ட்விட்டர் என்ன ரேட்? 2017-ல் கேட்ட மஸ்க்

By ஆர்.ஜெயக்குமார்


எலான் மஸ்க் ஒருவழியாக ட்விட்டரை வாங்கிவிட்டார். கடந்த சில நாட்களாக எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கப்போவது குறித்துத்தான் சமூக வலைத்தளங்களில் வைரல் செய்தி பரவிக்கொண்டு இருந்தது. இழுத்துக் கொண்டிருந்த பேரம் முடிந்துவிட்டது. எலான் மஸ்க் வாங்குவற்குப் பல தடைகள் போட்டாலும் அவர் பின்வாங்கவே இல்லை. இப்போது 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு ட்விட்டர் படிந்துவிட்டது.

இதை வாங்குவதற்கு முன் 2017-ல் அவர் இட்ட ட்வீட்டும் அதற்கு பிசினஸ் இன்சைடர் ஆசிரியர் டேவ் ஸ்மித் இட்ட ரீட்வீட்டும் வைரல் ஆனது. அதை டேவ் ஸ்மித்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த ட்விட்டரில் எலான் மஸ்க், ‘ட்விட்டர் எனக்குப் பிடித்திருக்கிறது’ என்று இடுகை இட்டுள்ளார். அதற்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீட்வீட்டுகள் கிடைத்துள்ளன. அதில் ஒன்றுதான் அமெரிக்காவைச் சேர்ந்த வணிகப் பத்திரிகையான பிசினஸ் இன்சைடரின் ஆசிரியரான டேவ் ஸ்மித்துடையது. அவர் அந்த ரீட்வீட்டில் ‘அப்படியானால் அதை வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே’ என்று சொல்லியிருந்தார். அதற்கு ‘அது எவ்வளவு விலை?’ எனப் பதில் கேள்வி கேட்டிருந்தார் எலான் மஸ்க். இந்த ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட்டைத்தான் டேவ் ஸ்மித் இப்போது பகிர்ந்து வைரல் ஆக்கியிருக்கிறார்.

டேவ் ஸ்மித்தின் இந்த இடுகைக்கும் பலதரப்பட்ட ரீட்வீட்டுகள் வந்துள்ளன. ‘ஓ அப்படியானால் நான் ட்விட்டரில் இருந்து வெளியேறக் காரணம் நீங்கள்தானா?’ என ஒரு ரீட்வீட் வந்துள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதைத் தொடர்ந்து இதில் இனி கருத்துச் சுதந்திரம் இருக்காது எனப் பலரும் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஜமீலா ஜமில் அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர். இன்னும் சிலர், ‘அவரிடம் பணம் இருப்பதால் வாங்கியிருக்கிறார். உங்களுக்கு என்ன பிரச்சினை?’ என எதிர்க் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு, ‘உங்களுக்கு தரகுக் கூலி கிடைத்ததா?’ எனச் சிலர் கிண்டலாகக் கேட்டுள்ளனர். எது எப்படியோ இடுகை வைரல் ஆகிவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE