ஆட்சிப்பணி தொடர்பாகவும், யுபிஎஸ்சி தேர்வுகள் தொடர்பாகவும் பல சந்தேகங்களும் தப்பெண்ணங்களும் நம்மிடையே உள்ளன. பள்ளியிலும் கல்லூரியிலும் பாடங்களில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றவர்கள்தான் ஐஏஎஸ் போன்ற தேர்வுகளை எழுதித் தேற முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். பொறியியல் மற்றும் மருத்துவத் துறையைப் பாடமாகப் படித்தவர்களுக்குத்தான் இத்தேர்வுகள் எளிமையாக இருக்கும் என்றும் கருதுபவர்கள் இருக்கிறார்கள். ஆட்சிப்பணியில் சேர வேண்டுமானால் ஒருவர் தனது மொத்த பொழுதுபோக்குகள், சமூக வாழ்க்கை எல்லாவற்றையும் இழக்க வேண்டியிருக்கும் என்றும் நம்பப்படுகிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சென்னையில் தற்போது ஆபிசர்ஸ் ஐஏஎஸ் அகாடமியை நடத்துபவருமான ஆர்.ஏ.இஸ்ரேல் ஜெபசிங், இந்தக் கற்பிதங்களைத் தகர்க்கிறார்.
சிவில் சர்வீஸில் சேர எப்போது முடிவெடுத்தீர்கள். அந்த இலக்கை எப்படி எட்டினீர்கள்?
எனக்கு 20 வயதாகும்போது சிவில் சர்வீஸில் சேர முடிவெடுத்தேன். எனது பெற்றோர் இந்திய ஆட்சிப்பணியில் சேரும் ஆசையை மனதில் விதைத்தனர். பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும்போது தங்கப்பதக்கமெல்லாம் வாங்குமளவுக்கு நான் படிக்கவில்லை. பட்டப்படிப்பில்கூட அரியர்ஸ் வைத்திருந்தேன். கேம்பஸ் நேர்காணல்களிலும் என்னால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் எனது பெற்றோர் என் மேல் வைத்திருந்த நம்பிக்கையால் நானும் கனவு காணத் தொடங்கினேன். ஒரு பொறியியல் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். அங்குள்ள நூலகத்தில்தான் தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கினேன். வெற்றிகரமான ஆட்சிப்பணியாளர்களிடமிருந்து எது சரி, எது தவறு என்பதைக் கற்றுக்கொண்டேன்.
அகில இந்திய அளவில் 59-வது இடத்தை எப்படிப் பிடித்தீர்கள்?
ஏற்கெனவே வெற்றிபெற்ற வல்லுனர்களின் வழிமுறைகளிலிருந்து கற்றுக்கொண்டதுதான் எனது வெற்றியின் ரகசியம். சிவில் தேர்வுகள் எழுதி வெற்றிபெற்றவர்களைச் சந்தித்து அவர்கள் கொடுக்கும் உபாயங்களை என்னுடையதாக்கிக்கொண்டேன். தொடக்கத்தில் இந்திய அளவில் 294-வது இடம்பெற்று இந்தியன் ரெயில்வே டிராபிக் சர்வீசில் இணைந்தேன். மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 59-வது இடத்தைப் பிடித்தேன்.
பத்தாண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாகச் சேவை செய்து, அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஆபிசர்ஸ் ஐஏஎஸ் அகாடமியைத் தொடங்கினீர்கள்? ஏன் பணியிலிருந்து விலகினீர்கள்? அது சரியான முடிவென்று கருதுகிறீர்களா?
மேற்குவங்கத்தில் மிகவும் பின்தங்கிய, நக்சலைட்களின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் எனது பணியை நேசித்தேன். ‘செயல்திறன் மிக்க சப்கலெக்டர்’ என்ற அங்கீகாரத்தை ஆட்சிப் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாதமி ஆப் அட்மினிஸ்ட்ரேஷன், எனக்கு தொடர்ந்து இரண்டு வருடங்கள் அளித்தது. எனது அம்மாவுக்குப் புற்றுநோய் என்று கணிக்கப்பட்டபோது, நான் ஒரு வருடம் பணியிலிருந்து விடுப்பெடுக்க வேண்டிவந்தது. அந்த சமயத்தில் டாக்டர் அப்துல் கலாமின் கனவுத்திட்டமான புரா-வை (Provision of Urban Amenities to Rural Areas (PURA)) செயல்படுத்துவதற்கான பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அத்திட்டம் பூர்த்தியானதும், எனக்குள் இருந்த ஆசிரியர் விழித்துக்கொண்டார். சிவில் சர்வீஸ் தேர்வில் எப்படித் தயாராவது என்று தெரியாமல், ஆனால் அதைக் கனவாகக் கொண்ட மாணவர்களுக்குக் கற்றுத்தருவதே என்னுடைய எதிர்காலம் என முடிவெடுத்தேன். என்னுடைய பணியிலிருந்து விலகி, 2013-ல் ஆபிசர்ஸ் அகாடமியைச் சென்னையில் தொடங்கினேன்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃஎப்எஸ் பணியில் சேர்வதற் கும் அதற்கான தேர்வுகளை எழுதுவதற்கும் என்னென்ன தகுதி, திறன்கள் அவசியம்?
சிவில் சர்வீஸில் சேர்வதற்கு ஒரே ஒரு தகுதிதான் தேவை. தளராத ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும். அந்த வேட்கைத்தீயை அணைய விடாமல் இருந்தால்போதும் மற்ற தகுதிகளை இயல்பாகவே அடைந்துவிடலாம்.
உங்கள் மாணவர்களுக்குத் தேர்வுக்கான டிப்ஸ் என்று என்னென்ன சொல்வீர்கள்?
தொடக்கநிலைத் தேர்வுகளில் ஒவ்வொரு கருத்தையும் நாம் எப்படி புரிந்துவைத்திருக்கிறோம் என்பது சோதிக்கப்படும். அதனால் மனப்பாடம் செய்வதற்குப் பதில் கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகளை எடுத்தல் அவசியம். மெய்ன் என்று அழைக்கப்படும் பிரதானத் தேர்வுகளில், எழுத்துத் திறன் பரிசோதிக்கப்படும். ஆட்சிப் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், தனது ஐம்பது அல்லது அறுபது சதவீதப் பணி நேரத்தை எழுத்துக்குச் செலவழித்தல் அவசியம். அப்போதுதான் சுற்றி வளைக்காமல் கேள்வி களைச் சரியாகப் புரிந்து கொண்டு பதிலளிக்க முடியும்.
கலை மற்றும் அறிவியல் பாடங்களைப் படித்த பட்டதாரிகளைவிட பொறியியல் படித்தவர்கள்தான் ஆட்சிப்பணி அதிகாரியாகத் தகுதியானவர்கள் என்று சிலர் நினைக்கிறார்களே?
அது தவறான எண்ணம். ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் பின்னணி அல்லாத பிற பட்டதாரிகள் எத்தனையோ பேர் வெற்றிகரமாக சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெறுகிறார்கள் என்பதே உண்மை.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற ஒருவர் பயிற்சிப்பள்ளி ஏதாவதில் சேர வேண்டுமென்ற கட்டாயம் உள்ளதா?
அப்படியில்லை. அவரவர் ஊரில் அமைந்துள்ள நூலகமே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறப் போதுமானது. பயிற்சிப் பள்ளிகளில் சேர்வதன் மூலம் திரும்பத் திரும்ப மாதிரித் தேர்வுகளை எழுதும் அனுபவம் கிடைக்கும். ஒருவர் சரியான வழியில் தன்னைத் தயார் செய்துகொண்டால், எந்த பயிற்சி அகாதமியிலும் சேராமலேயே தேர்ச்சி பெற முடியும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை குறைவான பேர்களே முதலிடத்தில் இடம்பிடிக்கின்றனர். வட இந்தியப் பயிற்சிப்பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கப்படும் முறைகள் தென்னிந்தியாவை விட சிறந்ததாக இருக்கிறதா?
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்தும் நிறைய பேர், முதலிடத்தைப் பிடிக்கின்றனர். கடந்த ஆண்டு, எங்களது அகாடமியில் பயிற்சிபெற்ற மாணவர்களில் ஒருவரான அருண்ராஜ், அனைத்திந்திய அளவில் 34-வது ரேங்கை முதல் முயற்சியிலேயே பெற்றார். யுபிஎஸ்சி-யைப் பொருத்தவரை வட இந்தியர், தென்னிந்தியர் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை.
இந்நாட்களில், அரசு அதிகாரி (bureaucrat) என்ற பதமே எதிர்மறையாகப் பார்க்கப்படுகிறது. சிவில் சர்வீஸில் பணிபுரிபவரை வேறெந்த வகையில் அழைப்பது?
ஆமாம் அதிகாரத்துவம், அதிகாரி என்பதெல்லாம் தற்போது எதிர்மறையான பொருள் தொனிப்பதாக உள்ளன. நான் ‘ஆட்சிப் பணியாளன்’என்ற பதத்தைத் தேர்வு செய்வேன். ஏனெனில் சாதாரணக் குடிமகன்தான் எஜமானன் என்ற உணர்வை ‘ஆட்சிப் பணியாளன்’ என்ற பதம் தருகிறது. இந்திய ஆட்சிப்பணியில் நுழையும் ஒவ்வொருவரும் தாங்கள் எஜமானர்கள் அல்ல, வெறும் ஆட்சிப் பணியாளர்கள் என்று கருதினாலே போதும், இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையே இருக்காது.
தமிழில்: ஷங்கர்
நன்றி: தி இந்து, எஜூகேஷன் ப்ளஸ்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago