இலங்கையிலிருந்து வெளிவரும் காட்சிகள் போர் காலச் சூழலை நினைவூட்டுகின்றன. பெட்ரோல் நிலையங்களில் மக்கள் அலைமோதுகின்றனர்; கிலோ மீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. சென்ற வாரம், பெட்ரோல் வாங்க வரிசையில் நிற்பதில் தகராறு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நீண்ட வரிசையில் காத்திருந்ததில் 3 முதியவர்கள் உயிரிழந்தனர். பெட்ரோல் நிலையங்களில் கூட்டத்தை சமாளிக்க ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை, அதன் வராலாற்றில் மிக மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. தற்போது, அதன் அந்நிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துவிட்டதால் அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளது. விளைவாக, எரிபொருளுக்கும், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலைவாசி கடந்த மூன்று மாதங்களில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இவற்றுக்கு மத்தியில், தினமும் 7 மணி நேரத்துக்கு மேலாக மின்தடை.
மாதாந்திர ஊதியக்காரர்கள் தங்கள் மாத வருமானத்தைக்கொண்டு இரண்டு வாரங்களைத்தான் சமாளிக்க முடிகிறது என்று புலம்புகிறார்கள். பல குடும்பங்கள் மூன்று வேளை உணவை இரண்டு வேளையாகக் குறைத்துள்ளன. எரிவாயு தட்டுப்பாட்டால், உணவகங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன. சாப்பாட்டுக்கு உணவகங்களை நம்பியிருக்கும் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகின்றனர். வேலையின்மை உச்சம் தொட்டுள்ளது. இனியும், இலங்கையில் இருந்தால், உயிர் பிழைக்க முடியாது என்ற நிலையில், பல குடும்பங்கள் அகதிகளாக அங்கிருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.
மக்கள் முகத்தில் விரக்தி குடிகொண்டுள்ளது. அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடிக்கின்றன. அரசும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்கிறது.
ஏன் இலங்கை இப்படி ஒரு நிலைக்கு உள்ளானது?
இலங்கையின் பொருளாதாரக் கொள்கையே தற்போதைய நெருக்கடி நிலைக்கு முக்கியக் காரணமெனக் கூறப்படுகிறது. இலங்கை, உள்நாட்டில் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல், அந்நிய கடன்கள் மூலம் நாட்டை நிர்வகித்து வந்துள்ளது. இலங்கை அதன் அடிப்படைத் தேவைகளுக்குக்கூட வெளிநாட்டு இறக்குமதியையே நம்பியுள்ளது. இதனால், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
இப்படியான சூழலில், இலங்கையில் 2019-ம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் சில மாற்றங்கள் கொண்டு வந்தார். வரி விகிதம் குறைக்கப்பட்டது; பொதுத்
துறை நிறுவனங்களில் 1 லட்சம் அளவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்த மாற்றம் இலங்கையை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதாக இல்லாமல், தீவிர நெருக்கடிக்குள் தள்ளுவதாக அமைந்
தது. ஏனென்றால், வரி விகிதம் குறைக்கப்பட்டதால் நாட்டின் வரி வருவாய் 25% அளவில் குறைந்தது. அரசுப் பணி இடங்கள் அதிகரிக்கப்பட்டதால் அரசின் செலவினங்கள் அதிகரித்தது. இவை தவிர, கோத்தபய ராஜபக்சே எடுத்த இன்னொரு முடிவும் தற்போதைய நெருக்கடி நிலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இலங்கையின் வேளாண் துறையை 100 சதவீதம் இயற்கை சார்புடையதாக மாற்
றும் நோக்கில், ரசாயன உரங்கள் பயன்பாட்டுக்கு அவர் தடைவிதித்தார். இதனால், இலங்கையின் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இலங்கையின் பிரதான ஏற்றுமதி பொருளான தேயிலையின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
இப்படியாக தள்ளாட்டத்தில் இருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கரோனா, ஒரேடியாக பாதாளத்துக்குள் தள்ளியது. இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. கரோனா காரணமாக உலக அளவில் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், இலங்கையில் சுற்றுலாத்துறை மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. சுற்றுலாத்துறை தவிர, வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கை மக்கள் மூலமாக இலங்கைக்குள் வரும் பணமும் இலங்கையின் பொருளாதார இயக்கத்தில் ஒரு முக்கியமான அங்கம். அத்தகைய பண வரவும் கரோனா காலகட்டத்தில் பாதிப்பைச் சந்தித்தது. ஜவுளி, தேயிலை, மசாலாப் பொருட்களை இலங்கை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. உலகளாவிய அளவில் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக அந்த ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டன.
விளைவாக, 2019-ம் ஆண்டு இலங்கையின் ஜிடிபியில் 42.9 சதவீதமாக இருந்த அதன் அந்நிய கடன், 2021-ல் 101 சதவீதமாக உயர்ந்தது. அந்நிய கடன் அதிகரிக்க அதிகரிக்க அதன் அந்நிய செலாவணி இருப்பு குறையத் தொடங்கியது. இலங்கையின் அந்நிய செலவாணி கையிருப்பு 2019-ல் 7.5 பில்லியன் டாலராக இருந்தது. 2021 நவம்பர் நிலவரப்படி அது 1.6 பில்லியன் டாலராக குறைந்தது.
மீளாமுடியா கடன் புதைகுழி இலங்கை பிரதானமாக ஐவருக்கு கடன்பட்டுள்ளது: சர்வதேச சந்தைகளுக்கு 47%, ஆசியன் டெவலெப்மென்ட் பேங்க் (ஏடிபி) 22%, ஜப்பான் 10.9%, சீனா 10.8%. இலங்கையின் மொத்த கடன் 40 பில்லியன் டாலருக்கு மேலாக உள்ளது. இந்த ஆண்டு இலங்கை திருப்பி செலுத்தியே ஆக வேண்டிய கடன் 4.5 பில்லியன் டாலர். அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதிய கையிருப்பு இல்லாத நிலையில், இந்தக் கடனை இலங்கை எங்கிருந்து செலுத்துவது? நிலைமையைச் சமாளிக்க மீண்டும் வெளிநாடுகளிடம் கடன் கேட்க முடியாது. ஏனென்றால், இலங்கை போன்று திவால் நிலையில் இருக்கும் நாட்டுக்கு எந்த நாடும் கடன் உதவி வழங்க முன்வராது.
இலங்கை இந்தியாவிடம் உதவி கேட்டது. சீனாவுடன் நெருக்கம் காட்டிவந்தது குறித்து இலங்கை மீது இந்தியா அதிருப்தியில் இருந்தாலும், இந்தியாவின் வர்த்தகத்தில் 60 சதவீதம் கொழும்பு துறைமுகம் வழியே நிகழ்கிறது. தவிர, அண்டை நாடு வேறு. இது போன்ற காரணங்களைக் கருத்தில்கொண்டு, சமீபத்தில் இந்தியா, இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் அளவில் கடன் உதவி வழங்கியது.
ஆனால், இலங்கை திவால் நிலையிலிருந்து தப்பிப்பதற்கு பெரும் நிதி தேவை. இலங்கையின்முன் இரண்டு தேர்வுகள்தான் உள்ளன. ஒன்று சீனாவிடம் தஞ்சம் அடைவது. மற்றொன்று சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) உதவியை நாடுவது. இரண்டுமே, பிரச்சினைக்குரிய தேர்வுகள்தான். ஏனென்றால், சீனாவிடம் உதவி கேட்பது என்பது, தன்னை முழுமையாக சீனாவுக்கு அடமானம் வைப்பதற்குச் சமம். சர்வதேச செலாவணி நிதியத்திடம் உதவி கேட்பதில் பிரச்சினை என்னவென்றால், ஐஎம்எஃப், சில நிபந்தனைகளுடனே உதவி வழங்கும். குறிப்பாக, கடன் தொகை செலவிடப்படுவதில் வெளிப்படைத்தன்மையை ஐஎம்எஃப் எதிர்பார்க்கும். அது ஒரு வகையில் இலங்கையின் நிதி தன்னாட்சியை கட்டுப்படுத்துவதாக அமையும். இதனால், சில நாட்களுக்கு முன்பு வரையில், ஐஎம்எஃப்-ன் உதவியை நாடப்போவதில்லை, சீனாவிடம்தான் உதவி கேட்கப் போகிறோம் என்று இலங்கை கூறிவந்தது. அதையடுத்து சீனாவிடம் 2.5 பில்லியன் டாலர் கடன் கேட்டது. தற்போது நிலைமை மோசமடையவும் ஐஎம்எஃப் உதவியையும் கோரப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
சீனாவின் கடன் பொறியில் இலங்கை
இலங்கை சீனாவிடம் மீண்டும் கடன் கேட்பதை, பொருளாதார நிபுணர்கள் பலரும் கவலையுடன் பார்க்கின்றனர். ஏனென்றால், இந்தக் கடன்கள் மூலம் இலங்கையை சீனா தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
சீனா தன்னை உலகின் வர்த்தக மையமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. உலக நாடுகளுடன் நேரடி வர்த்தகத்தை சாத்தியப்படுத்தும் வகையில் மாபெரும் உள்கட்டமைப்பு பணியை (Belt and Road Initiative) மேற்கொண்டு வருகிறது. அதன் பகுதியாக ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளில் ரயில்வே, சாலைகள், துறைமுகங்கள், சுரங்கம், எரிசக்தி உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களில் சீனா பெரும் முதலீடு செய்துவருகிறது.
இந்தத் திட்டம் மூலம், பொருளாதார ரீதியாக பலவீனமான நாடுகளுக்கு அதிக அளவில் கடன் கொடுத்து அந்நாடுகளை சீனா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆப்ரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய ஆசியவில் உள்ள 40 நாடுகள் தங்கள் ஜிடிபி-யில் 10 சதவீதத்துக்கு மேலாக சீனாவிடமிருந்து கடன்கள் பெற்றிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மாலத்தீவு, பாகிஸ்தான், மங்கோலியா ஆகிய நாடுகளும் சீனாவுக்கு பெரும் அளவில் கடன்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஐந்து உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்று சீனாவின் உதவியால் நடைபெறுகிறது.
கடனை திருப்பி செலுத்த முடியாதபோது அந்நாடுகளின் முக்கிய சொத்துகளை சீனா கைப்பற்றிக்
கொள்கிறது. சீனாவிடமிருந்து கடன்களை முதலீடாக பெற்று இலங்கை அரசு ஹம்பந்தோட்டோ துறைமுகத் திட்டத்தைத் தொடங்கியது. ஆனால் போதிய நிதியின்மையால், அந்தத் துறைமுகத்தின் 70 சதவீத கட்டுப்பாட்டை சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட வேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை 2017-ம் ஆண்டு ஆளானது.
ஆனால், சீனாவை விட்டால் தன்னை காப்பாற்றுவதற்கு வேறு ஆள் இல்லை என்று இலங்கை நம்புகிறது. டிராகனும் அந்தத் தருணத்துக்குத்தான் காத்திருக்கிறது!
தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago