இசையில் சங்கமித்த இருவர்!

By வா.ரவிக்குமார்

நாம் இருவர் வந்தோம்
வாழ்க்கையை உணர்ந்தோம்
காற்றினில் வரும் இசையை
சேர்ந்து நாம் ரசித்தோம்

சமூக வலைத்தள இசை செயலிகளில் வெளியாகியிருக்கும் ‘நாம் இருவர்’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் இடம்பெற்றிருப்பது, ‘ஜகோ’ இசைத் தொகுப்பில். பாடலை எழுதி இசையமைத்து சகப் பாடகி அமிராவுடன் பாடியிருக்கிறார் அம்ரித் ராம்நாத்.

பாடகர், இசையமைப்பாளர், இசை ஆல்பங்கள் தயாரிப்பாளர் எனப் பல முகங்கள் அம்ரித்துக்கு உண்டு. வயலின் மேதை லால்குடி ஜெயராமனிடம் இசைப் பயிற்சி பெற்றவர். பாடுவதற்கான பயிற்சியை இவருடைய தாய் பாம்பே ஜெயஸ்ரீயிடமே பெற்றுக்கொண்டவர். இசை உலகில் புகழ் பெற்ற ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், கௌஷிகி சக்ரவர்த்தி, சங்கர் மகாதேவன் உள்ளிட்ட இசை அறிஞர்களுடன் இணைந்தும் நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பவர். ஏழு மொழிகளில் பாம்பே ஜெயஸ்ரீ பாடி, இவர் தயாரித்த ‘மூன் சைல்ட்’ என்னும் இசை ஆல்பம் ஏற்கெனவே பலமொழி ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட ஒன்று.

டெல்லியைச் சேர்ந்த அமிரா கில் பாடகர், பாடலாசிரியர். 15 வயதிலிருந்தே டெல்லி, பெங்களூரு, மும்பை போன்ற இந்தியாவின் மெட்ரோ நகரங்களின் இசை மேடைகளைத் தன்வசமாக்கியவர் அமிரா. கடந்த 2015-ல் பாஸ்டனில் செயல்படும் பெர்க்லி இசைக் கல்லூரியில் படிக்க நிதிநல்கையும் இவருக்குக் கிடைத்தது. அதன்மூலம் இசையின் மூலம் சிகிச்சை அளிக்கும் இளநிலைப் பட்டதாரியானார்.

இந்த இருவரும் ஒருவரை யொருவர் முன்பின் பார்த்த தில்லை. வெவ்வேறு நகரங்களில், மொழி, கலாச்சார பின்னணியில் வாழ்ந்த இவர்களை, ‘இவர்தான் அம்ரித்’ என்று அமிராவுக்கும், ‘இவர்தான் அமிரா’ என்று அம்ரித்துக்கும் சமூக வலைத்தளங்களில் பதிவான அவர்களின் இசைக் காணொலிகளே பரஸ்பரம் அறிமுகப்படுத்தின. இருவரும் இணைந்து 'ஜகோ' என்னும் இசைப் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.

“தொகுப்பின் பெயரில் அமைந்திருக்கும் ‘ஜகோ’ பாடலைக் கடந்த மாதம் வெளியிட்டோம். தற்போது தொகுப்பின் இரண்டாவது பாடலான 'நாம் இருவர்’ பாடலை வெளியிட்டிருக்கிறோம். அடுத்தடுத்த பாடல் தொகுப்புகளை விரைவில் வெளியிட உள்ளோம்” என்கிறார் இசைத் தொகுப்பின் தயாரிப்பாளர் அம்ரித் ராம்நாத்.

இத்தொகுப்பில் தமிழ், இந்தி, வங்க மொழிப்பாடல்கள் உள்ளன. இசைத் தொகுப்பின் தலைப்பாகவே அமைந்துள்ள ‘ஜகோ’ வங்க மொழிப் பாடலை தந்தை அமர்நாத் எழுத, மகன் அம்ரித் அதற்கு இசையமைத்து அமிராவுடன் பாடியிருக்கிறார். தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 'நாம் இருவர்’ பாடலை எழுதி இசையமைத்து அமிராவுடன் இணைந்து பாடியிருக்கிறார் அம்ரித்.

அமிரா கில் எழுதி இசைமைத்திருக்கும் ஆஸ்மான் இந்திப் பாடலை எழுதி இசையமைத்து அம்ரித்துடன் இணைந்து அமிரா பாடியிருக்கிறார். தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ‘என்னுள் இனிக்கும் இன்பமே’ பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார் அம்ரித்.

“இன்றைய வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் எந்தச் சவாலிலிருந்தும் நாம் மீள வேண்டிய அவசியம், பரஸ்பரம் நட்பு, காதல், மனித நேயம், இயற்கையின் பல்வேறு அம்சங்களை உணர்ந்து அதன் சமநிலையைப் பேணுவதற்கான வாழ்க்கை முறையை நாம் கைகொள்ள வேண்டிய கருத்துகளை முன்வைத்து இந்த ஜகோ இசைத் தொகுப்பில் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன” என்கிறார் அம்ரித் ராம்நாத்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE