மே 5: நெல்லி ப்ளை பிறந்தநாள்: உலகைச் சுற்றி வந்த முதல் பெண்!

By எஸ்.சுஜாதா

* 80 நாட்களில் உலகப் பயணம் (Around the world in 80 days) என்ற சாகச நாவலை பிரெஞ்சு எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்ன் 1873-ல் வெளியிட்டார். அந்த நாவலின் நாயகன் பிலியாஸ் ஃபோக் போல் தானும் நிஜத்தில் செய்து பார்த்துவிட முடிவெடுத்தார் 25 வயதேயான நெல்லி ப்ளை. அப்போது விமானப் போக்குவரத்து இல்லை.


* உலகின் முதல் புலனாய்வுப் பத்திரிகையாளர் என்ற சிறப்பைப் பெற்றிருந்த நெல்லி ப்ளைக்கு ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. 1888-ல் தான் பணியாற்றிய ‘நியூயார்க் வேர்ல்ட்’ பத்திரிகையில், 80 நாட்களுக்குள் உலகத்தைச் சுற்றி வந்து, அந்த அனுபவத்தை எழுதுகிறேன் என்று கேட்டார். அவர் பெண் என்பதாலும் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர் என்பதாலும் நெல்லி ப்ளையின் கோரிக்கையை நிராகரித்தார் அதன் ஆசிரியர்.


* 1889-ல் பத்திரிகையின் விற்பனையைக் கருத்தில்கொண்டு, உலகப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தைக் கையிலெடுத்தது ‘நியூயார்க் வேர்ல்ட்’. அப்போதும் ஒரு பெண்ணை அனுப்புவதில் பலருக்கும் விருப்பம் இல்லை. “ஆணால் முடியும் என்றால் நிச்சயம் பெண்ணாலும் முடியும். வேறு பத்திரிகையிலிருந்து ஒரு ஆணை அனுப்புங்கள். நான் அவரைவிட ஒருநாள் முன்பாக வந்து காட்டுகிறேன்” என்று சவால்விட்டார் நெல்லி. இறுதியில் அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.


* மிகச் சிறிய பை ஒன்றில் ஃப்ளாஸ்க், ஒரு கோப்பை, தலையில் கட்டும் துணி, உள்ளாடைகள், சில கைக்குட்டைகள், ஒரு ஜோடி செருப்பு, ஊசி, நூல், பேனா, நோட்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டார்.


* 1889 நவம்பர் 24 அன்று அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலகப் பயணம் ஆரம்பித்தது. மக்கள் ஆரவாரத்துடன் வழியனுப்பி வைத்தனர். 75 நாட்களில் பயணத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார் நெல்லி ப்ளை.


* முதல் முறை கப்பலில் செல்வதால் நெல்லிக்குக் குமட்டலும் வாந்தியும் அதிகமாக இருந்தது.


* இந்தப் பயணத்துக்குக் காரணமான எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்னை பிரான்ஸில் சந்தித்து, வாழ்த்தைப் பெற்றுக்கொண்டார் நெல்லி ப்ளை.
* கப்பல், ரயில், கார் போன்று பல்வேறு வாகனங்களில் பயணத்தை மேற்கொண்டார்.


* ‘காஸ்மோபோலிடன்’ என்ற பத்திரிகை எலிசபெத் பிஸ்லாண்ட் என்ற பெண் எழுத்தாளரை, நெல்லிக்குப் போட்டியாக எதிர்த் திசையில் உலகத்தைச் சுற்றிவர அனுப்பியிருந்தது.


* தனக்குப் போட்டியாக எலிசபெத் பிஸ்லாண்ட் கிளம்பியிருப்பது நெல்லிக்குத் தெரியாது. ஹாங்காங்கில் அவர் இறங்கியபோது, “நீங்கள்தான் நெல்லி ப்ளையா? நீங்கள் போட்டியில் மிகவும் பின்தங்கிவிட்டீர்கள். உங்கள் போட்டியாளர் மூன்று நாட்களுக்கு முன்பே இங்கு வந்து, கிளம்பிவிட்டார்” என்றார் ஒருவர்.


* “நான் போட்டிக்காக வரவில்லை. யாருடனும் போட்டியில் இல்லை. நான் 75 நாட்களில் நிச்சயம் பயணத்தை முடித்துவிடுவேன். ஏற்கெனவே 60 நாட்களைக் கடந்துவிட்டேன்” என்று நம்பிக்கையோடு சொன்னார் நெல்லி.


* அனைத்து விஷயங்களையும் குறிப்பெடுத்துக்கொண்டார். ஆங்காங்கே தனது அனுபவங்களை எழுதி, பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார். ஒவ்வொரு தகவலும் பொதுமக்களின் எதிர்பார்ப்பைக் கூட்டும் விதத்தில் செய்தியாக வெளியிடப்பட்டது. மக்கள் நெல்லி வரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.

நெல்லி ப்ளை புத்தகத்தில்...


* நெல்லி தன் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவில் கால்பதித்தார். மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். 1890 ஜனவரி 25 அன்று இறங்கிய நெல்லி, 72 நாட்கள், 6 மணி நேரத்தில் உலகத்தை வெற்றிகரமாகச் சுற்றிவந்திருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. ஜூல்ஸ் வெர்ன் கதையின் நாயகனைவிட எட்டு நாட்கள் முன்னதாக உலகத்தைச் சுற்றிவந்துவிட்டார் நெல்லி!


* நான்கு நாட்களுக்குப் பிறகு உலகப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்து சேர்ந்தார் எலிசபெத் பிஸ்லாண்ட்.


* எலிசபெத் கோச்சரன் என்ற இயற்பெயர் கொண்ட நெல்லி, 19 வயதிலேயே வித்தியாசமான பத்திரிகையாளராகத் திகழ்ந்தார்.


* பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள், விவாகரத்து சட்டத்தில் மாற்றம் போன்றவற்றை எழுதினார். மனநலக் காப்பகத்தில் 10 நாட்கள் தங்கி, புலனாய்வு செய்து அவர் எழுதிய கட்டுரை, ‘உலகின் முதல் புலனாய்வுப் பத்திரிகையாளர்’ என்ற பெயரைப் பெற்றுத்தந்தது.


* ‘72 நாட்களில் உலகப் பயணம்’ என்ற தனது புத்தகத்தால் பெரும் புகழ்பெற்றார். திருமணத்துக்குப் பிறகு வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கினார். அப்போது பால் கேன், பால் பீப்பாய்களின் வடிவமைப்பை மாற்றியமைத்து, அந்தக் கண்டுபிடிப்புக்கான காப்புரிமையும் பெற்றார்.


* முதல் உலகப் போர் நடைபெற்றபோது செர்பியாவுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையிலுள்ள போர்ப் பகுதிக்குச் சென்று எழுதிய முதல் பெண்ணும் முதல் வெளிநாட்டவரும் இவரே. 1913-ம் ஆண்டு வாக்குரிமை கேட்டு பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து இவர் எழுதிய கட்டுரை, அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.


* இன்று நெல்லி ப்ளையின் 158வது பிறந்தநாள்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE