கூகுள் டூடுலில் நஸிஹா சலீம்!

By செய்திப்பிரிவு

ராக்கின் கலை அடையாளமாக அறியப்படும் நஸிஹா சலீமை இன்று (ஏப்ரல் 23, 2022) கூகுள் டூடுல் வெளியிட்டு, கவுரவப்படுத்தியிருக்கிறது. இராக்கின் கிராமப்புற பெண்கள் மற்றும் விவசாய வாழ்க்கையைச் சித்தரித்த கலைஞராக நஸிஹா சலீம் அறியப்படுகிறார். கலை உலகில் மிகவும் செல்வாக்குப் பெற்றவராகத் திகழ்ந்த இவரை, இராக்கின் முன்னாள் அதிபர் ஜலால் தலபானி, “இராக்கின் சமகாலக் கலையின் தூண்களை நிறுவிய முதல் பெண்” என்று பாராட்டியிருந்தார்!

துருக்கியின் இஸ்தான்புல்லில் 1927ஆம் ஆண்டு பிறந்தவர் நஸிஹா. இவரின் அப்பா ஓவியர். அம்மா எம்ப்பிராய்டரி கலைஞர். அண்ணன்களும் திறமையான ஓவியர்களாகவும் சிற்பக் கலைஞர்களாகவும் இருந்தனர். வெளிநாட்டில் படிப்பதற்கான உதவித்தொகை பெற்ற முதல் இராக்கியப் பெண் என்கிற சிறப்பும் இவருக்கு உண்டு. பாரிஸில் படிக்கும்போது சுவரோவியங்களில் கவனம் செலுத்தினார். பின்னர் வெளிநாடுகளில் கலை, கலாச்சாரம் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

பேராசிரியராகவும் எழுத்தாளராகவும் இருந்த நஸிஹா, கிராமப்புற இராக் பெண்களையும் விவசாய வாழ்க்கையையும் தனது படைப்புகளில் முன்னிலைப்படுத்தினார். இறுதியில் இராக் திரும்பிய பிறகு, அவர் பாக்தாத்தின் ஃபைன் ஆர்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டில் ஓய்வு பெறும் வரை பேராசிரியராக இருந்தார். ஐரோப்பியக் கலை நுட்பங்களை இராக்கிய அழகியலில் இணைக்கும் கலைஞர்களில் முக்கியமானவர் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. டூடுலில் நஸிஹாவின் முகம் ஒரு பாதியாகவும் மறுபாதி அவர் தீட்டிய ஓவியமாகவும் வெளிவந்திருக்கிறது.

1977இல் ‘இராக்: தற்காலக் கலை’ என்கிற புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் இன்றுவரை இராக்கின் நவீன கலை இயக்கத்தின் மலர்ச்சியை ஆய்வுசெய்வதற்கான முக்கியமான ஆதாரமாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE