துடிக்கும் தோழன் 1 | இதயத்துக்கும் உணர்வுக்கும் தொடர்பில்லை

By கல்யாணி நித்யானந்தன்

ம் உடலில் ஓய்வே எடுக்காமல் வேலை செய்வது இதயம். அது இடைவிடாமல் துடித்துக்கொண்டிருப்பதால்தாம் நம் ஓட்டம் தடைபடாமல் இருக்கிறது. நம் உயிர் காக்கத் துடிக்கும் அந்தத் தோழனைப் பற்றி எழுதுகிறார் இதய சிகிச்சை நிபுணர் கல்யாணி நித்யானந்தன்.

அனேகமாக எல்லா இறப்புச் சான்றிதழ்களிலும் சாவின் காரணம் ‘கார்டியாக் அரெஸ்ட்’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும். ஏனெனில் அதுதான் கடைசி நிகழ்வு. கருவானது ஐந்து வார வளர்ச்சி பெற்றவுடன் இதயமாக உருவாகப்போகும் திசுக்கள் துடிக்கத்தொடங்கும். கடைசிவரை இந்தத் துடிப்பு நிற்காது.

இந்தத் திசுக்கள் குழாய் வடிவமடைந்து மடிக்கப்பட்ட நிலையில் இதய உருவம் பெறுகின்றன. கருவுக்கு உணவும் பிராண வாயுவும் அளித்து கழிவுப் பொருட்களை நீக்குவது தொப்புள்கொடியில் உள்ள ரத்தக் குழாய்களும் நஞ்சும்தான். பிறந்த பிறகுதான் நாம் நுரையீரல் மூலம் சுவாசிக்கிறோம், பிராண வாயுவைப் பெறுகிறோம். அதுவரை ரத்தம் இதயத்தில் இருந்து கருவின் நுரையீரலுக்குச் செல்லாமல் மாற்றுப் பாதையான டக்டஸ் ஆர்டீரியோஸிஸ் (Ductus artereosis) என்பதன் மூலம் சென்று தொப்புள்கொடி வழியாகச் சுத்திகரிக்கப்படுகிறது.
எப்படி என்பதை இங்கு விவரிக்கப் போவதில்லை. ஆனால், குழந்தை வெளிவந்து முதல் மூச்சு எடுக்கும்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்கிறது. நுரையீரல் முதன் முறையாக விரியும்போது அந்த சின்ன இதயம் ஒரு சின்ன திரும்பு திரும்புகிறது. அப்போது அந்த மாற்றுவழிப் பாதையான டக்டஸ் முறுக்கிக் கொண்டு மூடிவிடுகிறது. எத்தனை அழகான திறமையான வடிவமைப்பு இயற்கையால் அமைக்கப்பட்டு இருக்கிறது!

இடைவிடாத துடிப்பு

இதயம் ஒரு பம்ப். நமது ஜீவ நதிகளான ரத்த நாளங்கள் மூலம் நம் உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் உயிர் வாழத் தேவையானவற்றை அளிக்கிறது. ரத்தத்தில் சிவப்பு, வெள்ளை அணுக்களும் ப்ளாஸ்மா என்கிற திரவமும் தடிப்புச் சக்திக்கான அணுக்களும் ரத்தக் கசிவைத் தடுக்கும் அணுக்களும் உடல் முழுவதும் பரவுகின்றன. இந்த பம்ப்பின் விசை இதயத் துடிப்புதான். எல்லா பம்ப்புக்கும் மின்சாரம் தேவையல்லவா? இதை அளிப்பவை வேகஸ், ஸிம்பதடிக் என்கிற இரண்டு வகை நரம்புகள்தான். வேகஸ் துடிப்பைக் குறைக்கும், ஸிம்பதெடிக் அதிகரிக்கும். துடிப்பைத் தீர்மானிப்பவை மூன்று நோட்ஸ் (Nodes). இதயத்தின் மேல் அறையில் உள்ளது ஸைனஸ் நோட். இது நிமிடத்துக்கு 72-80 முறை துடிக்குமாறு மின் துளிகளைச் செலுத்துகிறது. அதற்குக் கீழே இதயத்தின் மேல் அறைகளும் கீழ் அறைகளும் சந்திக்கும் இடத்தில் AV node உள்ளது. அது சுமார் 60 முறை துடிக்கச் செய்யும். இதயத்தின் கீழ் அறைகளைப் பிரிக்கும் சுவரில் உள்ளது ஹிஸ்பண்டில் (hisbundle) எனப்படும் நரம்புக் கற்றை. இது இடது வலதாகப் பிரிந்து இருபுறமும் மின்சாரத்தை எடுத்துச் சென்று இதயத்தைத் துடிக்கச் செய்யும்.

நமது வீடுகளில் மின்தடை ஏற்படும்போது அவசரத் தேவைக்காக ஜெனெரேடர், இன்வர்டெர் போன்றவற்றை வைத்திருக்கிறோம் அல்லவா? அதேபோல் ஒரு நோட் தடைபட்டால் அடுத்தது செயல்படத் தொடங்கும். ஆனால், அதே அளவில் இருக்காது. இவை மூன்றும் செயலிழந்தாலும் இதயத் தசை தானாக நரம்புகளின் உதவியின்றிச் செயல்பட முடியும் என்றாலும் இதயம் துடிப்பது நிமிடத்துக்கு 40 முறை மட்டுமே. தேவை அதிகரித்தாலும் துடிப்பு அதிகமாகாது. இதயத் தசையின் ஒவ்வொரு செல்லும் ஒரு சின்ன மின்கலம்போலச் செயல்படுகிறது. சோடியம், பொட்டாசியம், கால்சியம் முதலிய தாதுக்கள் செல்லின் உள்ளும் வெளியும் கடந்து வருவதன் மூலம் மிகச் சிறிய அளவில் மின் உற்பத்தி செய்து இதயத்தைத் தன்னிச்சையாகச் செயல்படச் செய்கிறது, எந்தக் கணிணிப் பொறியாளர் மின்பொறியாளர் இதை வடிவமைத்தார்? உடல் செயல்படுவதை உணர்ந்த யாராலும் நமக்கு மிஞ்சிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்தே ஆக வேண்டும். இது இயற்கையின் பரிணாம வளர்ச்சியா, இறைவனா என்கிற எண்ணம் தோன்றாமல் இருக்காது.

மூளையின் உதவி தேவையில்லை

நாங்கள் உடல் இயக்கம் (ஃபிசியாலஜி) படிக்கும்போது பரிசோதனைச் சாலையில் விலங்கு இதயத்தை (தவளை, பூனை, நாய் முதலியவை) தனியாகப் பிரித்து சரியான வெப்பம், சரியான அளவு குளூக்கோஸ், தாது உப்புக்கள் நிறந்த நீரில் மிதக்க வைத்து அது துடித்துக் கொண்டிருப்பதை எங்களுக்குக் காண்பித்திருக்கிறார்கள்.
இதயம்தான் உணர்வுகளின் இருப்பிடம் என்பது தவறான தகவல். மூளைதான் உணர்வுகளை ஏற்படுத்தி அவற்றின் தேவைக்குரிய மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகிறது. மன அழுத்தம், பயம், அதிர்ச்சி, ஆனந்தம் போன்ற பல உணர்வுகளுக்குத் தக்கவாறு இதயத்தைச் செயல்படச்செய்கிறது. முகம் வெளுத்தல், கைகால் சில்லிட்டுப்போதல், தலைச்சுற்றல், வியர்வை, படபடப்பு, நாவறட்சி எல்லாம் ரத்த நாளங்கள் விரிதல் சுருங்குவதால் ஏற்படும் மாற்றங்கள். நாளமில்லா சுரப்பிகளும் தூண்டப்பட்டுச் செயல்படுகின்றன.

இதயம், மூளையின் உதவியின்றிச் செயல்படமுடியும். நுரையீரலில் மூச்சுப் போக்குவரத்து இருக்கும்வரை (வென்டிலேட்டர்) இதுதான் நடக்கிறது. மூளை செயலிழந்த நிலையை அடைந்தாலும் அவர்களுடைய இதயத்தையும் மற்ற உறுப்புகளையும் தானம் செய்ய முடியும்.

கல்யாணி நித்யானந்தன்

இதே மாதிரி இதயத்தின் பம்ப் செய்யும் செயலை ஒரு ஹார்ட் லங் மெஷின் மூலம் ரத்த நாளங்களை அதில் பொருத்தி மூச்சுப் பரிமாற்றம், கழிவுப் பொருட்களை நீக்குதல் ஆகியவற்றைச் செய்ய முடியும். இதய அறுவை சிகிச்சை செய்யும்போது இதுதான் செய்யப்படுகிறது. இதயத் துடிப்பை நிறுத்தி (இதற்குப் பல வழிகள் உள்ளன) அறுவை சிகிச்சை முடிந்தபிறகு மீண்டும் இதயத்தைத் துடிக்கச் செய்து ஹார்ட் லங் மெஷினில் இருந்து ரத்த நாளங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்து நோயாளியையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவார்கள்.

- கல்யாணி நித்யானந்தன்

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு) | தொடர்புக்கு:joenitya@yahoo.com

(தொடரும்)

(தற்போது 87 வயதாகும் டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமைய காரணமாக இருந்தவர்களில் ஒருவர். சென்னையில் 1935இல் பிறந்து வளர்ந்த இவரது பூர்வீகம் மதுரை அருகில் உள்ள மேலூர். லேடி விலிங்டன் பள்ளியிலும் ராணி மேரி கல்லூரியிலும் படித்த பிறகு மருத்துவப் படிப்பை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயின்றார். இறுதியாண்டில் பல்கலைக் கழகத்திலேயே முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் பெற்றார். ஸ்டான்லியிலேயே முதுகலைப் படிப்பை முடித்தவர், தமிழ்நாட்டில் முதன்முதலாக மாரடைப்பு நோய் அவசரச் சிகிச்சைப் பிரிவு தொடங்க அரசாங்கத்தால் பயிற்சிக்காக மும்பைக்கு அனுப்பப்பட்டார். அதைத் தொடர்ந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டது. இவர் இந்திய இதய மருத்துவக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர். பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு பழங்குடியின மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். இதுவரை ஆங்கிலத்தில் மருத்துவக் கட்டுரைகள் மட்டுமே எழுதிவந்த இவரது முதல் தமிழ்ப் புத்தகம் ‘சில தருணங்களும் சில நிகழ்வுகளும்’ என்கிற தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ வெளியீடாக வெளிவந்துள்ளது.)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE