கோலி எப்போது ஃபார்முக்கு வருவார்?

By ச.கோபாலகிருஷ்ணன்

உலக கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்வு இறங்குமுகத்தில் இருக்கிறது. அந்த இறங்குமுகத்தின் கால அளவு எதிர்பார்த்ததைவிட நீண்டுகொண்டே போகிறது. தற்போது நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் 2022இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதன்மை மட்டையாளராக மிக மோசமாக விளையாடிக்கொண்டிருக்கிறார் கோலி. செவ்வாய்க்கிழமை அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கியவர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கு முந்தைய இரண்டு போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கெதிராக முதல் பந்திலேயே ஆட்டமிழந்து கோல்டன் டக் அவுட்டானார்.

ஐபிஎல் ஏற்ற இறக்கங்கள்

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் வீரர்களின் பங்களிப்பில் ஏற்ற இறக்கங்கள் சகஜமானவைதான். வேறு எந்த வீரரையும்விட கோலிக்கு இது மிகவும் பொருத்தமானது. மொத்தம் 6,402 ரன்களுடன் ஐபிஎல் வரலாற்றின் அதிக ரன்களை குவித்திருக்கும் மட்டையாளர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர் கோலி. 2016 ஐபிஎல்-ல் 16 போட்டிகளில் நான்கு சதங்களுடன் 973 ரன்களைக் குவித்தார். அதன் மூலம் ஒரு ஆண்டின் ஐபிஎல் சீசனில் அதிக ரன்களைக் குவித்த மட்டையாளரானார். இந்தச் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. 2017இல் 10 போட்டிகளில் விளையாடி 308 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். 2018 ஐபிஎல்-ல் 14 போட்டிகளில் 530 ரன்களைக் குவித்தார். 2019இல் மீண்டும் ஒரு சதம் அடித்தார். 2020 சீசனில் 15 போட்டிகளில் 42.36 என்னும் சராசரியுடன் ரன்களை அடித்து பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறுவதற்குத் துணை நின்றார். 2021-லும் பெங்களூரு அணி பிளே ஆஃபுக்கு தகுதிபெற்றாலும் கோலியின் ரன் குவிப்பு சராசரி 28.92 ஆகச் சரிந்தது. 2022இல் இதுவரை பெங்களூரு அணி விளையாடியுள்ள ஒன்பது போட்டிகளில் 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் கோலி. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 41, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 48 ஆகியவை மட்டுமே அவருடைய ரசிகர்களுக்குச் சற்று ஆறுதல் அளித்துள்ளன. மற்ற ஏழு அணிகளுடனான போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். எஞ்சியிருக்கும் போட்டிகளிலாவது கோலி தன்னுடைய பழைய ஃபார்மை மீட்டெடுப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நீளும் காத்திருப்பு

ஐபிஎல் 2022இல் கோலியின் மோசமான ஆட்டம் சர்வதேசப் போட்டிகளில் அவருடைய இறங்குமுகத்தின் தொடர்ச்சியாக இருப்பதுதான் அவரின் எதிர்காலம் மட்டுமல்லாமல் இந்திய அணியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் விளைவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் களத்தில் மட்டையாளராகவும் அணித் தலைவராகவும் மிக இளம் வயதில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள கோலி 2019 நவம்பர் 22 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 70ஆம் சதத்தை அடித்தார். அதன் பிறகு அவருடைய 71ஆம் சதத்துக்கான காத்திருப்பு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீண்டுகொண்டே போகிறது.

இடைப்பட்ட காலத்தில் இந்தியாவிலும் அந்நிய நாடுகளிலும் நடந்த போட்டிகளில் சில அரை சதங்களை அடித்திருந்தாலும் அந்தப் போட்டிகளிலும் ‘அவரால் நீண்ட இன்னிங்ஸ்களை விளையாட முடியவில்லை’ என்று நினைக்கும் வகையிலேயே அவருடைய மட்டைவீச்சு அமைந்திருந்தது. குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் மட்டும் 50 ஓவர் போட்டிகளில் அவர் வழக்கத்தைவிட நிதானமாக விளையாடி 50+ ரன்களைக் குவித்துவிட்டு அதற்குப் பிறகு மிக மோசமான ஷாட் தேர்வினால் அவுட்டானதைக் காண முடிந்தது.

கோலி மட்டையுடன் களத்தில் நிற்கும்போது பெரும்பாலான போட்டிகளில் அவருடைய ஆக்ரோஷத்தை மட்டுமல்லாமல் களத்தை ஆதிக்கம் செலுத்தும் அபாரத் திறமையையும் உணர முடியும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் களத்தை ஆதிக்கம் செலுத்தும் பண்பு படிப்படியாக குறைந்துவருகிறது. பெருந்தொற்று ஊரடங்குக்குப் பிறகு இந்திய அணி விளையாடத் தொடங்கியபோது ரசிகர்களின் மனங்களில் ஆதிக்கம் செலுத்திய கேள்வி கோலி தன்னுடைய 71ஆம் சதத்தை எப்போது அடிப்பார் என்பதே. அதன் பிறகு அந்தக் கேள்வி கோலி களத்தை ஆதிக்கம் செய்யும் தன்னுடைய பழைய ஃபார்முக்கு எப்போது திரும்புவார் என்பதாக மாறியது. இப்போது கோலி சிறந்த மட்டையாளர் என்னும் நிலைக்கு மீண்டும் திரும்புவாரா என்பதாக அந்தக் கேள்வி உருமாறிவிட்டது.

இவற்றுக்கிடையில் கடந்த செப்டம்பரில் 20 ஓவர் போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்தார். அதைத் தொடர்ந்து வெளியே தெரியாத காரணங்களால் 50 ஓவர் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து அவர் விலக வேண்டியிருந்தது. ஜனவரியில் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக கோலி அறிவித்தார். கேட்பன் பதவி என்னும் சுமை இல்லாமல் மட்டைவீச்சில் கூடுதல் கவனம் செலுத்தி மேலும் சிறப்பாகப் பரிணமிப்பார் என்னும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் நிறைவேறவில்லை.

இந்திய அணியின் எதிர்காலம்

இந்த இறங்குமுகம் கோலி என்னும் தனிநபரை மட்டும் பாதிக்கப்போவதில்லை. இந்திய அணியையே பாதித்துக்கொண்டிருக்கிறது. அணியின் மூத்த வீரர்களில் ஒருவரும் தலைசிறந்த மட்டையாளருமான கோலி எந்த நிலையிலிருந்தும் அணியை மீட்டெடுத்து வெற்றிக் கோட்டைக்கு வழிநடத்தும் செயல்திறன் படைத்தவர். பல போட்டிகளில் அவர் அதை செய்து காண்பித்திருக்கிறார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அதை அவரால் செய்ய முடியாமல் இருப்பது ஒட்டுமொத்த அணியையும் பாதித்துக்கொண்டிருக்கிறது.

2019 இல் இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் மிகச் சிறந்த நிலையில் இருந்த இந்திய அணி அரையிறுதியில் வெளியேறியது. 2021இல் அமீரக நாடுகளில் நடத்தப்பட்ட 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி மோசமாகத் தோல்வியடைந்தது. 2022 அக்டோபரில் 20 ஓவர் உலகக் கோப்பை, 2023இல் 50 ஓவர் உலகக் கோப்பை என அடுத்தடுத்து சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போட்டித் தொடர்கள் காத்திருக்கின்றன. இவற்றிலாவது இந்தியா வென்றாக வேண்டும் என்றால் கோலி மீண்டும் தன் அணியை வெற்றிக் கோட்டுக்கு அழைத்துச் செல்லும் வீரராக உருமாற வேண்டும். எனவே, கோலி ‘பழைய பன்னீர்செல்வ’மாகத் திரும்பி வந்தே ஆக வேண்டும். ஆனால், அது எப்போது நடக்கும் என்பது கோலிக்கே தெரியவில்லை என்பதுதான் சோகம்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE