பாப்கார்ன்

By செய்திப்பிரிவு

இளம்பெண்ணின் த்ரில் சாதனை

விமானத்தில் தனி ஒருவராக உட்கார்ந்துகொண்டு உலகை வலம் வர முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் பிரிட்டன் - பெல்ஜியம் என இரட்டைக் குடியுரிமைப் பெற்ற ஷாரா ரூதர்ஃபோர்டு என்கிற இளம்பெண். இதெப்படி சாத்தியமானது? ஷாராவின் அப்பாவும் அம்மாவும் பைலட்டுகள். பிறகென்ன? சிறு வயதிலேயே விமானம் ஓட்டக் கற்றுக்கொண்டார் ஷாரா. உலகைச் சுற்றி வர 375 கிலோ எடையுள்ள குட்டி விமானத்தை ஷாரா வடிவமைத்தார் என்பதுதான் இதில் ஹைலட். அந்த விமானத்தில் பைலட்டாக உட்கார்ந்து ஆகஸ்ட் மாதத்தில் பெல்ஜியத்திலிருந்து உலகப் பயணத்தைத் தொடங்கினார். 41 நாடுகள், 52 ஆயிரம் கிலோ மீட்டரைக் குட்டி விமானத்தில் கடந்துவிட்டு மீண்டும் பெல்ஜியத்துக்குக் கடந்த வாரம் திரும்பினார் ஷாரா. இதன்மூலம் மிகக் குறைந்த வயதில் தனியாக விமானத்தில் உலகைச் சுற்றிவந்த இளம்பெண் பைலட் என்கிற சாதனையையும் புரிந்திருக்கிறார் இவர்!

புட்டு ஐஸ்கிரீம் பராக்

கேரளத்தின் பாரம்பரிய உணவு என்று சொன்னதுமே, புட்டும் வாழைப்பழமும் நம் கண் முன்னே வந்து நிற்கும். அரிசிப் புட்டு, கோதுமை புட்டு, ராகி புட்டு எனப் புட்டுகள் பல வகைகளில் உள்ளன. ஆனால், கேரளத்தில் தற்போது புட்டு ஐஸ்கிரீம் டிரெண்டாகி இணையத்தைக் கலக்கிவருகிறது. இந்த இணைய உலகில் விதவிதமான உணவுகளை அறிமுகப்படுத்தும் ஃபுட்டீகள் பெருகிவிட்டார்கள். ‘Foodie sha’ என்கிற கேரள இளைஞர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கேரளத்தின் ஓர் உணவகத்தில் புட்டு ஐஸ்கீரிமைத் தயார் செய்யும் வீடியோவைப் பதிவேற்றியிருந்தார். வித்தியாசமான இந்த புட்டு ஐஸ்கிரீமைப் பார்த்தவர்கள் அதிக அளவில் பகிர, இந்த வீடியோ வைரலானது. சரி, இந்தப் புட்டு ஐஸ்கிரீமை எப்படிச் செய்கிறார்கள்? புட்டுக் குழாயில் அரிசி மாவை நிரப்புவதற்குப் பதிலாக ஐஸ்கிரீமை இடுகிறார்கள். இடையிடையே தேங்காய்த் துருவலுக்குப் பதில் கார்ன்ஃபிளேக்ஸ் மற்றும் சாக்கோசிப்களை நிரப்பிவிடுகிறார்கள். அவ்வளவுதான், புட்டு ஐஸ்கிரீம் தயாராகிவிடுகிறது.

குடைக்குள் குடும்பம்

ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகு உறவினர்களுடன் நேரம் செலவிடுவதே குறைந்துவிட்டது. அதே வேளையில் சுபகாரியம், துக்க நிகழ்வு, பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவிக்க உறவினர்கள் மத்தியில் வாட்ஸ் அப் குழுக்களும் பெருகிவிட்டன. இந்தச் சூழலில் குடும்பத் தகவல்தொடர்புக்காக தர் வேம்புவின் சோஹோ நிறுவனம் பிரத்யேக சமூக வலைத்தளத்தை உருவாக்கிவருகிறது. சோதனைக் கட்டத்தில் உள்ள இது, விரைவில் வெளியாக உள்ளது. வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் உறவுகளைச் சமூக வலைத்தளம் மூலம் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சிதான் இது. இதில், ‘Zillum’ என்கிற மென்பொருள், குடும்பத் தகவலுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குடும்பத்துக்கெனத் தனியாக மின்னஞ்சல், உடனடித் தகவல் அனுப்புதல், தரவுகள் சேமிப்புத் தளம், பாஸ்வேர்ட் நிர்வாகம் என ஒரு குடும்ப கிளவுட் சேவையை இது வழங்கவுள்ளது. இதற்கு ‘சோஹோ இல்லம்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE