நல்ல பாம்பு - 26: பாம்புகளை யார் பாதுகாப்பது?

By செய்திப்பிரிவு

இந்திய நிலப்பரப்பில் வாழும் ஊர்வனவற்றில் பாம்புகள் மட்டுமே நஞ்சுடையவை. அதிலும் வெகு குறைவான பாம்பு இனங்களே மனிதர்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் அளவுக்கான நஞ்சைப் பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இரவாடிகள். இந்தப் புரிதலைப் பெறாமல் பாம்பு என்றாலே நஞ்சுடையதுதான் என்கிற தேவையற்ற பயத்தை பெரும்பாலோர் பெற்றிருக்கிறோம். இதனால், பார்க்கும் பாம்புகளையெல்லாம் அடித்துத் துன்புறுத்தவோ, அப்புறப்படுத்தவோ முற்படுகிறோம். இவ்விரண்டு செயல்களுமே நிரந்தரத் தீர்வல்ல. நமது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அதனதன் வேலையைச் செய்து உடலைச் சீராக வைத்திருப்பதுபோல, பாம்புகள் உள்ளிட்ட ஒவ்வொரு உயிரினமும் தனக்கான வேலையைச் செய்து நாம் வாழும் உயிர்க்கோளத்தை சமநிலையுடன் வைத்திருக்கின்றன.

பாம்புகளை ஏன் பாதுகாக்க வேண்டும் என்கிற கேள்வி அடிக்கடி முன்வைக்கப் படுகிறது. பாம்புகளின் பாதுகாப்பு என்பது அதன் வாழிடப் பாதுகாப்பைப் பொறுத்தே அமைகிறது. பாம்பினங்கள் உயர்ந்த மலைகள், அடர்ந்த காடுகள், வறண்ட பாலைவனங்கள், நன்னீர் நிலைகள், கழிமுகங்கள், கடல் பகுதிகள், விவசாய நிலங்கள், பெருநகரங்கள் எனப் பல்வேறு வகையான வாழிடங்களில் அச்சூழலுக்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக்கொண்டு வாழும் இனமாக இருக்கின்றன. எனவே, பாம்புகளின் பாதுகாப்பை முன்னிறுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த சூழலின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.

மா. ரமேஸ்வரன்

உதவும் நூல்கள்

பாம்புகளை அறிந்து தெளிவடைவதற்கு அவற்றை நேரில் அணுகுவது முழுமையாகச் சாத்தியமில்லை.இவை சார்ந்த ஆராய்ச்சித் தரவுகளையும்அனுபவங்களையும் புத்தகங்கள் மூலமும் இணையவழியிலும் பெற முடியும். தமிழில் பாம்புகள் சார்ந்து எம்.வி.இராசேந்திரன் எழுதிய ‘நம் நாட்டுப் பாம்புகள்’ புத்தகம் குறிப்பிடத்தக்கது. இது தற்போது பதிப்பில் இல்லை. ரோமுலஸ் விடேகரின் ஆரம்ப காலப் புத்தகமான ‘இந்தியப் பாம்புகள்’ (நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இது பாம்புகள் சார்ந்த அடிப்படை அறிவையும் தெளிவையும் பெற உதவும். அறிவியல் தரவுகளோடு வண்ண ஒளிப்படங்களையும் கொண்டு ரோமுலஸ் விடேகர், அசோக் கேப்டன் எழுதிய ‘இந்தியப் பாம்புகள் - களக் கையேடு’ (Snakes of India – The field guide) பாம்புகளை இனம் காணவும் ஆழ்ந்து உற்றுநோக்கவும் உதவுகிறது.

ஆங்கிலேயரான எம்.ஏ. ஸ்மித் எழுதிய ‘The Fauna of British India, Ceylon and Burma. Vol. III. Serpentes’ - 1943 புத்தகம் இத்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கான அடிப்படை நூல். சென்னைப் பாம்புப் பண்ணை (Chennai Snake Park Trust), சென்னை முதலைப் பண்ணை (Madras Crocodile Bank Trust) வெளியிட்ட புத்தகங்கள் அனைத்துமே முக்கியமானவை. இவற்றைத் தாண்டி இந்தியப் பாம்புகளையும் பிற இந்திய ஊர்வன இனங்களைப் பற்றியும் அறிய விரும்பினால் ஜே.சி. டேனியல், இந்திரநீல் தாஸ் போன்றோரின் புத்தகங்கள் உதவும்.

அறிவியல் முன்னேற்றம் காரணமாகப் பாம்புகளில் புதிய இனங்கள் கண்டறியப் படுவதுடன் பல மாற்றங்களும் உருவாகிவரும் சூழலில் reptile-database.org, indianreptiles.org, user.org.in (snake bite management), oorvanapalli.in, indiansnakes.org போன்ற இணையதளங்களும் SnakeHub, Snakepedia போன்ற செயலிகளும் புதுப்பிக்கப் பட்ட தகவல்களுடன் எளிய முறையில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உள்ளன.

இந்திய வனச்சட்டம் பாம்புகளின் பாதுகாப்பை உறுதிசெய்தாலும், இன்றும் அவை தொடர்ந்து துன்புறுத்தப்பட்டும் கொல்லப்பட்டும் வருகின்றன. பாம்புகளைப் பார்த்து ஒரு காலத்தில் அச்சம் கொண்ட மனித இனம், தற்போது ஜூலை 16ஆம் நாளை ‘உலக பாம்புகள் நாளா’க அறிவித்துக் கொண்டாடிவருவது முன்னேற்றமே. பாம்புகளைப் பாதுகாப்பதற்கு நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளராகவோ வனத்துறையிலோ இருக்க வேண்டியதில்லை. யார் வேண்டு மென்றாலும் கற்றறியக் கூடியதே. அப்படிக் கற்றுக்கொள்வதன் மூலம் பாம்புகளின் பாது காப்பைத் தாண்டி, ஒட்டுமொத்த இயற்கையை உணர்வதற்கும் அது வழிவகுக்கும்.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: oorvanapalli@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்