மாற்றத்துக்கு தயாராகிறதா வேளாண் துறை?

By செய்திப்பிரிவு

தற்போது எல்லா துறைகளும் தொழில் நுட்பமயமாகி வருகின்றன.தொழில்நுட்பமயமாகாத துறைகளால் தொடர்ந்து நீடிக்க முடியாது என்ற சூழலுக்குள் உலகம் வந்துள்ளது. தனி மனிதன் முதல் அரசு வரையில் தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டும் என்பது இன்றியமையாததாக மாறியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் உருவாகியுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையே, இந்தியாவில் பெட்டிக்கடை போன்ற சிறிய அளவிலான தொழில்கள்கூட தொழில்நுட்பமயமாகி யுள்ளன என்பதற்குச் சிறந்த உதாரணமாகும். தொழில்நுட்பம் என்பது ஒரு துறையில் புதிய சாத்தியத்தை உருவாக்கிறது. துல்லியமான செயல்பாட்டுக்கு வழிவகுக்கிறது.

வர்த்தகம் முதல் கல்வி வரையில் பல்வேறு துறைகள் தொழில்நுட்பத்தினால் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி வருகின்றன. இதில் வேளாண் துறையில் ஏற்பட்டுவரும் மாற்றத்தை நாம் கவனிக்க வேண்டியது அவசியம். வர்த்தகம், கல்வி, மருத்துவம் சார்ந்து நிகழ்ந்துவரும் மாற்றங்கள் தெரியும் அளவுக்கு வேளாண் துறையில் நடந்துவரும் மாற்றம் பொது மக்களின் கவனத்துக்கு பெரிதளவில் வருவதில்லை. அதற்கு அடிப்படைக் காரணம், மேற்கூறிய துறைகள் மக்களின் அன்றாடத்தோடு கலந்ததாகவும் நேரடி தொடர்புடையதாகவும் இருக்கின்றன. வேளாண் துறை அப்படியானது இல்லை. பொதுமக்களுக்கு வேளாண் துறையோடு நேரடி பரிச்சயம் குறைவு. அதனால், வேளாண் துறை சார்ந்து நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து தெரிவதில்லை.

`அக்ரிடெக்’ எனும் புரட்சி

ஒருபுறம் அறுவடை செய்யும் கூலிக்கும் கட்டுப்படியாகாத அளவுக்கு சந்தையில் வேளாண் பொருட்களுக்கு விலை குறைந்திருந்தாலும், விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து கொண்டிருந்தாலும் வேளாண் துறைதான் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ளது. இந்தியாவில் அதிகமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும் துறைகளில் முதன்மையாது வேளாண் துறைதான். இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புகளில் 42.6% அளவில் வேளாண் துறை மூலம் உருவாகிவருகிறது. இத்தகைய முக்கியத்துவம் மிக்க வேளாண் துறையில், தொழில்நுட்பங்களின் வருகை பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தபடி உள்ளது. வேளாண் துறை சார்ந்த தொழில்நுட்பங்கள் அக்ரிடெக் என்று அழைக்கப்படுகிறது. வேளாண் செயல்பாடுகளை மேம்படுத்துவதே அக்ரிடெக்கின் அடிப்படை நோக்கம். உலக அளவில் அக்ரிடெக் சார்ந்து பல்வேறு புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

சுப.மீனாட்சி சுந்தரம்

தற்போது உலக மக்கள் தொகை 790 கோடியாக உள்ளது. 2050-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 970 கோடியாக உயரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப வேளாண் உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாகிறது. பழைய தொழில்நுட்பங்களைக் கொண்டு அத்தகைய உற்பத்தியை எட்டுவது சாத்தியமில்லை. எனவே, புதிய தொழில்நுட்பங்கள் அவசியமாகின்றன. தவிர, உற்பத்தி அதிகரிப்பு என்ற பெயரில் இயற்கை வளங்கள் சுரண்டப்படும் அபாயமும் இருக்கிறது. இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வேளாண் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான வழிகளை உலக நாடுகள் சிந்தித்து வருகின்றன. அக்ரிடெக் அதற்கு உதவியாக அமைகிறது. தோட்டக்கலை மட்டுமல்லாமல் வனவியல், கடல்வாழ் உயிரினங்கள் பராமரிப்பு, கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றிலும் அக்ரிடெக் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது.

செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பண்ணைகள் தொடர்பான பிற பொருட்கள் உருவாக்கத்தில் அக்ரிடெக் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரி தொழில்நுட்பம், மரபணு பொறியியல் ஆகியவை பூச்சிகளை எதிர்த்து விளைச்சலை அதிகரிக்கின்றன. இயந்திரமயமாக்கலானது உழவு மற்றும் அறுவடையில் மனித உடல் உழைப்பைக் குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்துகிறது. அறுவடையின் தரம் மற்றும் துல்லியத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. செயற்கை தொழில்நுட்பங்கள் தாவரங்களில் ஏற்பட்டிருக்கும் நோய் பாதிப்பு, பயிர்களின் ஊட்டச்சத்து பாதிப்பு ஆகியவற்றைக் கண்டறிய, களைகளைக் கண்டறிந்து எந்தக் களைக்கொல்லியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு செயற்கை தொழில்நுட்ப சென்சார்கள் உதவுகின்றன. வேளாண் செயல்பாட்டுக்கு ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது முதல், பயிர்களின் தன்மையை ஆய்வு செய்வது வரையில் ட்ரோன்கள் முக்கியப் பங்கு வகின்றன.

ஸ்மார்ட் பார்மிங், வெர்டிகல் பார்மிங்

இத்தகைய நவீன தொழில்நுட்பங்களுடன் மேற்கொள்ளும் வேளாண்மை ஸ்மார்ட்பார்மிங் என்று அழைக்கப்படுகிறது. தரவுகளின் உதவியுடன் விளைச்சல், அறுவடை, பூச்சிக் கொல்லி மருந்துத் தெளிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை மிகத் துல்லியமாக மேற்கொள்ள முடியும். ஸ்மார்ட் பார்மிங் வேளாண்மையை மட்டுமல்ல விவசாயிகளின் நிலைமையையும் மேம்படுத்தக்கூடியது.

தற்போது வெர்டிகல் பார்மிங் வேளாண் துறையில் புதிய சாத்தியங்களை திறந்துள்ளது.நகர்ப்புறங்களில் வேளாண்மைக்கு என்று பரந்துபட்ட நிலம் கிடைப்பது அரிது. இந்தச் சூழலில் தரைப்பரப்பில் இல்லாமல் செங்குத்து அடுக்குகளில் விவசாயம் செய்வது வெர்டிகல் பார்மிங் எனப்படுகிறது. கட்டிடங்களுக்கு உள்ளே, கண்டெய்னர்களில் விவசாயம் செய்வதற்கான வாய்ப்பை இது சாத்தியமாக்கியுள்ளது. வெளிநாடுகளில் வெர்டிகல் பார்மிங் சார்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், குறைந்த இடத்தில், குறைவான நீர் பயன்பாட்டுடன் விவசாயம் செய்ய முடியும்.

அக்ரிடெக் என்பதை பெரிய அளவிலான வேளாண் உற்பத்தியோடு சுருக்கிப் பார்த்துவிடக்கூடாது. அது பல்வேறு வகைகளிலானது. விவசாய உற்பத்தியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் நேரடியாக இணைக்கும் நிறுவனங்களும் வளரத் தொடங்கியிருக்கின்றன.

இந்தியாவில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை லாபகரமான முறையில் சந்தைப்படுத்துவது மிகவும் சிக்கலானதாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விளைபொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்க உதவுகின்றன.

அக்ரிடெக் ஸ்டார்ட்அப்

இந்தியாவில் 1950-களில் ஆண்டொன்றுக்கு 1,500 என்ற அளவிலே டிராக்டர்கள் விற்பனையாகின. ஆனால், தற்போது ஆண்டுக்கு சுமார் 11 லட்சம் டிராக்டர்கள் விற்பனையாகின்றன. விதை விதைக்க, நாற்று நடுவதற்கு, அறுவடை செய்வதற்கு என பல்வேறு டிராக்டர் உபகரணங்கள் மேற்கத்திய நாடுகளைப் போல் இந்தியாவிலும் வரத் துவங்கிவிட்டன. அந்த வகையில் இந்தியாவில் பண்ணை இயந்திரமயமாக்கல் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

எனினும் இந்திய வேளாண் துறையில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு 1% அளவிலே நிகழ்ந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அந்த மிகச் சிறிய அளவிலான பயன்பாடே குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன. பூச்சிமருந்து தெளிப்பது முதல், பயிர்களின் தன்மையை ஆய்வு செய்வது வரையில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு இந்தியாவில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஆண்டுகளில், தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரிக்கும்போது இந்திய வேளாண் துறையில் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இவ்வாண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண் துறையில் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவில் அக்ரிடெக் சார்ந்து அதிக எண்ணிக்கையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. 600-க்கும் மேலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அக்ரிடெக் சார்ந்து தீவிரமாக செயல்பட்டுவருகின்றன. அந்தவகையில் இந்திய வேளாண் துறை அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது.

“நெல்லுகுத்த, மாவரைக்க, நீர் இறைக்க மிஷினு; அல்லும், பகலும் ஆக்கி அடுக்க அதுக்கொரு மிஷினு; கொல்லப்புறத்தில குழாய் வைக்கணும், குளிரு மிஷினும் கூடவே வைக்கணும், பள்ளிக்கூடத்துக்கு புள்ளைங்க போகாம படிக்க கருவி பண்ணியும் வைக்கணும்”.

உடுமலை நாராயண கவி எழுதி கலைவாணர் பாடிய புகழ் பெற்ற பாடலிலுள்ள வரிகள் அனைத்துமே இன்று நடைமுறைக்கு வந்துவிட்டன. வேளாண் துறையில் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது!

தொடர்புக்கு: somasmen@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்