என் பெயர் லிஃப்ட். வாழ்க்கையில் மேலும் போகலாம். கீழும் போகலாம். எல்லாவற்றுக்கும் நாம் எடுக்கும் முயற்சிகளும் முடிவுகளும்தாம் காரணம். சுறுசுறுப்பாக நாம் செய்யும் வேலை நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். இந்தக் கட்டிடத்துக்கு நான் வந்த நாள் முதல் உழைத்துக்கொண்டே இருக்கிறேன். கடமையைச் செய்வேன். பலனை எதிர்பார்க்க மாட்டேன். இப்போது வயதானதால் முன்புபோல் என்னால் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியவில்லை. எல்லோருக்கும் உதவியாக இருந்த நான், இப்போது எரிச்சலடைய வைக்கிறேன்.
இந்த ஊரிலேயே முக்கியமான கட்டிடம் இது. அரசாங்கம் தொடர்பான வேலைகள் நடப்பதால் மக்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். இந்தக் கட்டிடத்தில் பாலு என்கிற நண்பர் ஒருவர் இருக்கிறார். என்னை இயக்குவது இவர்தான்.
ஒருநாள் அதிகாரிகள் வந்தார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு மெதுவாகச் சென்றேன்.
‘‘இந்த லிஃப்ட் ஏன் இவ்வளவு மெதுவாகப் போகுது?” என்று பாலுவிடம் கேட்டார் ஓர் அதிகாரி.
மற்றோர் அதிகாரி, “அவருக்கு என்ன தெரியும்?” என்று சிரித்தார்.
“லிஃப்ட் மெக்கானிக்கிடம் சொல்லியாச்சு சார், நாளை சரியாகிவிடும்” என்றார் பாலு.
பாலுவின் பதிலை யாருமே கண்டுகொள்ளவில்லை.
“என்ன லிஃப்ட் இது, இன்னைக்கு ஏறினால் நாளைக்குதான் போகும் போல” என்று பாலுவிடம் கேலி செய்யாத ஆட்களே இல்லை.
தினமும் நான் மெதுவாகச் செல்வதற்கு பாலுதான் திட்டுவாங்குவார்.
ஒருநாள் என் பிரச்சினையைச் சரிசெய்ய என்னதான் வழி என்று அதிகாரிகள் பேசினார்கள். ஆலோசனைகள் சொன்னார்கள்.
“அதிகமாகச் செலவாகாத வழி இருந்தால் சொல்லுங்கள்” என்றார் தலைவர்.
யாருக்கும் எந்த யோசனையும் வரவில்லை. தேநீர் கொண்டு வந்த பாலு, “சார், நான் ஒரு யோசனை சொல்லலாமா?” என்று கேட்டார்.
சிலர் சிரித்தார்கள். சிலர் எரிச்சல் அடைந்தார்கள்.
கூட்டத்தின் தலைவர் மட்டும் யோசனையைச் சொல்லச் சொன்னார்.
“சார், நான் சொல்வது தற்காலிகப் பிரச்சினைதான். லிஃப்டுக்குள் இருக்கும்போது எல்லோரின் கவனமும் லிஃப்ட்டிலேயே இருக்கும். அதான் கொஞ்சம் மெதுவாகப் போனாலும் ரொம்ப மெதுவா போகிற மாதிரி தெரியுது. அவங்க கவனத்தைத் திசைதிருப்புவதுதான் முக்கியம். லிஃப்டில் மூன்று பக்கங்களிலும் கண்ணாடியைப் பொருத்திவிடலாம். லிஃப்ட்டுக்குள் நுழைந்த உடன் எல்லோரும் தங்கள் உருவத்தைப் பார்த்து ரசிப்பார்கள். தலைமுடியைச் சரிசெய்வார்கள். கவனம் முழுவதும் கண்ணாடி மீது இருப்பதால், மெதுவாகச் செல்வதை அவர்கள் அறியமாட்டார்கள். ஏதோ எனக்குத் தெரிஞ்ச யோசனை சார்” என்று பவ்யமாகச் சொன்னார் பாலு.
“அட! இது நல்ல யோசனையாக இருக்கிறதே...” என்று பாலுவைப் பாராட்டினார் தலைவர்.
மறுநாள் பாலு சொன்னதுபோல் முகம் பார்க்கும் கண்ணாடியைப் பொருத்தினார்கள். இனிய இசையைத் தவழவிட்டார்கள். அன்று யாருமே என்னைக் குறை சொல்லவே இல்லை. மகிழ்ச்சியாக இருந்தனர்.
பாலுவை எல்லோரும் பாராட்டியதைப் பார்த்து எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. திறமையும் அறிவும் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டிருப்பார்கள் அல்லவா?
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago