இமைகளின் துடிப்பால் எழுதிய புத்தகம்

By நெய்வேலி பாரதிக்குமார்

ஏப்ரல் 23 உலகப் புத்தக நாள்

ஐரோப்பாவின் முதல் நவீனமென்று கருதப்படும் ‘டான் குயிக்ஸோட்’ என்கிற நாவலைப் படைத்த ஸ்பானிஷ் மொழி படைப்பாளி செர்வாண்டிஸ் மறைந்த தினம் 1616 ஆம் வருடம் ஏப்ரல் 23. யுனெஸ்கோ அமைப்பால் உலகப் புத்தகத் தினமான இந்த நாள் அறிவிக்கப்பட்டதற்கு, ஷேக்ஸ்பியர் மறைந்த நாளும் அதுவென்பதே காரணம். உலகால் அதிகம் கவனிக்கப்படாத பிரெஞ்சு பத்திரிகையாளர் ழீன் டொமினிக் பாபி பிறந்ததும் ஏப்ரல் 23 தான். அவர் 1952-ல் பிறந்தவர். அவர் எழுதியது ஒரே ஒரு புத்தகம்தான். ஆனால் அதை அவர் விரல்களால் எழுதவில்லை. அவர் இமைகளின் அசைவுகளால் எழுதினார்.

காலம் விடுத்த சவால்

‘ழீன் டொமினிக்' எப்போதும் உற்சாகமான, கொண்டாட்டமான மன நிலையுடையவர். Elle என்னும் வெகுஜனப் பத்திரிகையின் ஆசிரியர். எவரும் எதிர்பாராத வேளையில், திடீரென 1995 டிசம்பர் 8-ல் அவரது மூளையையும் முதுகெலும்பையும் இணைக்கும் நரம்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ‘கோமா' நிலைக்குத் தள்ளப்பட்டார். மூன்று வாரம் அதே நிலையிலிருந்து, பின்னர் கண்விழிக்கும்போது தலையிலிருந்து கால் வரை எந்த உறுப்பும் இயங்காமல் போய்விட்டன.

Locked in Syndrome எனும் முடக்குவாத நோய் காரணமாக இந்த நிலைக்கு ஆளானார். இடது கண் விழியும் இமையும் மட்டும் அசைந்தன. காதுகள், கேட்கும் சக்தியை இழக்கவில்லை. அவரது மூளை எல்லாவற்றையும் கவனித்து உள்வாங்கும் நிலையில் இருந்தது. ஆனால் மூளையின் கட்டளைக்கு உறுப்புகள் எதுவும் (இடது கண் விழி மற்றும் இமைகள் தவிர) கீழ்ப்படியவில்லை. கிட்டத்தட்ட 20 நாட்களில் 27 கிலோ எடை குறைந்து மெல்லிய கம்பிபோலக் கட்டிலில் கிடக்கும் நிலை ஏற்படுகிறது. பிரான்சின் கடற்கரை நகரமான பெரக் சூ மெரில் உள்ள அதிநவீன மருத்துவமனையில் அவரை மீட்பதற்காக மருத்துவக் குழுவொன்று போராடிக் கொண்டிருந்தது.

பேச்சுப் பயிற்சிக்காக ‘பேச்சு சிகிச்சை’யில் பயிற்சி பெற்ற இருவர் மிகுந்த முயற்சி எடுத்துப்பார்த்தனர். பேச்சுப் பயிற்சியினால் அவரோடு உரையாட ஒரு வழிமுறையைக் கண்டடைந்தனர். ‘ழீனி'டம் இயங்கும் ஒரு கண்ணையும் அதன் இமைகளின் அசைவுகளையும் வைத்து அவரிடம் பேசியாக வேண்டுமென்பதால், அவருக்குத் தேவையானவற்றைக் கேள்விகள் வடிவில் கேட்டனர். ‘ஆம்' என்பதற்கு ஒரு முறை கண்ணிமைக்கவும், ‘இல்லை' என்பதற்கு இருமுறை கண்ணிமைக்கவும் பயிற்சியளித்தனர். இது ஓரளவு பலனளித்தது.

பேச்சுப் பயிற்சிக்காக ‘பேச்சு சிகிச்சை’யில் பயிற்சி பெற்ற இருவர் மிகுந்த முயற்சி எடுத்துப்பார்த்தனர். பேச்சுப் பயிற்சியினால் அவரோடு உரையாட ஒரு வழிமுறையைக் கண்டடைந்தனர். ‘ழீனி'டம் இயங்கும் ஒரு கண்ணையும் அதன் இமைகளின் அசைவுகளையும் வைத்து அவரிடம் பேசியாக வேண்டுமென்பதால், அவருக்குத் தேவையானவற்றைக் கேள்விகள் வடிவில் கேட்டனர். ‘ஆம்' என்பதற்கு ஒரு முறை கண்ணிமைக்கவும், ‘இல்லை' என்பதற்கு இருமுறை கண்ணிமைக்கவும் பயிற்சியளித்தனர். இது ஓரளவு பலனளித்தது.

காதல் அளித்த நம்பிக்கை

அதற்கடுத்த முயற்சியாக ஆங்கிலத்தில் அதிகம் பயன்படக்கூடிய எழுத்துகளை ஒரு பிளாஸ்டிக் பலகையில் பொறித்து ஒவ்வொரு எழுத்தாக ஒருவர் வாசித்துக் காண்பிப்பார். ழீன் மனதில் உள்ள வார்த்தையின் எழுத்து வரும்போது ஒருமுறை கண் இமைக்குமாறு பழக்கினார்கள். ஆக, அதுவரை கேட்ட கேள்விக்கு ஆம், இல்லை என்பதற்கு மட்டும் பதில் என்கிற நிலையிலிருந்து சிறுசிறு வார்த்தைகளால் ஆன கேள்விகளைக் கேட்டுப் பதிலடையும் நிலைக்கு முன்னேற்றமடைந்தார்.

முதலில் வாழ்க்கையை வெறுத்து விரக்தியுடன் பேசிய ழீன், அவரது பத்திரிகையில் விமர்சகராகப் பணியாற்றிய அவரது காதலி பென் சாடோனின் ஆறுதலான அருகாமையினால் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னம்பிக்கையடைந்தார்.

பேச்சுப் பயிற்சி நிபுணர் மெண்ட்லில் உடனான சலிப்பற்ற உரையாடலில் உற்சாகமான ழீன், தான் ஒரு புத்தகம் எழுத விரும்புவதாகவும், அதற்கு உதவும்படியும் கேட்டார். மெண்ட்லில் அதற்குச் சம்மதித்து, ஏற்கனவே ழீனுடன் ஒரு புத்தகத்துக்காக ஒப்பந்தம் போட்டிருந்த பதிப்பாளரிடம் பேசி அவர்களையும் சம்மதிக்கச் செய்தார். புத்தகம் எழுதும் பணி துவங்கியது. மெண்ட்லில், ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்து ழீனின் இமையசைவை வைத்து வார்த்தைகளைக் கோத்து வரிகளாகப் பத்தியாக, பக்கமாகப் புத்தகம் உருவாகத் தொடங்கியது.

கிட்டத்தட்ட இரண்டு லட்சம் எழுத்துகள், ஒவ்வொரு எழுத்துக்கும் அதிகபட்சம் ஐந்து நிமிடம் என்கிற காலக்கணக்கில் மெண்ட்லில் மற்றும் ழீனின் நண்பர்கள் ஆகியோரின் பொறுமையான ஒத்துழைப்பினால் ‘The Diving Bell and the Butterfly' என்ற தலைப்பில் அந்த நூல் 1997 ஆண்டு மார்ச் 7-ம் தேதி வெளியானது. Diving bell என்பது உருளும் விழிகளையும் Butterfly என்பது படபடக்கும் இமைகளையும் குறிப்பதாக ழீன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும்.

புத்தகம் வெளிவந்ததும் மரணம்

புத்தகம் வெளிவந்த இரண்டு நாட்களில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ழீன், மருத்துவமனையிலேயே இறந்து விட்டார். பிரான்சில் நடந்த இந்த உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து ழீன் எழுதிய நூலின் தலைப்பையே கொண்டு திரைப்படமும் வெளிவந்துள்ளது. அந்தத் திரைப்படத்தை ஜூலியன் ஸ்நாபெல் இயக்கியுள்ளார்.

‘The Diving Bell and the Butterfly' நூல் இலக்கியத்தரமான படைப்பு இல்லை. ஒரு சாமானியன், உலகத்துடனான சகலத் தொடர்புகளிலிருந்தும் அறுபட்டு முடங்கிய நிலையில் தனது நிலைமையை, மருத்துவமனையில் தான் கண்ட அன்றாட நிகழ்வுகளைச் சகமனிதர்களோடு பகிரும் ஒரு மவுன உரையாடல் போலத்தான் அந்த நூலின் உள்ளடக்கம் இருக்கிறது. பெரும்பாலான எழுத்தாளர்களின் விரல்களிலிருந்து எழுத்து பிறக்கும்போதுதான், தொடர்ந்து கற்பனைகள் உருவாகி அடுத்தடுத்த வார்த்தைகளை எழுதமுடியும். ஒரு வேளை ழீன் தனது விரல்களினூடே இந்த நூலை எழுத முடிந்திருக்கும் பட்சத்தில் இந்தப் புத்தகம் வேறொரு வடிவத்தை எட்டியிருக்கக்கூடும்.

பல சமரசங்களோடுதான் ழீன் இந்த நூலை இறுதி செய்திருக்கலாம். எனினும் படைப்பாக்கத்தில் இந்த முயற்சி அசாத்திய மானது. ஏப்ரல் 23 என்ற தினம், அவரையும், அவரது இமைகளையும், அவரது வழிந்தோடும் விழிநீரில் கலந்திருக்கும் வலியோடு நினைவுபடுத்துகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்