அறிவியலில் பெண்கள்
அறிவியல் துறையில் பெண்கள், சிறுமிகளின் பங்களிப்பை உறுதிசெய்வதை ஊக்குவிப்பதற்காக பிப்ரவரி 11ஆம் நாளை பெண்கள், சிறுமிகளின் அறிவியல் பங்களிப்புக்கான நாளாக ஐ.நா. சபையின் பெண்கள் பிரிவு கொண்டாடியது. அனைத்துத் திறமைகளையும் கச்சிதமாகப் பயன்படுத்துவதுதான் இப்போதைய உலகளாவிய சிக்கல். கரோனா பெருந்தொற்று, மாறிவரும் காலநிலை போன்றவற்றோடு உலகம் போராடிவரும் இவ்வேளையில் அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் தலைமைப் பொறுப்பில் பெண்களின் பங்களிப்பு முன்னெப்போதையும்விட அதிகமாகத் தேவை. ஆராய்ச்சியிலும் கண்டுபிடிப்புகளிலும் திறமைவாய்ந்த பெண்களை அடையாளம் காண்பதுடன் சமூகம் உருவாக்கிவைத்திருக்கும் கற்பிதங்களை உடைத்து, அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்ய வேண்டிய தருணம் இது என்று ஐ.நா. அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களில் 33 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். அதிலும் பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவான நிதிநல்கையே வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பிலும் தொழில்நுட்பப் பிரிவிலும் பெண்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே அமர்த்தப்படுகிறார்கள். செயற்கை நுண்ணறிவுத் துறையில் 22 சதவீதப் பெண்களே பணியாற்ற, பொறியியல் பட்டப் படிப்பை 28 சதவீதப் பெண்கள் நிறைவுசெய்கிறார்கள். பெண்களின் இந்தக் குறைவான பங்களிப்பு தற்போதைய நவீன சிக்கல்களுக்கு நீடித்த, அனைத்தையும் உள்ளடக்கிய தீர்வுகளைக் காண்பதில் பெரும் இடைவெளியை ஏற்படுத்துகிறது. அதைக் களையும் வகையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய நான்கு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் பிப்ரவரி 11ஆம் நாளை ஐ.நா. தேர்ந்தெடுத்துள்ளது. ஒவ்வொர் ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து இந்த நாள் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஏழாம் ஆண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருளாக நீரைத் தேர்ந்தெடுத்துள்ளது ஐ.நா. தூய்மையான குடிநீரையும் சுகாதாரத்தையும் பெறுவதற்கான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் ‘நீரால் இணைவோம்’ என்பதைக் கருப்பொருளாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் அறிவியல் துறையைச் சார்ந்த வல்லுநர்கள், அரசு உயர் அதிகாரிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள் எனப் பலருக்கும் ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது. நீடித்த வளர்ச்சியின் மூன்று தூண்களான பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, சுற்றுச்சூழல் ஒருமைப்பாடு ஆகியவற்றை அடையும்வகையில் நீர் இணைப்பு குறித்து அவர்களிடம் விவாதிக்கப்படும் எனவும் ஐ.நா. அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் பெண்களுக்கு அளிக்கப்படும் இது போன்ற அங்கீகாரம் பெண்களின் பங்களிப்பை இந்தத் துறையில் உயர்த்தக்கூடும்.
மூத்த வேட்பாளர்
ஓய்வெடுக்க வேண்டிய வயதில் ஓட்டுச் சேகரிக்கத் தயாராகிறார் 94 வயது காமாட்சி சுப்பிரமணியன். சென்னையைச் சேர்ந்த இவர், பிப்ரவரி 19 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெசன்ட் நகர், அடையாறு பகுதிகளை உள்ளடக்கிய 174ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார். எந்தக் கட்சியையும் சாராமல் சுயேச்சையாகப் போட்டியிடும் இவர், தனது சமூக சேவைப் பணிகளுக்காக அந்தப் பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். 2012 முதல் செயல்பட்டுவரும் ‘ஸ்பார்க்’ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்களில் காமாட்சியும் ஒருவர்.
தேர்தலில் வெற்றிபெற்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால், “அதை மக்கள்தான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு என்ன தேவை என்று அவர்கள் சொன்னால் அதற்கேற்ப செயல்படுவேன். எதிலுமே மக்களின் பங்களிப்பு மிக அவசியம். இந்தப் பகுதியில் வெற்றிபெற்ற கட்சிகள் எதுவுமே மக்களின் குறையை முழுமையாக நிவர்த்திசெய்யவில்லை. அதனால்தான் நாங்களே களத்தில் இறங்க முடிவெடுத்துள்ளோம்” என்று சொல்கிறார். இன்றைய இளைஞர்கள் அரசியல் அறிவும் ஆர்வமும் இல்லாமல் இருப்பதை வேதனையுடன் குறிப்பிடும் காமாட்சி, படித்தவர்களில் பலர் தங்கள் அடிப்படை ஜனநாயகக் கடமையைக்கூட நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது என்கிறார். அவர்களையும் வாக்களிக்க அழைத்துவருவதுதான் தன் நோக்கம் எனக் குறிப்பிடுகிறார். காமாட்சியின் ஆதரவாளர்களும் நலம் விரும்பிகளும் அவருக்காக சமூக ஊடகங்களில் வாக்குசேகரித்துவருகின்றனர்.
தாமதத்தால் பறிபோன உயிர்
உத்தர பிரதேசத் தேர்தல் சத்தத்தில் காணாமலாக்கப்பட்ட பெண்ணின் குரல் தற்போதுதான் ஆட்சியாளர்களைச் சென்றடைந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் உனாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் 22 வயது மகளைக் காணவில்லை என்று டிசம்பர் 8 அன்று புகார் அளித்தார். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஃபதே பகதூர் சிங்கின் மகன் ரஜோல் சிங் மீது தனக்குச் சந்தேகம் இருப்பதாக அந்தப் பெண் தெரிவித்திருந்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் ஜனவரி 24 அன்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வின் காரை மறித்து நீதிகேட்டார். அதன் பிறகே இந்த வழக்கு ஓரளவுக்கு வெளிச்சத்துக்கு வந்தது. ரஜோல் சிங் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்குச் சொந்தமான நிலத்தில் அந்த இளம்பெண்ணின் உடல் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 10) கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு, கழுத்தெலும்பு முறிந்துள்ளதாக உடற்கூராய்வு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. காவல்துறையும் அரசும் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் தன் மகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று அந்தப் பெண்ணின் தாய் ஆற்றாமையுடன் சொல்லியிருக்கிறார். உனாவ்வில் பட்டியலினப் பெண் கொல்லப்படுவது இது முதல் முறையல்ல. பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 2017ல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதையும், கடந்த ஆண்டு இதே மாதம் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் கொல்லப்பட்டதையும் குறிப்பிடும் சமூக ஆர்வலர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் உயிர் மிக மலிவானதாகக் கருதப்படும் போக்கைக் கண்டித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago