நலம் நம் கையில் (இரண்டு பாகங்கள்)
டாக்டர் கு.கணேசன், தாமரை பிரதர்ஸ் மீடியா,
தொடர்புக்கு: 18004257700
இன்றைய நவீன வாழ்க்கை முறையின் கேடுகளைச் சுட்டிக்காட்டும் டாக்டர் கணேசன் அதற்கான தீர்வுகளையும் இந்த நூலில் முன்வைத்திருக்கிறார். உடற்பயிற்சி, சரியான உணவு முறை போன்றவற்றை மட்டுமல்ல சிரிப்பையும்கூட மருந்தாக முன் வைக்கிறார். தனிப்பட்ட உடலுறுப்புகள் மட்டுமன்றி, மூட்டுவலி, மாரடைப்பு, புற்றுநோய், பக்கவாதம், உணவு ஒவ்வாமை, மூப்புமறதி, தூக்கக் கோளாறு, பெண்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி விரிவான வகையில் அலசியிருக்கிறார்.
தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
மருத்துவர் பி. மைக்கேல் செயராசு, விகடன் பிரசுரம்,
தொடர்புக்கு: 044 - 42139697
நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு நம் முன்னோர் மூலிகைகளையே நம்பி இருந்தனர். மூலிகைகள் நோயைக் குணமாக்கியதோடு, நோய் மீண்டும் தாக்காமலும் தடுத்தாட்கொண்டன! நீரிழிவை நீக்கும் விளா, வாத நோயைத் தீர்க்கும் நொச்சி, காமாலையை விரட்டும் கீழாநெல்லி என நம்மைச் சுற்றியுள்ள செடிகொடிகளின் மருத்துவ மகத்துவத்தை விரிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
கொரோனா வைரஸ் - கேள்விகளும் பதில்களும்
இரா. மகேந்திரன், ஜெ. பழனிவேல், காலச்சுவடு பதிப்பகம்,
தொடர்புக்கு: 04652 278525
பெருந்தொற்றுக் காலத்தில் கரோனா வைரஸ், அதற்கான சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து அறிவியலுக்குப் புறம்பான தகவல்கள் காட்டுத்தீயைப் போலப் பரவின. தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் மக்களிடம் அவை ஏற்படுத்தின. இந்தச் சூழலில் அறிவியல் அடிப்படையிலான நம்பகமான தகவல்களின் மூலம் அறிவியலுக்கு வலுசேர்க்கும் விதமாகவும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. சாமானியர்களுக்குப் புரியும் வகையில் எளிய மொழியில் எழுதப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு.
பழமிருக்க பயமேன்
டாக்டர் வி, விக்ரம்குமார், காக்கைக் கூடு, தொடர்புக்கு: 90436 05144
எண்ணிலடங்கா தாதுக்கள்… வைட்டமின்கள்… நார்ச்சத்து… ஆன்டி-ஆக்ஸிடன்ஸ்… என உணவாகக் கொள்ளப்படும் மருந்துகளே பழங்கள். மலக்கட்டு முதல் புற்றுநோய் வரை தடுக்கும் வல்லமை பழங்களுக்கு உண்டு. பழங்களைச் சாப்பிடும் முறை, உணவுக்கும் அவற்றுக்குமான தொடர்பு, அவற்றின் நோய் நீக்கும் குணநலன்கள் போன்றவற்றை அறிந்துகொள்ள இந்த நூல் உதவுகிறது. பழங்களின் வரலாறு, தனித்துவம், சுவை, ஊட்டம் போன்றவற்றைப் பற்றி ஆசிரியர் விவரித்துள்ள விதம் பழங்களைச் சாப்பிடும் ஆவலை அதிகரிக்கும்.
குப்பமுனி அனுபவ வைத்திய முறை
இரா. முத்துநாகு, உயிர் பதிப்பகம், தொடர்புக்கு: 98403 64783
இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே தனியான மருத்துவ அறிவு இருந்துள்ளது என்பதற்கு இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கும் சித்த மருத்துவமே சான்று. நான்கு தலைமுறைக்கு முன்பு வழிப்போக்காக வந்த கதிர்வேல் சாமியார், நமசிவாயம் போன்ற சித்தர்களின் உதவியுடன் தன்னுடைய தாத்தா குப்புசாமி எழுதிய சித்த மருத்துவ சுவடிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும், குடும்பத்தினர் அனுபவரீதியில் செய்துவந்த வைத்திய முறைகளையும் தொகுத்து ஆசிரியர் நூலாக மாற்றியிருக்கிறார். பரம்பரை சித்த மருத்துவர்களின் திறனையும் மேன்மையையும் உணர்த்தும்விதமாக அது அமைந்துள்ளது.
மகாத்மாவும் மருத்துவமும்
தமிழாக்கம்: டாக்டர் வெ. ஜீவானந்தம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தொடர்புக்கு: 044 2625 1968
இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் ‘இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்’ (IJMR) எனும் மருத்துவ இதழ் காந்தியின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ‘Gandhi and Health’ எனும் ஆங்கில நூலை வெளியிட்டது. அதன் தமிழாக்கம் இது. மருத்துவ அறிஞர்களும் காந்தியவாதிகளும் எழுதியிருக்கும் 20 கட்டுரைகளைக் கொண்ட இந்த நூல் காந்திக்கும் மருத்துவத் துறைக்கும் இடையிலான உறவையும், அவருடைய மருத்துவப் பங்களிப்பையும் விவரிக்கிறது. வணிக நோக்கில் செயல்படும் தனியார் மருத்துவத் துறையை இந்த நூல் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது.
இணையச் சிறையின் பணயக் கைதிகள்
டாக்டர் மோகன வெங்கடாசலபதி, இந்து தமிழ் திசை,
தொடர்புக்கு: 74012 96562
இணையமும் ஸ்மார்ட்போன்களும் நம்முடைய வாழ்க்கையை எளிதாக்கி இருப்பதோடு, மனநலத்தையும் சிக்கலுக்கு உள்ளாக்கி இருக்கின்றன. இணையத்தால் மனத்துக்கு ஏற்படும் சிக்கலைப் புரிந்துகொள்ளும் விதமாக ‘சைபர் சைகாலஜி’ எனும் உளவியல் பிரிவே உருவாகியிருக்கிறது. மனிதனும் கணினியும் தொடர்புகொள்ளும் விதத்தில் மனித மனம் அதற்கு எப்படி எதிர் வினையாற்றுகிறது என்பதைப் பற்றியும், அதன் நன்மை தீமைகள் பற்றியும் விளக்கும் ‘சைபர் சைகாலஜி’ பற்றியும் டாக்டர் மோகன வெங்கடாசலபதி எழுதியுள்ளார்.
ஆட்டிசம் ஒரு பார்வை
டாக்டர் ராதா பாலசந்தர், சென்டர் ஃபார் டெவலப்மென்ட் எஜுகேஷன் அண்ட் கம்யுனிகேஷன், தொடர்புக்கு: 044 2835 3136
ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்குத் தான் அளித்த சிகிச்சை அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலை ஆசிரியர் எழுதியிருக்கிறார். ஆட்டிசத்துக்குத் தனியொரு நிபுணரின் வழிகாட்டல் மட்டும் போதாது. மனநல ஆலோசகர், நரம்பியல் நிபுணர், மனநல மருத்துவர், பேச்சுப் பயிற்சி சிகிச்சையாளர் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட குழு மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். இசை, நடனம், யோகா போன்றவை ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் கவனக்குவிப்பை அதிகரிக்கும் என்பன போன்ற விளக்கங்கள் பயன்படும் வகையில் உள்ளன.
இதம் தரும் இதயம்
டாக்டர் க. மகுடமுடி, மகுடம் பதிப்பகம், தொடர்புக்கு: 94420 83889
பரபரப்பான இன்றைய வாழ்க்கைமுறையும் சூழலும் நம்மை எவ்வாறு பாதிக்கின்றன, அவற்றை எப்படித் தவிர்ப்பது என்பதை உளவியல் கூறுகளோடு ஆசிரியர் சிறப்பாக விவரித்துள்ளார். நோய், அதற்கான காரணிகள், அதிலிருந்து மீளும் வழிகள் போன்றவற்றைத் தெளிவாக விவரிப்பதோடு, இதயம் பாதிக்கப்படும்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார். இதயத்தின் பாகங்கள், செயற்பாடுகள், மருத்துவச் சிகிச்சைகள், தடுப்பு முறைகள் என அனைத்தையும் இந்த நூலில் உதாரணங்களோடு விளக்கியிருக்கிறார்.
ஊன் உடம்பு
மருத்துவர் A.B. ஃப்ரூக் அப்துல்லா, துருவம் வெளியீடு,
தொடர்புக்கு: 98419 43437
கரோனா காலத்தில் பரவிய வதந்திகளைத் தன்னுடைய எளிமையான எழுத்தின் மூலம் ஃபரூக் அப்துல்லா எதிர்கொண்ட விதம் மக்களுக்கு நம்பிக்கை அளித்தது. அதன் நீட்சியாக அவர் எழுதியிருக்கும் இந்த நூலில், பொதுநல சிகிச்சைகள், சந்தேகங்கள் குறித்து சாமானியர்களுக்குப் புரியும் மொழியில் விளக்கியுள்ளார். புற்றுநோய், நீரிழிவு, பேலியோ சீருணவு, டயாலிசிஸ், பக்கவாதம், முடக்கு வாதம், சிறுநீர்ப் பாதைத் தொற்று உள்ளிட்ட நோய்கள் குறித்து அவர் அளித்துள்ள விளக்கங்கள் பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago