கோலிவுட் ஜங்ஷன் | ஆதி அடுத்து...

சமீபத்தில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள விளையாட்டுத் திரைப்படம் ‘கிளாப்’. அதில், காலை இழந்த ஓட்டப்பந்தய வீரர் கதிராக நடித்திருந்த ஆதிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தற்போது அவர், ‘பார்ட்னர்' என்கிற அடுத்தப் படத்தை அறிவித்துள்ளார். அதன் முதல் தோற்றமும் வெளியாகியிருக்கிறது. ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஆதிக்கு ஜோடி ஹன்சிகா. இவர்களுடன் யோகிபாபு, பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நகைச்சுவை த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தை மனோஜ் தாமோதரன் இயக்குகிறார்.

தயாரிப்பும் இயக்கமும்

வீட்டுக்குத் தெரியாமல் காட்சி ஊடகவியல் படித்து முடித்துவிட்டு, ‘வல்லவன் வகுத்ததடா’ படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார் விநாயக் துரை. “மகாபாரதம் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக்கொண்டிருந்தபோது உருவான ‘ஐடியா’விலிருந்து இந்தக் கதை பிறந்தது. சமூகத்தில் வெவ்வேறு அடுக்குகளைச் சேர்ந்த 5 மனிதர்கள். வெவ்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பண நெருக்கடியால் அல்லாடுகிறார்கள். அவர்களை இணைக்கும் புள்ளியாக ஒரு காவல் அதிகாரி. ‘ஹைப்பர் லிங்க்' திரைக்கதை மூலம் விவரிக்கப்படும் இக்கதையில் யார் நல்லவர், யார் கெட்டவர்? யாரிடம் யார் மாட்டிக்கொண்டார்கள், யார் தப்பித்தார்கள், இறுதியில் பண நெருக்கடியில் வென்றது யார் எனச் செல்கிறது. இதில், காதலோ, குத்துப் பாடலோ கிடையாது” என்கிறார் இயக்குநர். பல தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னபோது அவர்கள் வணிக அம்சங்களை இணைக்கச் சொன்னதில் விருப்பமின்றி, தாமே படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார்.

‘பூ சாண்டி வாரான்' படத்தில் ஹம்சனி பெருமாள்

‘பூச்சாண்டி’யின் பொருள்!

‘வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே’ என்கிற பாடல் மக்கள் மத்தியில் பிரபலம். தற்போது ‘பூ சாண்டி வாரான்’ என ‘ச்’ இல்லாத தலைப்புடன் ஒரு தமிழ்த் திரைப்படம் தமிழ்நாட்டு ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது. சிங்கப்பூர் தமிழரான எஸ். ஆண்டி தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருப்பவர் ஜே.கே. விக்கி. மதுரையைப் பூர்விகமாகக் கொண்ட இவரும் சிங்கப்பூர்வாசிதான் முழுவதும் சிங்கப்பூரில் உருவான இந்தப் படம், கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் அங்குள்ள திரையரங்குகளில் வெளியாகி, தமிழர்கள், சீனர்கள் என இரண்டு தரப்பு பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சிங்கப்பூர் சென்றபோது இந்தப் படம் 60 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்த கோலிவுட் தயாரிப்பாளரான ‘வெள்ளித்திரை டாக்கீஸ்’ முஜிப், இதை தமிழ்நாட்டு மக்களும் பார்த்து மகிழவேண்டும் என்று இங்கே கொண்டுவந்திருக்கிறார்.

ஒரு வீட்டில் வசிக்கும் மூன்று நண்பர்கள், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பழைய நாணயம் ஒன்றை வைத்து ‘காயின் ஆஃப் த ஸ்பிரிட்’ என்கிற ஆவியை வரவழைக்கும் விளையாட்டை விளையாடுகிறார்கள். அந்த விளையாட்டில் ஏற்படும் விபரீதம் காரணமாக, கதாபாத்திரங்களை தமிழ்நாட்டின் களப்பிரர்கள் ஆட்சி காலத்துக்கு அழைத்துக்கொண்டு செல்கிறது. இதுவரை ‘பூச்சாண்டி’ என நாம் நினைத்துகொண்டிருந்த சொல்லுக்கான உண்மையான வரலாற்றுப் பொருளையும் இந்தப் படம் தோண்டியெடுத்து கொடுத்திருக்கிறது. படம் ஹாரர் த்ரில்லர் மட்டுமல்ல; வரலாற்றில் மறைக்கப்பட்ட த்ரில்லான பக்கத்தையும் எடுத்துக்காட்டும்” என்கிறார் இயக்குநர் ஜே.கே.விக்கி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE