கல்வித் துறை சார்ந்து எழுதிவருபவர்களில் முக்கியமானவர் ஆயிஷா இரா.நடராசன். அறிவியல், சிறார் இலக்கியம் ஆகிய பிரிவுகளுடன் கல்வித் துறை சார்ந்து தொடர்ந்து எழுதியும் செயல்பட்டும் வருகிறார். டிஜிட்டல் யுகத்தில் உலக அளவில் கல்வித் துறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் விவரிக்கும் வகையில் அவர் எழுதியுள்ள ‘கல்வி 4.0’ என்னும் நூல், கடந்த ஆண்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. அவருடைய மொழிபெயர்ப்பில் மரியா மாண்டிசோரியின் ‘மழலையர் கல்வி’ எனும் நூல் தற்போது வெளியாகியுள்ளது. 45ஆவது சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி கல்வித் துறை நூல்கள் தொடர்பாக அவரிடம் உரையாடியதிலிருந்து:
இன்றைய சூழலில் கல்வித் துறை சார்ந்து போதுமான அளவு நூல்கள் வெளிவருகின்றனவா?
இன்றைக்குக் கல்வித் துறை சார்ந்து மிகப் பெரிய விவாதம் நடத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. கல்வி பொதுப் பட்டியலில் இருக்க வேண்டுமா, மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டுமா என்கிற விவாதம் நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு என்றைக்குமே கல்வியில் பின்தங்கியதில்லை.
விடுதலைப் போராட்ட காலத்திலேயே பாரதியார், வ.வே.சு. உள்ளிட்டோர் கல்வித் துறையில் ஈடுபட்டார்கள். இன்றைக்கும் கல்வித் துறை சார்ந்து அக்கறையோடு அணுகுகின்ற சமூக விழிப்புணர்வு நம்மிடையே இருக்கிறது. கல்வித் துறை சம்பந்தப்பட்டு நிறைய நூல்கள் வந்துகொண்டுதான் உள்ளன. இது சார்ந்து அவரவர் கொள்கை நிலைப்பாடுகளை முன்வைப்பதில் தவறில்லை. ஆனால், கல்வித் துறை சார்ந்த நூல்களில் நிறைய போதாமை நிலவுவதையும் மறுப்பதற்கில்லை.
கல்வித் துறை சார்ந்த நூல்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?
கல்வித் துறை சார்ந்த நூல்களுக்கான வரவேற்பு போதுமான அளவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கல்விச் செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் தொடங்கி கல்வி தொடர்பாக அமைக்கப்படும் குழுக்களில் இடம்பெறுபவர்கள்வரை பலரும் கல்வித் துறை சார்ந்த நூல்களை வாசிக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்துவரும் இளைஞர்கள் கல்வித் துறை சார்ந்து விவாதிக்கிறார்கள். கல்வியின் நவீன வடிவங்களான பைஜுஸ், கிண்டில் போன்ற தளங்கள் வழியாக இந்த நூல்கள் வாசிக்கப்படுகின்றன. சில ஆயிரம் பேராவது கல்வித் துறை நூல்களை வாசித்துவருகிறார்கள்.
இந்த எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது? குறிப்பாக ஆசிரியர், மாணவர்களிடம் கல்வித் துறை தொடர்பான நூல்களை எப்படிக் கொண்டுசேர்ப்பது?
ஒரு காலத்தில் ஆசிரியர்கள் நடமாடும் கலைக்களஞ்சியங்களாக இருந்தார்கள். இன்றைய சூழலில் பெரும்பாலான ஆசிரியர்கள் பாடநூல்களைத் தாண்டி எதையும் வாசிப்பதில்லை. பொது நூல்களை வாசிக்கும் ஆசிரியர்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள். தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்தின் நோக்கங்கள் சார்ந்தே செயல்பட வேண்டியுள்ளது. அடித்தட்டு மாணவர்களுக்குக் கல்வி புகட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு அரசு உத்தரவுகள், கோப்புகளைப் படிக்கவே நேரம் சரியாக உள்ளது.
இரு தரப்பினரையுமே வாசிப்பு நோக்கி நகர்த்த வேண்டியுள்ளது. ஆசிரியர்களுக்கான வாசிப்பு இயக்கங்கள், வாசிப்பு முகாம்களை நடத்த வேண்டும். நான் எழுதிய ‘இது யாருடைய வகுப்பறை’ என்னும் நூலுக்கு இதுவரை 13 வாசிப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆசிரியர் அமைப்புகள், அறிவியல் துறை சார்ந்த அமைப்புகள் இத்தகைய முகாம்களை நடத்தலாம். ஆசிரியர்கள் இடையே வாட்ஸ்அப் குழுக்கள் அதிகரித்துவருகின்றன. இப்படிப்பட்ட வாட்ஸ்அப் குழுக்களின் மூலமாக வாசிப்பு முகாம்களை ஒருங்கிணைத்து வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கலாம்.
மாணவர்களை வாசிக்க வைப்பதற்கான முதல் தேவை பெற்றோர், பெரியவர்கள், ஆசிரியர்கள் வாசிப்பது. நம்மைப் பார்த்துத்தான் குழந்தைகள் புத்தகத்தைக் கையில் எடுப்பார்கள். தாம் வாசித்த புத்தகங்கள் குறித்துக் குழந்தைகளிடம் பெற்றோர் விவாதிக்க வேண்டும். குழந்தைகளைப் புத்தக சந்தைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களே புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி, வாங்கிக்கொடுக்க வேண்டும். அவர்களே தேர்ந்தெடுக்கும் புத்தகங்களை நிச்சயம் வாசிப்பார்கள். வாசிப்பதில் அவர்களுக்குப் பிரச்சினை இருந்தால், உடன் இருந்து உரக்கப் படிக்க வைத்து பழக்க வேண்டும். போகப்போக அவர்களே மனத்துக்குள் படிக்கத் தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளுக்கென்று சிறு புத்தக அலமாரியையும் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
கல்வி குறித்த புரிதலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மேம்படுத்தும் வகையிலான கல்வி நூல்கள் போதுமான அளவு வெளியாகின்றனவா? இத்தகைய நூல்கள் இன்னும் என்னென்ன வகையில் மேம்படுத்தப்பட வேண்டும்?
நல்ல நூல்களை எழுதுவதற்கான சிந்தனையை, சிந்தனை முறையை வளர்ப்பது சார்ந்து எழுதக்கூடிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. யு.பி.எஸ்.சி. தேர்வுகளையும் நுழைவுத் தேர்வுகளையும் எழுதும் பலர் கல்வித் துறை தொடர்பான நூல்களை வாசிக்கிறார்கள். ஆனால் இவர்கள் அரசு அதிகாரியானவுடன் கல்வித் துறை குறித்துப் பேசுவதை நிறுத்திவிடுகிறார்கள். இவர்களை உள்ளடக்கி கல்வித்துறையில் ஈடுபட்டுவருபவர்களும், பங்கேற்றுவருபவர்களும் தரமான கல்வி நூல்களை எழுத முன்வர வேண்டும். அதற்கு உதவும் வகையிலான பயிலரங்குகள் நடத்தப்பட வேண்டும்.
நாம் சொல்வதை தானாகத் தட்டச்சு செய்யும் கணினி மென்பொருள்கள் வந்துவிட்டன. எழுத/தட்டச்சு செய்ய நேரமில்லை என்று சொல்வோரிடம் இதுபோன்ற தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்க வேண்டும். கேரளம், மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்ததைப் போல் தமிழ்நாட்டிலும் சிறந்த கல்வித் துறை நூல்களை அதிகரிப்பதற்கான இயக்கங்கள் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி வாசித்து அறிந்ததில் புதிய விஷயங்களைக் தமிழில் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தால், யாராக இருந்தாலும் சிறந்த கல்வித் துறை எழுத்தாளராக முடியும்.
தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
35 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago