வானவில் பெண்கள் | திறமையை ஹிஜாப்பால் மறைக்க முடியாது

By ப்ரதிமா

பாகிஸ்தானின் கராச்சியையொட்டிய லியாரி என்கிற அந்தச் சிறு கிராமம், சமூக விரோதச் செயல்களுக்குப் பெயர் போனது. காலப்போக்கில் அதுவே அந்தக் கிராமத்தின் அடையாளமாகிவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமத்து வீதிகளில் சுற்றித் திரிந்த சிறுமிக்கு, தன் கிராமத்தின் அடையாளத்தைத் தான் மாற்றப்போகிறோம் என்று தெரியாது. தான் பார்த்தவற்றையும் பேச நினைப்பவற்றையும் எழுதித் தள்ளிய சிறுமி பின்னாளில் அவற்றைப் பாடியபோது கேட்பார் யாருமில்லை. ஆனால், இன்று கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரது பாடல்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.

அடர் ஆரஞ்சு வண்ண ஹிஜாபில் கண்கள் மட்டும் தெரிய உற்சாகமாகப் பாடுகிற ‘ஈவா பி’, (முதல் பெண், சமூகத்தின் சிக்கல்களை எதிர்கொள்வதைச் சொல்வது என்பதைச் சுருக்கித் தன் பெயராக வைத்துக்கொண்டார்) பாகிஸ்தானின் மோஸ்ட் வான்டட் ராப்பர். அமெரிக்க ராப்பர் எமினம் பாடிய பாடல்கள் மூலம்தான் ஈவாவுக்கு ‘ராப்’ அறிமுகமானது. அந்தப் பாடலும் ராகமும் புதிதாக இருக்க அது குறித்து நண்பர்களிடம் கேட்டார். அதுதான் ராப் என்றும் நாமே பாடல் எழுதிப் பாட வேண்டும் என்றும் பதில் கிடைக்க, 2014-ல் முதல் ‘ராப்’ பாடலைப் பாடினார் ஈவா. தன்னைப் பற்றியும் தன் ஊரில் உள்ள பெண்கள் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறை பற்றியும் பாடுவதுதான் ஈவாவின் விருப்பம். தன் கிராமத்தில் வெகு சில பெண்களே வேலைக்குச் செல்ல, பெரும்பாலான பெண்கள் தங்கள் வீட்டு ஆண்களைச் சார்ந்தே இருப்பது குறித்தும் தன் பாடல்களில் பதிவுசெய்ய விரும்பினார்.

உருதும் பலோச்சி மொழியும் கலந்து அவர் பாட, மொழி புரியாதவர்கள்கூட அதை ரசித்தனர். சில பாடல்களை யூடியூபில் பதிவேற்ற அது அவருடைய அண்ணனின் காதுகளையும் வந்தடைந்தது. தங்கை பாடுவதில், அதுவும் ராப் இசைப்பதில் அவருக்கு விருப்பமில்லை. தங்கை இப்படிப் பாடுவதால் தன் நணபர்கள் தன்னைக் கேலி பேசுவதாகச் சண்டையிட, ஈவாவின் ‘ராப்’ ஆர்வத்துக்குத் தற்காலிமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு அவர் பாடவில்லை. ஆனால், பாட வேண்டும் என்கிற ஆர்வம் நீறுபூத்த நெருப்பாக அவரது உள்ளத்துக்குள் கனன்றுகொண்டிருந்தது.

வாழ்வை மாற்றிய அழைப்பு

2019-ல் ‘கோக் ஸ்டூடியோ’விலிருந்து வந்த அழைப்பு அந்த நெருப்பைத் தூண்டிவிட்டு சுடரச் செய்தது. இசைத் துறையில் திறமைவாய்ந்த பாகிஸ்தான் இளைஞர்களுக்குக் களம் அமைத்துத்தரும் ‘படாரி’ நிறுவனத்தின் ‘கோக் ஸ்டூடியோ’, தங்கள் ஆல்பத்தில் பாட ஈவாவுக்கு அழைப்பு விடுத்தது. எவ்வித ஒலிப்பதிவு வசதியும் இல்லாததால் வீட்டிலேயே பாடித் தன் மொபைலில் பதிவுசெய்து அனுப்பினார். அதன் பிறகு நடந்த படப்பிடிப்புக்கு வீட்டில் பொய்சொல்லிவிட்டுச் சென்றார். நண்பர்களுடன் படிக்கப்போவதாகவும் சில நேரம் தோழியின் திருமணத்துக்குச் செல்வதாகவும் சொல்வார். இருட்டுவதற்குள் வீடு திரும்ப வேண்டுமே என்பதற்காகத் தன்னுடன் பாடுகிறவர்களையும் காலையிலேயே வரச் சொல்லிவிடுவாராம். அவர்கள் தன் சூழலைப் புரிந்துகொண்டதாகச் சொல்கிறார். சில ராப்பர்களுடன் சேர்ந்து ஈவா பாடி ஜனவரியில் வெளியான ‘கானா யாரி’ என்கிற பாடலை இதுவரை ஒரு கோடிக்கு அதிகமானோர் பார்த்துள்ளனர். பாடல் ஹிட்டானதுமே ‘Gully girl’ என்று கொண்டாடப்பட்டார் ஈவா. ‘Gully boy’ பாலிவுட் ஹாலிவுட் படத்தின் நாயகனுக்கு நிகராக ஈவாவின் வெற்றியைப் புகழ்ந்தார்கள்.

வீடியோ வைரலானதும் ஈவா பாடியது அண்ணனுக்குத் தெரிந்துவிட்டது. ஈவாவின் அம்மாவுக்கு மகள் பாடுவதில் விருப்பம் என்றாலும் அவர்களது குடும்பத்தைப் பொறுத்தவரை ‘ராப்’ பாடலைப் பாடுவது தகுதிக் குறைவானது. ஆனால், ஈவா அடைந்திருக்கும் வெற்றி, ‘ராப்’ மீதான கண்ணோட்டத்தை மாற்றியிருக்கிறது. தங்கள் கிராமத்தில் கால்பந்து வீரர்களும் கலைஞர்களும் இருந்தபோதும் சமூக விரோதிகளின் கூடாரம் என்கிற அடையாளம் நிலைபெற்றுவிட்டது குறித்த வருத்தம் ஈவாவுக்கு உண்டு. தன் பாடல் அதை நிச்சயம் மாற்றும் என்றும் அவர் நம்புகிறார். ராப் பாடுவதாக இருந்தால் ஹிஜாப் அணிந்துதான் பாட வேண்டும் என்று அண்ணன் சொல்ல, ஈவா அதை ஏற்றுக்கொண்டார். “என் முகத்தை மறைக்கும் துணியால் என் திறமையை மறைக்க முடியாது” என்று சொல்கிறார் 22 வயதாகும் ஈவா. உரிமைகள் மறுக்கப்படும்போது சில நேரம் அதைப் போரடிப்பெற வேண்டும் என்கிறார். பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக, ராப் குறித்த தவறான சிந்தனைக்கு எதிராக, ஹிஜாப் அணிந்து பாடுவதற்கு எதிராக என்று பல்முனைத் தாக்குதல்களை எதிர்த்துப் பாடுகிறார் ஈவா பி.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்