மதுமிதா
தென்காசியில் தாய்வழிப் பாட்டி வீட்டில்தான் எட்டாம் வகுப்பு வரை வளர்ந்தேன். ராமசாமிராஜா தாத்தா, காளியம்மாள் பாட்டிக்கு ஏழு குழந்தைகள். அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக வளர்ந்தேன். இரவு தூங்கும் வரை கலகலப்புக்கும் சிரிப்புக்கும் பஞ்சமிருக்காது. அம்மா அருகில் இல்லாத குறை தோன்றாத அளவுக்கு பத்மாக்கா, ராதாக்கா இருவரும் என்னைப் பார்த்துக்கொண்டார்கள்.
» விண்வெளியில் எப்படி நடக்கிறார்கள்?
» என்னைச் சிந்திக்கத் தூண்டிய இரு சம்பவங்கள்! - த.வி. வெங்கடேஸ்வரன்
ஒரு நாள் வகுப்பறையில் இருந்த எங்களை, மைதானத்துக்கு அழைத்தார்கள். சர்க்கஸ் காட்டப்பட்டது. அதில் ஒரு சிறுமி, நாற்காலியில் ஏறி நின்று, பின்புறம் வில்லாக வளைந்து, இரு கைகளாலும் நாற்காலியைத் தொட்டாள். இது என்னை மிகவும் கவர்ந்தது.
பள்ளிக்கு அரை மணிநேரம் முன்னதாக வந்து நான், ரமேஷாள், ஜமீலா மூவரும் பின்புறம் வில்லாக வளைவதற்குப் பயிற்சி எடுத்தோம். பதினைந்து நாட்களில் வளைந்து தரையைத் தொட்டவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
நாகராஜன் மாமா வீட்டிலிருந்தால் எல்லோரும் சிரித்துக்கொண்டே இருப்போம். அவ்வளவு நகைச்சுவையாகப் பேசுவார். வட்டமாக அமர்ந்து, இரு குழுக்களாகப் பிரிந்து இரவில் விளையாடுவோம். திரைப்படத்தின் பெயரை நடித்துக்காட்ட வேண்டும். அதைப் பார்த்துப் படத்தின் பெயரைக் கண்டுபிடிப்பதுதான் விளையாட்டு. ஜாலியாக இருக்கும்.
லட்டு என்று ஒருவர் சொன்னால், அடுத்தவர் லட்டு, பூந்தி என்று சொல்ல வேண்டும். அடுத்தவர் லட்டு, பூந்தி, ஜிலேபி என்று சொல்ல வேண்டும். இது ஒரு விளையாட்டு. ஒருவர் சொல்வதையும் சேர்த்து அடுத்தவர் புதிதாகச் சொல்ல வேண்டும்.
பதினைந்து முறைக்குப் பிறகு சொல்லும் வரிசை மறந்துவிடும். தவறாகச் சொல்பவர் வெளியேறிவிட வேண்டும். லட்டு லட்டு, லட்டு பூந்தி என தட்டிக்கொண்டே விளையாட வேண்டும். இப்படி இரவு 2 மணிக்கு மேல் விளையாடிக் களைத்துவிட்டு ஒவ்வொருவராக உறங்கச் செல்வோம்.
பெற்றோருடன் ராஜபாளையத்தில் இருந்தபோது, இரவு நேரத்தில் ‘ஜல்ஜல்’ என்று ஓசை கேட்கும். மறுநாள் பாட்டியிடம் காரணம் கேட்டால், ‘ராக்காசி இரவில் வண்டி ஓட்டிட்டுப் போறா, அந்த நேரம் வெளியே பார்க்காதே’ என்பார். உடனே அப்பா, ‘அம்மா, குழந்தைகளைப் பயமுறுத்தாதே... அது வௌவால், பழங்களைச் சாப்பிடும் சத்தம்’ என்பார்.
புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை நாங்கள் அறியாதபடிக்கே விளையாட்டைப் போலக் கற்றுக்கொடுத்தார் அப்பா. பள்ளிப் பாடங்களைப் படித்து முடித்ததும் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்து, இந்த பாராவை எத்தனை நிமிடங்களுக்குள் வாசிக்கிறீர்கள் பார்க்கலாம் என்று எனக்கும் தங்கைக்கும் போட்டி வைப்பார். இதனால் நாங்கள் படிக்கும் வேகம் அதிகரித்தது.
ஒரு முறை சந்திர கிரகணம் அன்று மாடியில் உபகரணங்களைக் கொடுத்து, சந்திரனைப் பார்க்கச் சொன்னார், அப்பா. பார்த்ததை ஒரு காகிதத்தில் வரையச் சொன்னார். அது ஓர் அற்புதமான அனுபவமாக இருந்தது!
தென்காசி பாட்டி வீட்டுத் தோட்டத்தில் நான்கு புறமும் தென்னை மரங்கள். தோட்டத்தின் நட்டநடுநாயகமாக இருந்தது ஒரு மனோரஞ்சித மரம். அதில்தான் தூக்கணாங்குருவி கூடு கட்டியிருந்தது. கூட்டில் குடிவந்து முட்டை இட்டுக் குஞ்சு பொரித்துப் போகும் வரை தினமும் பார்ப்பதுதான் முக்கியப் பொழுதுபோக்காக இருந்தது.
பாட்டி சொல்படி மாலையில் கனகாம்பரம் பறித்துக் கொடுத்தால், இரண்டு சாக்லேட்களும் ஒரு மனோரஞ்சிதப் பூவும் கிடைக்கும். மனோரஞ்சிதப்பூ வேண்டும் என்பதற்காகவே கனகாம்பரப் பூக்களைப் பறித்துக் கொடுப்போம்.
நானும் என் மாமா மகள் சுஜாவும் சாக்லேட்களைத் தின்றபடி, அன்றைக்கு வந்த நாளிதழில் தமிழில் இருக்கும் வார்த்தைகளை ஆங்கிலத்துக்கு மாற்றி வாசிப்போம்.
சேமிப்பைக் கற்றுக் கொடுப்பதற்காக ஆளுக்கு ஓர் உண்டியல் கொடுத்து, பணத்தைச் சேமிக்கச் சொன்னார்கள். நாங்கள் போட்டிபோட்டுக் கொண்டு சில்லறை, ரூபாய் நோட்டுகளைச் சேமிக்க ஆரம்பித்தோம். உண்டியலில் இருக்கும் பணத்தை ஹேர்பின்னால் எடுத்து எண்ணிப் பார்த்துவிட்டு, மறுபடியும் உண்டியலில் போட்டுவிடுவோம். இது சுவாரசியமாக இருக்கும்.
‘சந்திரலேகா’ படம் பார்த்த பிறகு, நாங்கள் அனைவரும் ரயில் போல் வரிசையாக நின்றுகொள்வோம். முன்னால் நின்றுகொண்டு நான் ‘ஆரோ’ என்று சொன்னதும் வண்டி கிளம்பும். ‘டொக்கடி டொக்கடி டொக்கடி’ என்று பலத்த குரல் எழுப்பிக்கொண்டு ஓடுவோம். ரஞ்சன் அந்தத் திரைப்படத்தில் குதிரையில் ஏறி, ஆரோ என்றதும் அவரின் வீரர்கள் குதிரைகளில் அவரைப் பின்தொடர்வார்கள். அந்தக் குதிரைப் பயணத்தைதான் நாங்கள் இப்படி நடத்திக்கொண்டிருந்தோம்!
இரும்புக்கை மாயாவி, மந்திரவாதி மாண்ட்ரெக், முகமூடி எனப் பல காமிக்ஸ் புத்தகங்களை வாங்கித் தருவார் அப்பா. நூலகத்துக்கும் அழைத்துச் செல்வார். புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் அப்போதுதான் அதிகரித்தது.
பள்ளி மாறுவேடப் போட்டியில் என்னைக் கலந்துகொள்ளச் சொன்னார்கள். முடியாது என்றேன். எனக்கு தாத்தாவின் நீளமான வெள்ளைக் கதர் சட்டையை மணலில் புரட்டி எடுத்துப் போட்டுவிட்டனர். கையில் மனோரஞ்சித மரத்தின் கிளைகளைக் கொடுத்து, தோளில் வைத்துக்கொள்ளச் சொன்னார்கள். முகத்தில் கரியைப் பூசிவிட்டார்கள். நீதிபதி முன்னால் குதி என்றார்கள். அப்படியே செய்தேன். முதல் பரிசு கிடைத்தது! என்னால் நம்பவே முடியவில்லை.
பள்ளியில் ஒரு புத்தகக் காட்சி நடந்தது. எங்களுக்கு ஏக மகிழ்ச்சி. ரஷ்ய வெளியீடு புத்தகம் வாங்க விரும்பி, வீட்டில் பணம் கேட்டதும் அப்பா வரும்போது வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டனர். அப்பா அந்த வாரம் வரவில்லை. மறுநாள் புத்தகங்களை எடுத்துச் சென்றுவிடுவார்கள். அதனால், நான் பணம் சேமித்த உண்டியலை யாரிடமும் அனுமதி கேட்காமல் உடைத்து, புத்தகங்களை வாங்கினேன். நானே பணம் கொடுத்து, புத்தகம் வாங்கியதும் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுவிட்டதைப் போல் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
வீட்டுக்கு வந்தால் உண்டியலின் உடைந்த பாகங்கள் அப்படியே கிடந்தன. அவற்றை எடுத்து, தோட்டத்தில் இருந்த உரக்குழியில் போட்டுவிட்டேன். அதை யார் பார்த்தது என்று இன்றுவரை தெரியவில்லை. ஆனால், என் உண்டியல் காணவில்லை என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
மறுநாள் பள்ளியில் தலைமை ஆசிரியர் என்னை அழைத்தார். அங்கே சுப்பிரமணிய மாமா பேசிக்கொண்டிருந்தார்.
தலைமை ஆசிரியர், “இந்தப் புத்தகங்களை நீ தானேம்மா வாங்கினாய்?” என்றார்.
ஆமாம் என்று தலையசைத்தேன்.
“யார் பணம் கொடுத்தது?”
“என் உண்டியலில் நான் சேமித்து வைத்த பணம். அதை வைத்து நானே வாங்கினேன்” என்றேன்.
வீட்டில் யாரும் எதுவும் கேட்கவில்லை. குழந்தை புத்தகம் வாங்கும் ஆர்வத்தில் சொல்லாமல் உண்டியலை உடைத்துவிட்டாள் என்று என்னைப் புரிந்துகொண்டார்கள்.
மறுநாள் அப்பா வந்தார். “ஏன் பாட்டியிடம் சொல்லாமல் உண்டியலிலிருந்து பணம் எடுத்தாய்?” என்றார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. “பெரியவர்களுக்குத் தெரியாமல் பணம் எடுப்பது தவறு. இனி இதுபோல் செய்யக் கூடாது” என்று சொல்லி ‘சத்திய சோதனை’ புத்தகத்தைக் கையில் கொடுத்தார். அதற்குப் பிறகு யாரிடமும் சொல்லாமல் எதுவும் நான் செய்ததேயில்லை.
(மதுமிதா, கவிஞர், எழுத்தாளர்)
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago