சீனிவாச ராமானுஜன் நினைவுநாள்: தன்னிகரற்ற கணித மேதை
சீனிவாச ராமானுஜன் நினைவுநாள்: தன்னிகரற்ற கணித மேதை
- கணித ஆராய்ச்சிக்கு முக்கியப் பங்களிப்புகளை வழங்கியவர், தீர்க்கவே முடியாது என்று கருதப்பட்ட பல கணக்குகளுக்குத் தீர்வுகண்டவர், பல கணிதக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர், உலகின் தலைசிறந்த கணிதவியலாளர்களில் ஒருவர், `கணித மேதை ராமானுஜன்' என்றழைக்கப்படும் சீனிவாச ராமானுஜன். அவருடைய நினைவுநாளான இன்று அவரை நினைவுகூர்வதற்கான தகவல்கள்:-
- 1887இல் ஈரோட்டில் பிறந்தவர் ராமானுஜன். அவருடைய தந்தை குப்புசாமி சீனிவாசன் ஒரு ஜவுளிக் கடையில் அலுவலக உதவியாளராக இருந்தார். காஞ்சிபுரத்திலும் கும்பகோணத்திலும் ராமானுஜனின் பள்ளிக் கல்வி அமைந்தது. 10 வயதிலேயே அவருடைய அபாரக் கணிதத் திறமை பளிச்சிடத் தொடங்கியது.
- 15 வயதில் ஜார்ஜ் ஷூபிரிட்ஜ் கார் என்பவரின ‘எ சினாப்சிஸ் ஆஃப் பியூர் மேத்தமாடிக்ஸ்’ என்ற நூல் அவருக்குக் கிடைத்தது. 5,000 தேற்றங்களை உள்ளடக்கிய அந்த நூலை ஆழமாகப் படித்தது, ராமானுஜனின் கணித மேதமையைத் தூண்டிவிட்டது. அந்த நூலைப் படித்தபின் புதிய தேற்றங்களை ராமானுஜன் உருவாக்கினார். பள்ளிக் கல்வியை முடித்த ராமானுஜன், கணிதத்தைத் தவிர வேறெந்தப் பாடத்திலும் நாட்டம் செலுத்த முடியாததால் முறையான உயர்கல்வியைப் பெற முடியவில்லை. கணித ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
- 1909இல் ஜானகி அம்மாள் என்பவரை மணந்தபின் வேலை தேடத் தொடங்கினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்கான ஊக்கத்தொகை அவருக்குக் கிடைத்தது. இந்திய கணித சமூகத்தைத் (Indian Mathematical Society) தொடங்கிய வி.ராமஸ்வாமி அய்யரின் மூலம் ராமானுஜனின் புகழ் சென்னை மாகாணத்தில் பரவியது. நெல்லூர் ஆட்சியராக இருந்த ஆர்.என்.ராமச்சந்திர ராவ் என்பவரின் உதவியுடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வைத் தொடர முடிந்தது.
- 1913இல் பிரிட்டிஷ் கணிதவியலாளர் காட்ஃப்ரே ஹெச். ஹார்டியை ராமானுஜன் தொடர்பு கொண்டார். அவர் மூலம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் மாதாந்திர உதவித்தொகையுடன் ஆய்வு மேற்கொள்வதற்கான வாய்ப்பு ராமானுஜனுக்குக் கிடைத்தது. குடும்பத்தினரின் பழமைவாத நம்பிக்கைகள் சார்ந்த எதிர்ப்புகளைத் தாண்டி ராமானுஜன் லண்டன் சென்றார்.
- கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வெளிப்பட்ட ராமானுஜனின் கணிதத் திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. எண் கோட்பாடு, முடிவிலித் தொடர்கள், தொடர் பின்னங்கள் ஆகியவற்றில் பெரும் பங்களிப்பை ஆற்றினார். அவருடைய ஆய்வு முடிவுகள் ஐரோப்பிய இதழ்களில் வெளியாயின. 1918இல் ‘ராயல் சொசைட்டி ஆஃப் லண்ட’னின் உறுப்பினராகத் தேர்வுபெற்றார்.
- சிறுவயதிலிருந்தே பல்வேறு உடல்நிலைப் பிரச்சினைகளுக்கு ஆளாகியிருந்த ராமானுஜன், லண்டனில் காசநோயால் தாக்கப்பட்டார். நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால் 1919இல் தாய்நாடு திரும்பினார். 1920 ஏப்ரல் 26இல் 32 வயதில் கும்பகோணத்தில் காலமானார்.
- சீனிவாச ராமானுஜனின் எண்ணற்ற கணித முடிவுகள், இன்றளவும் கணிதவியலாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription