19 மே, ரூபிக் க்யூப் கண்டுபிடிக்கப்பட்டது

By ஆர்.ஜெயக்குமார்

ரூபிக் கனசதுரம் (Rubik Cube) என்பது ஒரு முப்பரிமாணப் புதிர் விளையாட்டுப் பொம்மை. உலகின் மிக அதிகமாக விற்கப்பட்ட புதிர் விளையாட்டுப் பொம்மை இதுதான். அனுமதியுடனும் இல்லாமலும் பல கோடி ரூபிக் கனசதுரங்கள் குக்கிராமங்களில்கூட இன்றும் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்பு, பல சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறது.

எர்னோ ரூபிக்


ஹங்கேரியக் கட்டிடவியல் அறிஞரும் சிற்பியுமான எர்னோ ரூபிக் என்பவரால் இது 19 மே 1974-ல் கண்டுபிடிக்கப்பட்டது. ஹங்கேரியின் தலைநகரான புராபெஸ்ட்டில் கட்டிடவியல் கல்லூரியில் பேராசிரியரான ரூபிக், முப்பரிமாண வடிவியியல் குறித்து மாணவர்களுக்கு விளக்குவதற்காக ஒரு கனசதுரத்தைக் கண்டுபிடிக்க முயன்றார். ஆனால், அவரே எதிர்பார்க்காத வகையில் இதைக் கண்டுபிடித்தார். புடாபெஸ்டில் உள்ள அவரது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில்தான் இந்த் உலகப் புகழ் பெற்ற சம்பவம் நடந்தது..

இதைப் பற்றித் தன் அம்மாவிடம் பகிர்ந்தார். பிறகு அந்த வடிவத்தின் ஆறு பகுதிக்கும் வெள்ளை, சிவப்பு, நீலம், ஆரஞ்சு, பச்சை, மஞ்சல் என ஆறு வண்ணங்களைப் பூசினார். வேடிக்கை என்னவென்றால் ரூபிக், தான் கண்டுபிடித்த கனசதுரப் புதிரைத் தீர்க்க ஒரு மாதம் ஆனது எனச் சொல்லப்படுகிறது. பிறகு புதிரை விடுவிப்பதற்கான பல சாத்தியங்களை அவர் கண்டறிந்தார்.

1975-ல் தன் கண்டுபிடிப்புக்கு ‘மேஜிக் க்யூப்’ என்ற பெயரில் ஹங்கேரியில் உரிமம் வாங்கினார். 1979-ல் ஜெர்மனி நியுரம்பெர்க்கில் பொம்மைகள் சந்தையில் ரூபிக்கின் இந்தக் கண்டுபிடிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு செவன் டவுன் பொம்மைகள் தயாரிப்பு நிறுவனத் தலைவர் டாம் க்ரீமர், இந்த வடிவமைப்பைக் கவனித்திருக்கிறார். அவர் அதற்கான விற்பனை உரிமையை வாங்கி, ‘ரூபிக் க்யூப்’ என்ற பெயரில் உலகம் முழுவது விற்பனைக்குக் கொண்டு சென்றார். லண்டன், நியூயார்க், பாரீஸ் உள்ளிட்ட பல சர்வதேசச் சந்தைகளில் காட்சிப்படுத்தி ரூபிக் க்யூபுக்கு உலகப் புகழை பெற்றுத் தந்தார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE