இது அப்ரைசல் காணும் காலம்!

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

‘‘ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை, காஞ்சு போச்சுடா!’’ என்று பாட்டில் வருவது போல எங்கும் காய்ச்சல்தான். வெயில் காய்ச்சல், தேர்தல் ஜுரம் இவற்றுடன் அப்ரைசல் காய்ச்சலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

திடீரென எல்லாரும் ஹெச்.ஆரை வறுத்தெடுக்கிறார்கள். “இது அப்ரைசல் இல்லை சார். ‘ஆப்பு’ரைசல்” என்றார் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர். கார்ப்பரேட் கலாச்சாரம் பரவியதில் இன்று கல்லூரி மாணவர்கள் வரை அப்ரைசல் பற்றி பேசுகிறார்கள். “இந்த அப்ரைசலப் பாத்துட்டுதான் பேப்பர் போடுறதா (ராஜினாமா செய்வது) இல்லையான்னு முடிவு பண்ணணும்” என்று எங்கும் பார்த்தாலும் இந்த வருடாந்திரச் சடங்கு பற்றிதான் ஊழியர்கள் மத்தியில் ஒரே பேச்சு.

அப்ரைசல் பற்றி சில பாலபாடங்கள்:

l வேலை பங்களிப்புக்கேற்ப ஊதிய/பதவி உயர்வு, மாற்றம், நீக்கம், தேக்கம் என அனைத்தையும் நிர்வகிக்கும் இயக்கம்தான் பெர்ஃபார்மன்ஸ் மேனேஜ்மெண்ட். அதில் பெர்ஃபார்மன்ஸ் அப்ரைசல் என்பது ஒவ்வொரு பணியாளருக்கும் வழங்கப்படும் ஆண்டுக்கான புராகிரஸ் ரிப்போர்ட் போல. மாணவர்களுக்குக் கிரேடுகள் வழங்குவதுபோல அவரவர் வேலை பற்றிய நிர்வாகத்தின் மதிப்பீடு இது.

l இது தனியார் நிறுவனங்களில் பெரும்பாலும் பலம் பொருந்தியது. மனித வள நிர்வாகத்தில் பணியாளர்களின் பங்களிப்பை வைத்து அவர்களை அடுத்த கட்ட நகர்வுக்குத் தயாராக்குதல் முக்கியமானது. இது கோட்பாடு.

l பத்துப் பேருக்குச் சம வாய்ப்பு உள்ளபோது அதில் திறமையாகப் பணியாற்றிய நபர் யார் என்று கண்டறிய, நிர்வாக வளர்ச்சிக்கு ஏற்ற ஊதிய/ பதவி மாற்றங்கள் செய்ய உதவுகிறது. தன் இஷ்டத்துக்குத் தனக்கு வேண்டுபவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் தர்க்க ரீதியாகச் சரியாக முடிவு எடுக்கவல்ல நிர்வாக ஆயுதம் இது. இதன் தவறுகள் நிர்வாக வளர்ச்சியையும் பாதிக்கவல்லது.

l உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளிகள் நீங்கலாக அனைத்து நிர்வாகப் பணியாளர்களுக்கும் இது முக்கியமானது. சேவை நிறுவனங்களில் அடிமட்டத் தொழிலாளர்களுக்கான சங்கம், ஊதிய ஒப்பந்தம் என இல்லாததால் அப்ரைசல் எல்லாத் தரப்புக்கும் பொது.

l வளர்ந்துவரும் ஹெச்.ஆர். துறையில் அறிவியல் சார்ந்த நவீன அப்ரைசல் முறைகள் உள்ளன. பாஸ் மட்டுமல்லாது, உடன் பணி செய்வோர், தன்னிடம் வேலை செய்வோர் என அனைவரும் பங்கெடுக்கும் 360 டிகிரி அப்ரைசல் எல்லாம் புழக்கத்துக்கு வந்துள்ளன.

l பெல் கர்வ் அப்ரைசல் முறையை உடைத்து இன்னமும் சுதந்திரமாகவும் கற்பனைத்திறனோடும் பணியாளர் பங்களிப்பை மதிப்பிடும் நிறுவனங்கள் உள்ளன.

l ஆயினும் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக அப்ரைசல் என்ற பெயரில் வேண்டாதவர்களை வெட்டிவிடுவதும், கட்டம் கட்டுவதும் நடந்துவருவதாகச் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

சரி, விஷயத்திற்கு வருவோம். ஏன் இந்தக் கட்டுரை? அப்ரைசலை எதிர்கொள்ளும் பணியாளர் என்ன செய்ய முடியும், என்ன செய்யலாம் என்று தெளிவுபடுத்தத்தான்.

முதல் விஷயம். நிர்வாகம் பெரிய மீன். பணியாளர் சின்ன மீன். பெரிய மீன் சின்ன மீனைச் சாப்பிடலாம். சின்ன மீன் பெரிய மீனைச் சாப்பிட நினைத்தால், அது சாப்பிடப்படும். அதனால் சில நிதர்சனங்களை இங்கு விவாதிக்கலாம்.

தைரியமாகக் கேளுங்கள்!

அப்ரைசல் திடீர் நிகழ்வல்ல. அனுபவஸ்தருக்குத் தெரியும். கத்துக்குட்டிகள்தான் அதிகம் குத்துப்படுவார்கள். ஒரு வருடம் முன்னரே உங்கள் பங்களிப்பை எப்படி மதிப்பிடுவார்கள் என்று அறியும் முறை உள்ளது. அதைச் சொல்வது நிர்வாகத்தின் கடமை. தவறினால் கேட்க வேண்டியது உங்கள் கடமை. இந்த வேலையில் என்ன எதிர்பார்ப்புகள் உள்ளன, என்ன முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன, என அறிந்து கொள்வது அவசியம். ஏப்ரல் வரை காத்திருக்காமல் இந்த விவாதங்களைத் தொடர்ந்து நிகழ்த்துபவர்கள் புத்திசாலிகள். 11 மாதம் “ஆஹா ஓஹோ” என்று கதைத்துவிட்டு அப்ரைசலில் ப்ளேட்டை மாற்றி உதட்டைப் பிதுக்குவது கடினம். (“அதையும் செய்யக்கூடிய கங்காணிகள் எங்கள் கம்பெனியில் இருக்கிறார்கள்” என நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது!)

ஹெச்.ஆர். வெறும் அம்பு

இந்த அப்ரைசல் நியாயமாகவும் ஒளிவுமறைவு இல்லாமல் நடைபெறுகிறதா என்பதைப் பொறுத்துத்தான் ஒரு கம்பெனியின் லட்சணம் உள்ளது. உலகின் மிகச் சிறந்த நிறுவனங்கள் அனைத்திலும் மிகச் சிறந்த அப்ரைசல் முறைகள் உள்ளன எனத் தாராளமாகச் சொல்லலாம். உங்கள் கம்பெனியின் அப்ரைசல் முறையை ஆராய்ந்து அதை அறிவு சார்ந்து அலசுங்கள். ஹெச்.ஆரை நொந்து பயனில்லை. காரணம் ஹெச்.ஆர். வெறும் அம்பு. நிர்வாகத்தின் விழுமியங்களை உணரும் ஒரு தருணம் உங்கள் அப்ரைசல் முறை. நீங்கள் பாதிக்கப்பட்டீர்கள் என்பதற்காகத் தவறாகப் பேசாமல் அதன் அமைப்பைப் புரிந்துகொள்ள முயலுங்கள். ஒன்று, நீங்கள் நல்ல நிறுவனத்தில் உள்ளீர்கள் எனத் தெரிந்துகொள்வீர்கள். அல்லது நல்ல நிறுவனத்தை நோக்கி நகர்வீர்கள்.

உங்கள் நேரடி மேலதிகாரியிடம் நீங்கள் நிகழ்த்தும் உரையாடல், கிளைமாக்ஸ் வசனத்தை விட முக்கியமானது. “நான் என்னப்பா செய்யட்டும்? நான் எவ்வளவோ சொல்லிட்டேன். எல்லாம் அவங்க மாத்திட்டாங்க!” என்று நீலிக்கண்ணீர் வடித்தால் நம்பாதீர்கள். உங்களை மதிப்பீடு செய்வதில் அவருக்குப் பெரும்பங்கு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

உணர்வுகளை அதிகம் கலக்காமல் உரையாடல் நிகழ்த்துவது உங்களுக்கு நல்லது. தகவல்களைத் தயாராக வைத்திருங்கள். இதைத் திடீர் இடியாப்பம் போல உடனே சமைக்க முடியாது. இதை வாரந்தவறாமல் திரட்டி வைத்திருந்தால் சமயத்தில் கைகொடுக்கும். நீதி: உங்கள் வேலை குறித்த குறிப்புகளை மறக்காமல் திரட்டி வாருங்கள்.

உங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பு

நீங்கள் நினைத்த மதிப்பீடு, உயர்வு கிடைக்கவில்லை என்றால் மனம் உடையாமல் உண்மையை அறியப் பாருங்கள். அரசியல் இல்லை, உள்நோக்கம் இல்லை என்றால் அங்கு நிறையத் தகவல் தொடர்பு இடைவெளி உள்ளது என்பதை அறியுங்கள். நிர்வாகம் உங்கள் வேலை பற்றி வைத்திருக்கும் எதிர் பார்ப்புக்கும் நீங்கள் உங்கள் வேலை பற்றி வைத்திருக்கும் எதிர்பார்ப்புக்கும் நிறைய இடைவெளி என்று புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு குறிப்பிட்ட திறன் குறைவு, ஒரு குறிப்பிட்ட ஆளுமைப் பண்பில் குறை, ஒரு குறிப்பிட்ட வேலையில் பின்னடைவு, ஒரு குறிப்பிட்ட அனுபவமின்மை என எல்லாவற்றையும் பட்டியல்போட்டு வாங்கிக்கொள்ளுங்கள். அடுத்த முறை எங்கு உங்கள் கவனத்தைக் குவிக்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

தோல்வி தரும் பாடங்கள் முக்கியமானவை. அப்ரைசல் உங்களை நிரூபித்துக்கொள்ள அளிக்கப்படும் ஒரு வாய்ப்பு. நீங்கள் தவறாக மதிப்பிடப்பட்டதாகவும் உலகின் மொத்த அநீதியையும் உங்கள் மேல் கொட்டப்பட்டதாகவும் நினைக்க வேண்டாம். ஏசு நாதரும், சாக்ரடீசும், காந்தியும் பெறாத பெயரா நீங்கள் பெற்றுவிட்டீர்கள்?

ஒரு வருடத்தில் செய்த ஒரு வேலையை, ஒரு அமைப்பு தன் தேவைகளுக்கேற்பப் பரிசீலித்துத் தரும் முடிவு மட்டும்தான் இது. உங்களை உள்நோக்கிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் இது. அவ்வளவுதான்.

“அடுத்த முறை அசத்திடலாம்!” என்று தெம்பாய் வேலையைத் தொடர் சகோதரா..!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்