரிலேயே செயின்ட் மேரீஸ் கான்வென்ட் விடுதியில் சேர்த்துவிட்டார்கள் யுவர் ஆனர். அதைவிட அநியாயம், அதே பள்ளியில் என் தம்பி ராமு வீட்டிலிருந்து வந்து படித்துக்கொண்டிருந்ததுதான்!
அதற்கு அவர்கள் சொன்ன காரணம், நான் குறும்பு செய்கிறேனாம். அப்படி என்ன பெரிதாகச் செய்துவிட்டேன்? வீட்டில் ஒரு பெரிய கிணறு இருந்தது. என் உயரத்துக்கு எட்டிப் பார்த்தாலும் தண்ணீர் தெரியாது. யாரையாவது தூக்கிக் காண்பிக்கச் சொல்லி, பார்த்திருக்கிறேன்.
எவ்வளவு தண்ணீர் என்கிற ஆச்சரியம் தவிர, அதில் ஏதாவது விழுந்தால் வட்டம் வட்டமாக விரியும் அலைகள் என்னை ஈர்த்திருக்கும்போல! அதனால், கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் ஓர் உண்டியலில் காசு போடுவது போல் கிணற்றுக்குள் போட்டுவிடுவேன். எதைக் காணோம் என்றாலும் அந்தப் பொருளைத் தேடுவதில்லை; என்னைத்தான் தேடினார்கள் யுவர் ஆனர், அடிப்பதற்கு!
எனக்கென்ன தெரியும்? நான் சின்னபிள்ளைதானே?
ஒருமுறை கிணற்றுச் சுவரில் கம்பு வைத்திருந்தார்கள். அதன் ஒரு முனையில் கைவிரல்கள் போன்ற கம்பிகள். அது என்னை வா வா என்று அழைப்பது போலவே இருந்தது. அட! இதைத் தூக்கக்கூட வேண்டாம். தள்ளினாலே போதுமென்று யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து தள்ளிவிட்டேன்!
‘சரி, நம் இன்றைய வேலை முடிந்தது’ என்று போனால், கூப்பிட்டு வைத்து சாத்து சாத்தென்று சாத்திவிட்டார்கள். அப்படி என்ன பிரமாதமான பொருள்? இதற்கு மட்டும் ஏன் இவ்வளவு அடி என்று எனக்குப் புரியவில்லை. பின்னர் அக்கா சொன்னார், “அது, நீ போட்ட சாமான்களை எல்லாம் எடுக்க வைத்திருந்த பாதாளக் கரண்டி” என்று. பெரியவர்கள் பொறுப்பாக வைத்துக்கொள்ளாமல், என் மீது குற்றம் சாட்டுவது என்ன நியாயம் யுவர் ஆனர்?
இப்படிச் சில காரணங்களைச் சொல்லி விடுதியில் சேர்த்துவிட்டார்கள். ஆனால், அந்தக் காலத்திலேயே அது பிரமாதமான விடுதி. ஒவ்வொருவருக்கும் தனித்தனி மூடி போட்ட மேஜை, நாற்காலி. பொருட்களை வைத்துப் பூட்டி, சாவியை கழுத்தில் தொங்கும் சங்கிலியில் மாட்டிக்கொள்ள வேண்டும்.
பெரிய அறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டில். இரவு உடை அணிந்துகொண்டுதான் தூங்கவேண்டும். ஒருநாள் தூங்கிக் கொண்டிருந்த போதா ‘டூ பாத்ரூம்’ வர வேண்டும்? எழுந்து தனியாகப் போக பயம். இருட்டு. அங்கேயே போய்விடுவேன் போலிருந்தது. ஆனால், அடிப்பார்களே... மூன்று, நான்கு கட்டில்கள் தாண்டி ‘வேலை’யை முடித்துவிட்டு வந்து தூங்கிவிட்டேன். யாருமே கண்டுபிடிக்கவில்லை என்பது போலதான் இருந்தது மதியம் வரை.
இதற்கெல்லாமா வகுப்புக்கு வந்து கூப்பிடுவார்கள்? கூப்பிட்டார்கள். “இல்லையே, எனக்குத் தெரியாதே” என்றேன். அடி விழுந்தது. பைஜாமா காட்டிக்கொடுத்திருக்கிறது. சே!
இதையெல்லாம் செய்ததால் நான் என்னமோ குறும்பு மட்டுமே செய்பவன் என்று நினைத்துவிடவேண்டாம். கால்பந்து நன்றாக விளையாடுவேன். அணி பிரித்துக்கொண்டிருந்தோம். கேப்டன்கள் இருவரும் சிலரைத் தேர்வு செய்துவிட்டார்கள். யாராவது ஒரு கேப்டன் என்னை எடுக்கக் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பக்கம் வந்த ஃபாதர் ஜோசப், “டேய், வள்ளியப்பனை எடுங்கப்பா. அவன் நல்லா விளையாடுவான்” என்று சொன்னார். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
சனிக்கிழமை விடுதி மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வார்கள். வரிசைக்கு நான்கு பேராக நடக்கவேண்டும். சில நேரம் எங்கள் வீடு வழியாகப் போவோம். எங்கள் வீட்டைப் பார்த்த சந்தோஷத்தில் வீட்டுக்குள் ஓடிவிடுவேன். எவர் கண்ணிலும் படாமல் ஒளிந்திருப்பேன். ஊர்வலம் நகர்ந்த பிறகு வெளிவருவேன். அதிர்ந்துவிடுவார்கள். உடனே விடுதிக்குக் கொண்டுவிட வேண்டும் என்பார்கள். அம்மா, ஆயாள் சிபாரிசில் அன்று இரவு தங்கவிடுவார்கள். மறுநாள் அப்பா அழைத்துப் போவார். மன்னிப்புக் கடிதம் வாங்கிக்கொண்டுதான் சேர்த்துக்கொள்வார்கள்.
கோடை விடுமுறை நாட்களில் வேறு வழியில்லாமல் வீட்டில் வைத்துக்கொள்வார்கள். தெருவில் விளையாடிவிட்டு வீட்டுக்கு வருவோம். ஒருநாள் தம்பி ராமு நான் வீட்டுக்கு வாடா என்று கூப்பிட்டும் வரவில்லை. வாசலில் எதையோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். நான் கூப்பிடக் கூப்பிட அசையாமல் அப்படி என்ன வேடிக்கை? அவன் முதுகில் ஓர் உதை விட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டேன்.
வழக்கமாக என் ஆராய்சிகளின் முடிவில் வரும் சத்தம் அன்று வரவில்லை. மாறாக, சற்று நேரம் கழித்து, “ஐயையோ, விளையாடப் போன பிள்ளையைக் காணோமே” என்று என் அம்மா போட்ட சத்தம்தான் கேட்டது. சரி, இதெல்லாம் வழக்கமானதுதான் என்று நான் போய்ப் பார்த்தால், தம்பி உடலெல்லாம் கறுப்பாக நின்றுகொண்டிருந்தான். என் அண்ணன் அவனை பைப் மூலம் தண்ணீர் அடித்து கழுவிக்கொண்டு இருந்தார். வழக்கம்போல எனக்குத் திட்டும் அடியும். அவனை நான் சாக்கடையில் தள்ளிவிடேன் என்பது குற்றச்சாட்டு. எனக்கென்ன தெரியும்? அவனை யார் அதன் எதிரில் நிற்கச் சொன்னது?
குடும்பம் சென்னைக்குக் குடிபெயர, விடுதி வாழ்க்கை முடிந்தது. சென்னையிலும் என் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்துகொண்டிருந்தேன். மூன்று மாடி வீடு. மொட்டைமாடியில் இருந்து கல்லை விட்டு எறிந்து, அது கீழே ஓடும் பூனை மீது பட்டால் என்ன ஆகும் என்பது அப்படிப்பட்ட ஆராய்சிகளில் ஒன்று.
சின்னப் பையனுக்குக் குறி சரியாக வரவில்லை. அந்தக் கல் பரமசிவத்தின் அப்பா மீது விழுந்துவிட்டது. அவரும் அவர் குடும்பத்தாரும் எங்கள் வீட்டுக்கு வந்து சண்டையிட்டனர்.
எங்கள் வீட்டின் பின்பக்கம் துணி துவைக்கிற இடத்தில் சற்று உயரமாகக் கூடு போல ஒன்று இருந்தது. அதை நான் தொடப் போனபோது, “டேய் சிம்னியைத் தொடாதே” என்று அதட்டினார் அப்பா. அதனாலேயே அவர் நகர்வதற்காகக் காத்திருந்து தொட்டேன். கையைச் சுட்டுவிட்டது. ஆஹா, இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பது புரிந்துவிட்டது.
என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது என் கண்ணில் பட்டது பழுப்பு நிறத்தில் மாவு. அது இரண்டு டிக்காஷன் கறந்தபின் மீதமிருந்த காப்பிப்பொடி என்று எனக்குத் தெரியாது. அதை அப்படியே சிம்னிக்குள் உதிர்த்துவிட்டேன். “ஏன்னா... மேலிருந்து என்னவோ கொட்டுறது. பால் எல்லாம் போச்சு” என்ற சத்தம் வந்தது. அது, கீழ் வீட்டு சுரேஷ் அம்மாவின் குரல். பக்கத்தில் இருந்த கழிவறைக்குள் புகுந்துகொண்டேன். சுரேஷ் அப்பா எங்கள் வீட்டிற்கு வந்து போட்ட சத்தம் இருக்கிறதே..!
கேட்டரிங், பொருளாதாரம், மார்கெட்டிங், எச்.ஆர்., போன்ற படிப்புகள், பெல், பெப்சி, வேர்பூல், கேமியோ போன்ற நிறுவனங்களில் வேலை, 70 புத்தகங்கள், சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆறு ஆண்டுகள் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் துறையில் ஆராய்ச்சி செய்து பெற்ற பி.எச்டி., பட்டம் ஆகியவற்றுக்கும் என் சிறு வயது ஆராய்சிகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா யுவர் ஆனர்?
கட்டுரையாளர், பொருளாதார வல்லுநர், எழுத்தாளர்
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago