மழை தந்த மாலைப் பள்ளி

By குள.சண்முகசுந்தரம்

அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தின் மாலைப் பள்ளி - சென்னை சூளைமேட்டிற்கு மழை தந்திருக்கும் அறிவுக் கொடை.

கடந்த டிசம்பரில் கொட்டித் தீர்த்த மழையில் சென்னை தத்தளித்தபோது பல முனைகளிலும் இருந்து உதவி கரங்கள் நீண்டன. உணவு, உடைகள், மருந்துகள் எனத் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் எல்லாம் மக்கள் மனித நேயத்தைப் பேசினார்கள். அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தினர் இன்னும் கொஞ்சம் விசாலமாகச் சிந்தித்தார்கள்.

சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதி. கூவத்தின் விளிம்பில் உள்ள இந்தப் பகுதியில் வாழும் ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தின் சீற்றத்திற்கு உடமைகளைப் பறிகொடுத்தன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர்களில் பெரும் பகுதியினர் கட்டிடத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், பெயிண்டர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்கள்.

கல்வி மூலம் விடியும்!

உடமைகளைத் தொலைத்து நின்றவர்களுக்குத் தேவையான அத்தியாவசியங்களைக் கவனித்துக் கொண்டே இன்னொரு விஷயத்திலும் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியது அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம். இவர்களுக்கு உதவி கரம் நீட்ட முன்வந்தது ஜனநாயக மாதர் சங்கம். “மழை நேரத்தில் வந்தோம், ஏதோ உதவி செய்தோம் என்று அந்த மக்களை அப்படியே விட்டுவிட்டுப் போக எங்களுக்கு மனமில்லை. தொலைநோக்குப் பார்வையில் அவர்களுக்குத் தேவையான இன்னும் பல நல்ல விஷயங்களையும் செய்து கொடுக்க நினைத்தோம். முதல் கட்டமாக அந்த மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்தோம்.

அடுத்து, வீடு கட்டும் முயற்சி உள்ளிட்ட இன்னும் பல அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கும் பணியிலும் எங்களை ஈடுபடுத்திக்கொண்டோம். கடை நிலைக் குடும்பங்களாக இருப்பதால் அந்த மக்களுக்குப் போதிய படிப்பறிவு இல்லை. பெற்றோர் படிக்காததால் பிள்ளைகளும் எட்டாவது பத்தாவதுக்கு மேல், படிப்பைத் தாண்டுவதில்லை. இதை மாற்றுவதற்கான வித்தாகத்தான் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தின் மாலைப் பள்ளியைத் தொடங்கினோம்” என்கிறார் இந்த வட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் குறும்பட இயக்குநருமான ‘மறுபக்கம்’ அமுதன்.

அமுதனின் ஒருங்கிணைப்பில் ஐந்து தன்னார்வ இளைஞர்கள் கை கோத்து இந்த மாலைப் பள்ளியை நடத்துகிறார்கள். நல்ல நோக்கம் என்பதால் பள்ளிக்கான கட்டிடத்தை அப்பகுதியில் வசிப்பவர் ஒருவர் வாடகை இல்லாமல் தந்து உதவியிருக்கிறார். குடியரசு தினத்தன்று தொடங்கப்பட்ட இப்பள்ளியில் அதே தினம் 30 மாணவர்கள் சேர்ந்தார்கள். இப்போது 50-ஆக உயர்ந்திருக்கிறது.

படிப்பு மட்டுமில்லாமல் சனிக்கிழமைகளில் விளையாட்டு, ஓவியம், கவிதை, கலந்துரையாடல் எனத் தனித் திறன்களையும் இங்கு ஊக்குவிக்கிறார்கள். “இந்தப் பள்ளி தொடங்கிய பிறகு பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. கோடை விடுமுறையில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு, ஆளுமைத் திறன் பயிற்சிகளையும் அளிக்கத் திட்டமிடுகிறோம்” என்கிறார் அமுதன்.

முழுமையான வளர்ச்சி

இந்தப் பிள்ளைகளுக்குச் சத்துக் குறைபாடு இருப்பதால் புதன்தோறும் அவித்த முட்டை ஒன்றை வழங்குகிறார்கள். எந்த அமைப்பிடமும் எந்த நிதியும் பெறாமல் தனி நபர்கள் அவ்வப்போது செய்யும் உதவியில்தான் தற்போது அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம் இயங்குகிறது. அதிலும், மாலைப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு, +2 வகுப்பு மாணவர்களில் 10 பேரை அடையாளம் கண்டு அவர்களின் கல்லூரிப் படிப்புக்கான நிதியை இப்போதே திரட்டி வைத்திருக்கிறார்கள். நடிகர்கள் சத்யராஜ், ரோகிணி உள்ளிட்டவர்கள் அவ்வப்போது இவர்களுக்குக் கை கொடுக்கிறார்கள்.

“அதிக அளவில் பிள்ளைகளை அடைத்து வைத்து நாங்கள் அகலக்கால் வைக்க விரும்பவில்லை. மெதுமெதுவாகவே விரிவுபடுத்த விரும்புகிறோம். பிற இடங்களிலும் இதுபோன்ற பள்ளிகள் தொடங்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த மாலைப் பள்ளியிலிருந்தும் பொறியாளர்களும் மருத்துவர்களும் நிச்சயம் வெளிவருவார்கள்” நம்பிக்கையோடு சொல்கிறார் அமுதன்.

தொடர்புக்கு: 9940642044

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்