மாணவர் படைப்பாற்றலுக்கு களம் அமைத்த புத்தகத் திருவிழா

By ஆதி

இன்றைய நவீன வசதிகள் இல்லாத காலத்தில் நோட்டுப்புத்தகத் தாள்களைக் கிழித்து முத்துமுத்தான கையெழுத்தில் பிரதியெடுத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கையெழுத்துப் பத்திரிகைகளை நடத்திவந்தார்கள். இப்படி நடத்தியவர்கள்தாம் பிற்காலத்தில் சிறந்த இதழாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் உயர்ந்தார்கள்.

அந்த முயற்சியை உயிர்ப்பிக்கும் வகையில் ‘பொருநை நெல்லை புத்தகத் திருவிழா’வில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை வ.உசி. திடலில் ‘5ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா’ நடைபெற்று வருகிறது. பல்வேறு முன்னோடி முயற்சிகளை இந்தப் புத்தகத் திருவிழா முன்னெடுத்துள்ளது. இந்த முறை திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 92 அரசுப் பள்ளி மாணவர்கள் கையெழுத்துப் பத்திரிகைகளை உருவாக்கி அனுப்பியிருக்கிறார்கள்.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தலைவர்கள், எழுத்தாளர்கள், பண்பாட்டு அடையாளங்கள், நாட்டார் கலைகள் போன்றவற்றைக் குறித்து கட்டுரைகள், கவிதைகள், கோட்டோ வியங்கள், வண்ண ஓவியங்கள் என ஒவ்வொரு கையெழுத்துப் பத்திரிகையும் தனித்தன்மையுடன் திகழ்கிறது. நூற்றாண்டு கண்ட நாகஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாசலம், 150ஆவது ஆண்டு காணும் பெருந்தமிழர் வ.உ.சி., தங்கள் ஊர்ப் பெருமை என இதழ்களில் இடம்பெற்றுள்ள பல அம்சங்கள் கவர்கின்றன. அந்த வகையில் மாணவர்களின் படைப்பாற்றலுக்கு அச்சாரமிட்டுள்ள திருநெல்வேலி புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

“ஆசிரியர்கள்-ஓவிய ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் மாணவர்களே முழு ஈடுபாட்டோடு உருவாக்கிய இதழ்கள் இவை. அவர்களுடைய படைப்பாற்றலுக்குக் களம் அமைத்துத்தருவது மட்டுமில்லாமல், பட்டைத்தீட்டும் முயற்சியாகவும் இந்தக் கையெழுத்துப் பத்திரிகைகள் அமையும்” என்கிறார் புத்தகத் திருவிழா ஏற்பாட்டுக் குழு உறுப்பினரான எழுத்தாளர் நாறும்பூநாதன். பாராட்டுக்குரிய இந்த முயற்சி, புத்தகத் திருவிழாவுடன் நின்று விடாமல் மாணவர்களின் படைப் பாற்றலுக்குத் தொடர்ந்து ஊக்கமும் வெளிச்சமும் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் தொடர் செயல்பாடுகளை முன்னெடுப்பது அவசியம்.

24 மணி நேரத் தொடர் வாசிப்பு

நெல்லை புத்தகத் திருவிழாவில் பலரையும் கவரும் அம்சமாகத் திகழ்கிறது, ‘24 மணி நேரத் தொடர் வாசிப்பு’. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாசகர்கள் குழுகுழுவாக ஈடுபட்டுவருகின்றனர். மார்ச் 19 அன்று பார்வையற்ற மாணவ-மாணவிகள் பிரெய்ல் நூல்களை வாசித்தார்கள்.

புத்தகக் காட்சி நேரத்தைத் தாண்டியும் நீடிக்கும் இந்த வாசிப்பு பலரையும் ஈர்த்துள்ளது. இந்த முயற்சியை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணுவும் 15 நிமிடங்களுக்கு வாசிப்பில் ஈடுபட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE