“அதோ பாருங்கள் கேஏஎம்ஏஆர்ஏஜெ...” - ஆயிஷா. இரா. நடராசன்

By செய்திப்பிரிவு

நான் பிறந்தது வளர்ந்தது திருச்சியாக இருந்தாலும் பல ஊர்களில் படித்தேன். என் அப்பா பஞ்சாயத்து யூனியன் அதிகாரியாகப் பணிபுரிந்ததால் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வேறு வேறு பஞ்சாயத்துகளுக்கு மாற்றப்பட்டு வந்தார். தான் மாற்றப்பட்ட பஞ்சாயத்துகளுக்குத் தன் குடும்பத்தையும் மாற்றிக்கொண்டு போனார். எனவே என் குழந்தைப் பருவத்தில் சாகசங்களுக்குக் குறைவே இல்லை.

ஆண்டிமடத்தில் ஐந்தாம் வகுப்பு படித்தபோதுதான் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு அறிமுகம் ஆனது. பஞ்சாயத்துகள்தான் அப்போது ஆரம்பப் பள்ளிகளை நடத்தின. என் அப்பா எந்த ஊர் என்றாலும் அங்கே பஞ்சாயத்துப் பள்ளியில் எங்களைச் சேர்ப்பார். ‘எங்களை’ என்றால் நான், தம்பி, தங்கை. என் அம்மாதான் வீட்டில் எங்களுக்கு ஆசிரியர். ஒரு தகர மூடியைக் கரும்பலகை ஆக்கி, சிலேட்டுக் குச்சியில் எழுதிப் படிக்க வைப்பார். ஹு இஸ் த சீஃப் மினிஸ்டர் ஆஃப் தமிழ்நாடு? (Who is the Chief Minister of TamilNadu) என்று ஆங்கிலப் பாடத்தில் வந்தது. கேஏஎம்ஏஆர்ஏஜே (KAMARAJ) என்று எழுதத் தெரிந்தால் மீதி ‘இஸ் த சீஃப் மினிஸ்டர் ஆஃப் தமிழ்நாடு’ என்று பார்த்தே எழுதிவிடலாம். தேர்வில் முதல் கேள்வியே அதுதான். விடைத்தாள் வாங்கியவுடன் என் பெயரை எழுதுவதற்கு முன் கேஏஎம்ஏஆர்ஏஜே என்று எழுதினேன்!

நாங்கள் சென்னையில் அப்பாவுக்குத் தெரிந்த சக அதிகாரி ஒருவரின் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்டோம். அந்தத் திருமணத்துக்கு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் வந்தார். எந்த நிகழ்வுக்கு வந்தாலும் காமராஜர் அந்த அரங்கத்தில் சுற்றி விளையாடும் சிறார்களை அழைப்பார். நான் தொலைவில் இருந்த என் அம்மாவை நோக்கிச் சத்தமாக, “அம்மா, கேஏஎம்ஏஆர்ஏஜே... இதோ இருக்காரு பாருங்க” என்றேன். பலரும் பதறிவிட்டனர்.

“அடிடா…. செக்கே …” என்ற காமராஜர், அருகில் அழைத்தார். அவர் உயரத்துக்கும் ஆஜானுபாகுவான உடல்வாகுக்கும் நான் அவரின் முட்டிக்குக்கூட வரவில்லை. “எல்லாரும் பள்ளிக்கூடம் போறீங்களாப்பா? மதியம் சாப்பாடு போடுறாங்களா?” என்றார். நாங்கள் பள்ளியிலேயே உணவு அருந்துவதை ஒரு சாகசம் போல விவரித்தோம். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் போதெல்லாம் அவர் நினைவு வந்துவிடும்.

ஆறாம் வகுப்புக்கு உறையூர் பள்ளிக்கு வந்துவிட்டேன். அந்த நாட்களில் நான் நண்பர்களோடு நாடகங்களில் நடிக்க ஆரம்பித்திருந்தேன். பெரியசாமி ஆசிரியர், கணிதமும் அறிவியலும் எடுப்பார். பள்ளியில் இலக்கிய மன்றம் அறிமுகமாகி இருந்தது. தமிழில் நாடகங்களை எழுதி எங்களை மேடையேற்றுவார் பெரியசாமி சார்.

ஆண்டுவிழா. பெரிய அண்ணா, அக்காக்களோடு புத்த பிட்சுவாக நடிக்க நான் தேர்வாகி இருந்தேன். ஆனால், நாடகம் போட செலவாகுமே...

ஒரு நண்பன் கொடுத்த யோசனை, வீடு வீடாகச் சென்று வசூல் செய்வது. அதுவும் குறவர் வேடத்தில். ஆசிரியருக்கே தெரியாமல் குறவன் வேடம் போட ஒருவனையும் குறத்தி வேடம் போட என்னையும் தேர்வு செய்தார்கள்.

விடுமுறையில் வீடுவீடாக நண்பர்களோடு சென்று, ‘டமுக்கடிப்பான் டியாலோ… டமுக்கடிப்பான் டியாலோ’ என நடனம் ஆடினேன். ஓரளவுக்கு வசூலானது. ஆனால், அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன். பெரியசாமி சாரிடம் அப்பா வசமாக மாட்டிவிட்டார். பிறகும் பள்ளியில் பெருஞ்சேரல் இரும்பொறையாக, பாரதியாராக, ராஜராஜ சோழனாக நடித்து இருக்கிறேன் என்றாலும் அந்தக் குறத்தி வேடம் கட்டியதே நினைவில் தங்கிவிட்டது.

கோடை விடுமுறை. பம்பரம், கிட்டிப்புள் ஆடுவோம். கிணற்றில் கும்மாங் குளியல் என்று போடுவோம். என் தாத்தா (அப்பாவின் தந்தை) ஊரிலிருந்து வந்திருந்தார். சிறார்களை உட்காரவைத்து கதைகளைச் சொல்வார். பெரும்பாலும் இளவரசிகள் கடத்தப்படுவார்கள். பெரிய பூதங்கள் தாம் கடத்தும். பலநாட்டு இளவரசர்கள் முயற்சி செய்து தோற்பார்கள். அரண்மனைத் தோட்டக்காரர் மகன் அல்லது துணி வெளுப்பவரின் தம்பி என சாதராணமானவர்கள் மிகுந்த துணிச்சலும் விவேகமும் பெற்று ஏழு கடலைத் தாண்டி, ஏழுமலைகளைக் கடந்து, இளவரசியை மீட்டு, திருமணம் செய்யும் கதைகள்.
ஒருமுறை பாதிக் கதையில் ஏதோ அவசர வேலை என்று தாத்தா ஊருக்குக் கிளம்பிவிட்டார். மீதிக் கதையை நானே இட்டுக்கட்டி சொல்லி முடித்தேன். அதிலிருந்து கதை சொல்வதும் எழுதுவதும் ஒட்டிக்கொண்டது.

நான் எட்டாம் வகுப்பு படித்தபோது பரமேஸ்வரி என்று ஒரு தமிழாசிரியர் இருந்தார். பள்ளி நூலகத்துக்கும் அவர்தான் பொறுப்பு. வீட்டில் அப்பா எங்களுக்கு எல்லா மாத, வார இதழ்களும் வாங்கிப் போடுவார். அம்புலிமாமா, கோகுலம், அணில், மஞ்சரி எல்லாமே வரும். அவற்றைப் பள்ளிக்கும் வரவைப்பார் பரமேஸ்வரி டீச்சர். மாலையில் கொஞ்சநேரம் நூலகத்தில் தன் அபிமான மாணவர்களைக் கூப்பிட்டு, புத்தகங்களைத் தருவார். அவர் அபிமானத்தைப் பெற போட்டி நடக்கும். அழ. வள்ளியப்பா முதல் மு.வ. வரை, ஆலிவர் ட்விஸ்ட் முதல் கிட்னாப்டு வரை தமிழ், ஆங்கிலம் என்று பலப் புத்தகங்களை வாசித்து நான் அபிமான பட்டியலில் முதலிடம் பிடித்தேன்!

ஒன்பதாம் வகுப்பு கரூர் பரமத்தி உயர்நிலைப் பள்ளி. கொடிக்கம்பத்திற்கு அருகில் இந்திய வரைபடம் செதுக்கப்பட்டு, கோலிக்குண்டுகளைப் பதித்து, மாநிலத் தலைநகரங்களைக் குறித்திருப்பார்கள். இதை உருவாக்கியவர் எங்கள் தலைமை ஆசிரியர் காதர் மொகிதீன்.

ஒரு நாள் காலை அந்தக் கால கார் ஒன்று உள்ளே நுழைந்தது. அதிலிருந்து ஒருவர் இறங்கி தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்றார். கூடவே ஒரு வெளிநாட்டவர் இருந்தார். தலைமை ஆசிரியர் அறையில் இருந்த மின்விசிறியைக் கழற்றி, காரில் இருந்த வைப்பர் (மழை நீர் துடைப்பான்) கருவியை ஓடவைத்தார். இடைவேளை என்பதால் நாங்கள் வேடிக்கை பார்த்தோம். சுப்பிரமணி சார், அவர் தான் ஜி.டி. நாயுடு என்றார்.

இருபாலர் படித்த பள்ளி அது. எங்கள் வகுப்பில் லோகாம்பாள் என்னும் மாணவி இருந்தார். நன்றாகப் படிப்பார். அவருக்கு அப்பா கிடையாது. நிலபுலன்கள் உண்டு. லோகாம்பாள் திடீரென்று பேசுபொருளாக ஆனதற்கு முக்கியக் காரணம் அவர் பள்ளியைவிட்டு நிற்கப்போவதுதான்.

வீட்டில் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்துவிட்டார்கள். எல்லோருக்கும் வருத்தம். நண்பர்களிடம் பேசினேன். இந்தத் திருமணத்தில் அந்த மாணவிக்கு விருப்பமில்லை. தடுத்து நிறுத்துமாறு ஒரு மனு எழுதினேன். வகுப்பில் எல்லா மாணவர்களிடமும் கையெழுத்து வாங்கி, தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தோம். அவர் முதலில் எரிச்சலடைந்தாலும் அதிகாரிகள், பெற்றோரிடம் பேசி கல்யாணத்தை ஒத்திவைத்தார். பள்ளிக்குத் திரும்பிய லோகாம்பாள் அழுதபடி நன்றி கூறியதை மறக்கவே முடியாது.

(ஆயிஷா இரா. நடராசன், கல்வியாளர், எழுத்தாளர்)

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE