கரோனா வைரஸ்: இந்த அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்

By நிஷா

கரோனா பெருந்தொற்று காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சாதாரண வாழ்க்கை முறைக்கு வழியற்று, குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருக்கப் பழகிவிட்டனர். இப்போது கரோனா தொற்றின் பரவல் குறைந்து, கரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் உற்சாகமாக இருப்பதற்கு இது காரணம் என்றாலும், கவலைப்படுவதற்கும் போதுமான காரணங்கள் இதில் பொதிந்துள்ளன. கரோனாவின் புதிய வேற்றுரு குறித்த செய்திகளும், அதன் பரவலும் கரோனா தொற்று இன்னும் முடிவடையவில்லை என்பதை உணர்த்துவதால், பெற்றோர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகள் கரோனாவின் பாதிப்புக்கு உள்ளானாலும், அவர்கள் லேசான அறிகுறிகளையே கொண்டிருப்பார்கள் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். கரோனா வைரஸின் தாக்கம் குழந்தைகள் மத்தியில் அதிகம் இல்லை என்றாலும், அனைத்து வயதுக் குழந்தைகளுக்கும் இதுவரை தடுப்பூசி போடப்படாததால், கரோனா தொற்று, குறிப்பாக ஒமைக்ரான் தொற்று ஏற்படும் சாத்தியம் மிகவும் அதிகம்.

அறிகுறிகள்

ஒமைக்ரான் தொடர்பான அறிகுறிகள் என்று எடுத்துக்கொண்டால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, உடல்வலி, வறட்டு இருமல் போன்ற மேல் சுவாசக்குழாய் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

அனைத்துக் குழந்தைகளுக்கும் இன்னும் தடுப்பூசி போடப்படாததால், முகமூடி அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துதல் போன்ற கரோனா தடுப்பு நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். முக்கியமாக, வீட்டில் உள்ள பெரியவர்களும் இந்த நடவடிக்கைகளைப் பின்பற்றி, கரோனாவை வீட்டுக்குள் கொண்டு வராமல் இருக்க வேண்டும்.

குழந்தைகளை எப்போது பள்ளிக்கு அனுப்பக் கூடாது?

குழந்தைகளுக்கு ஜலதோஷம் போன்ற அறிகுறிகளோ, இரைப்பைக் கோளாறோ இருந்தால் பெற்றோர்கள் அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதைத் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அது கரோனாவாக இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் சுவாச மண்டல பாதிப்பாகக்கூட இருக்கலாம். ஆனால், அதைக் குழந்தைகள் கையாள்வதற்குக் கடினம் என்பதாலும், பிற குழந்தைகளுக்கு அந்தத் தொற்று பரவும் சாத்தியம் அதிகம் என்பதாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க வேண்டியது அவசியம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE