சின்ன கலைவாணர் விவேக் சாலைக்கு ஒரு விசிட்!

By செய்திப்பிரிவு

எத்தனையோ வெற்றிகரமான நகைச்சுவை நடிகர்களைக் கண்டிருக்கிறது தமிழ் சினிமா. அதில் மின்னல்போல் அல்லாமல் தனிப்பெரும் நட்சத்திரமாக ஒளி வீசியவர் சின்ன கலைவாணர் விவேக். கதையுடன் இணைந்த நகைச்சுவையைத் தாண்டி, நகைச்சுவை நட்சத்திரங்களின் செல்வாக்கு மிகுந்தபோது, அவர்களுக்கென்று நகைச்சுவைக் காட்சிகளைத் தனியாகப் படங்களில் இடம்பெறச் செய்தபோது, தனிப்பெரும் நகைச்சுவை ராஜபாட்டையில் நடந்தவர் விவேக்!

விவேக்கின் நகைச்சுவை பாணி என்பது தனித்துவமாகவும் அதே நேரத்தில் சிந்திக்கும் கருத்துகளையும் உள்ளடக்கியதாக இருந்ததால், ரசிகர்கள் அவரை ‘சின்ன கலைவாணர்’ என உச்சிமுகர்ந்து கொண்டாடினார்கள்.

கோவில்பட்டியிலிருந்து கிளம்பிய இந்த இனிப்பு நகைச்சுவை மிட்டாய், அப்துல் கலாமின் உயரிய கொள்கைகளை நேசித்தார். அவரது அபிமானியாகவும் ஆனார். ‘கிரீன் கலாம்’ என்ற பெயரில் கலாம் காட்டிய வழியில் மரங்களை நடத் தொடங்கினார். நடிகர்களில் பலர், தங்களுடைய ரசிகர்களை அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்த முனையும் சூழ்நிலைக்கு மத்தியில் அவர்களை கலாமின் சிந்தனைக்குப் பயன்படுத்த நினைத்த விவேக், தனது ரசிகர்களை மரம் நடும் பணியில் இணைத்தார். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களை இப்பணியில் ஒருங்கிணைத்தார். ஒரு கோடி மரங்களைத் தமிழகம் முழுவதும் நட்டு வளர்த்து, அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று கனவு கண்ட விவேக், இதுவரை லட்சக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார்.

திரையுலகில் கதையின் நாயகனாகவும் நகைச்சுவை குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்தபடி, தனது கனவை நோக்கி முன்னேறிச் சென்றுகொண்டிருந்த விவேக், கடந்த 2021 ஏப்ரல் 17 அன்று திடீரெனக் காலமானார்.

விவேக் குடும்பத்தினர் அமைத்துள்ள நீர் - மோர் பந்தல்

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பத்மாவதி தெருவில் வசித்து வந்தார் விவேக். அவரது மறைவுக்குப் பின், அவருடைய நினைவைப் போற்றும் வகையில் சின்ன கலைவாணர் விவேக் சாலை என அத்தெருவின் பெயரை மாற்ற வேண்டும் என அவரது மனைவி அருட்செல்வியும் குடும்பத்தினரும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதைத் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள நடிகரும் திமுக பிரமுகருமான பூச்சி முருகன் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, அடுத்த சில தினங்களில், பத்மாவதி தெருவுக்கு ‘சின்ன கலைவாணார் விவேக் சாலை’ என்று மாற்றும்படி சென்னைப் பெருநகர மாநகராட்சி ஆணையருக்கு நேரடி உத்தரவு பிறப்பித்தார். விவேக்கின் முதலாண்டு நினைவு தினத்தையொட்டி, பத்மாவதி தெருவின் பெயர் அதிகாரபூர்வமாக மாநகராட்சியால் ‘சின்ன கலைவாணார் விவேக் சாலை’ என மாற்றி அமைக்கப்பட்டது.


இதுபற்றி விவேக் வசித்து வந்த தெருவாசிகள் சிலரிடம் கேட்டபோது “ஒரு நல்ல நடிகர் என்பதையும் தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர். அவருடைய பெயரை இந்தத் தெருவுக்குச் சூட்டியது வரவேற்கத்தக்க ஒன்று” என ஒன்றுபோல் நம்மிடம் கூறினார்கள்.

“அவரின் நகைச்சுவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதேபோல் அவரது கொள்கைளுக்கும் நான் ரசிகன். காரணம், திரைப் படத்துறையைத் தாண்டி நிஜ வாழ்விலும் அவர் நல்ல மனிதர். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பெயரால் அவர் செய்து வந்த பசுமைப் பணி, தமிழ்நாட்டுக்கே முன்னுதாரணம் ஆகும். விவேக் திரையில் தோன்றி சிரிக்கவும் வைத்து நல்ல கருத்துகளைச் சொல்வது போன்றே, நிஜத்திலும் ஒரு எளிமையான, நகைச்சுவை உணர்வு குறையாத மனிதர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். தெரிந்தவர், தெரியாதவர் என்று யாரைப் பார்த்தாலும் புன்னகை செய்வார். அதுதான் அவருக்கான சிறப்பு” என்று கூறினார் அத்தெருவில் வசித்துவரும் மகேஷ் குமார்.

எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்!

“தெருவில் அவரை அவ்வளவாகப் பார்க்க முடியாது. எப்போதாவது ‘வாக்கிங்’ வருவார். எதிரே பார்த்தால் சிரித்த முகத்தோடு ‘ஸ்மைல்’ செய்வார். எப்போதாவது எனது கடைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வார். விவேக் எப்பொழுதும் சினிமா, சமுக சேவையிலிருந்த ஒரு பிரபலம். அப்படிப்பட்டவர் தெருவைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா? இந்தத் தெருவுக்குள் நுழையும்போதே ஒரு மரத்தைப் பார்த்திருப்பீர்கள். அது அவர் நட்டதுதான்” என்றார் அத்தெருவில் மளிகைக் கடை வைத்திருக்கும் ஒரு அண்ணாச்சி.

சேவை தொடர்கிறது

அத்தெரு வழியே சென்று கொண்டிருந்த இன்னும் சிலரிடம் விவேக் பற்றி கேட்டபோது: “வருடம் தோறும் வெயில் காலத்துக்காக விவேக் சார் தண்ணீர்ப் பந்தல் அமைப்பார். கடந்த இரண்டு வருடமாக கரோனா பெருந்தொற்றுக் காரணத்தால் அதை அவர் அமைக்கவில்லை. இந்த ஆண்டு கணவரின் பணியை அவரது மனைவி தொடர்ந்துள்ளார்” என்றனர்.

தமிழக அரசால் ஐந்து முறை சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதுபெற்ற சின்ன கலைவாணர் விவேக்கின் புகழைத் தமிழ்நாடு மறக்கப்போவதில்லை. சின்ன கலைவாணர் விவேக் சாலை அவரது நினைவுகளின் அடையாளங்களில் ஒன்றாக எப்போதும் இருக்கும்.

கட்டுரை - படங்கள்:

ஹரிராம்பிரசாத் - ஊடக மாணவர்


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE