புரட்சிகர மெய்யியலாளர் ஜேகே

By செய்திப்பிரிவு

உலகப் பிரசித்திபெற்ற மெய்யியலாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஒரு முன்னுதாரணமில்லாத ஞானி. இதற்கு முன் நிறுவப்பட்ட மதங்கள், கோட்பாடுகள் என அனைத்தையும் நிராகரித்தவர் அவர். குரு - சிஷ்ய முறையே அடிமைத்தனத்துக்கான ஒரு விஷயம்தான், தான் சொல்வதற்கும் தலையாட்டும் சீடர்கள் தனக்குத் தேவையில்லை போன்ற அதிரடியான கருத்துகளைச் சொன்னவர் கிருஷ்ணமூர்த்தி.

ஜேகே என அழைக்கப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மதனப்பள்ளி என்ற ஊரில் 1895-ல் மே 12-ல் பிறந்தவர். இவரது பெற்றோர் சென்னையைச் சர்வதேசத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த பிரம்மஞான சபையைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர். இந்தச் சபை நியூயார்க்கில் தொடங்கப்பட்டது. கிருஷ்ணமூர்த்தியின் தாய், இறந்த பிறகு தந்தை குழந்தைகளுடன் பிரம்மஞான சபையில் அலுவலக எழுத்தராகப் பணிக்குச் சேர்கிறார். அந்த நேரம் பிரம்மஞான சபையில் பொறுப்பில் இருந்த சார்லஸ் வெப்ஸ்டர் லீட்பீட்டர்தான் முதலில் சிறுவனாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை சபை வளாகத்தில் உள்ள கடற்கரையில் வைத்துப் பார்க்கிறார். அவரிடம் இருந்த ஒளியைக் கண்டுபிடித்துள்ளார். பிறகு பிரம்மஞான சபையின் தலைமைப் பொறுப்பில் இருந்த அன்னிபெசண்ட் கிருஷ்ணமூர்த்தியைத் தத்து எடுத்து வளர்த்தார். லண்டனுக்கு அழைத்துச் சென்று படிப்பித்தார். ஆர்டர் ஆஃப் த ஸ்டார் இன் தி ஈஸ்ட் என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக கிருஷ்ணமூர்த்தியை நியமித்தார் அன்னிபெசண்ட்.

தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே பெரும் சொத்துகள் உடைய அமைப்பானது அது. உலகின் பல நாடுகளில் கிளைகளும் பல லட்சம் சீடர்களும் உள்ள அமைப்பாக விரிவடைந்தது. ஆனால், கிருஷ்ணமூர்த்திக்கு இது சரியெனப் படவில்லை. முழுச் சுதந்திரம் என்பதை நோக்கித்தான் நாம் நகர வேண்டும் என நினைத்தார். அதனால் ஒரு நீண்ட உரையுடன் அதைக் கலைத்தார். சொத்துகள் தந்தவர்களுக்கே திருப்பி அளிக்கப்பட்டன. ‘நீதான் உனக்கு குரு’ வெளியில் ஒரு குரு தேவையில்லை எனச் சொன்னார். அவரது கருத்துக்கள் உலகம் முழுமைக்கும் பிரபலமானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE