2021 பெண் எழுத்து

By செய்திப்பிரிவு

சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என எந்த வடிவில் வெளிப்பட்டாலும் பெண் எழுத்து என்பது தவிர்க்க முடியாத அடையாளத்தைக் கோருவதாக இருக்கிறது. பெண்ணுலகத்தை, அது எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பெண்ணைவிட வேறு யாரும் துலக்கமாக எழுதிவிட முடியாது. அதுதான் பெண் எழுத்தின் தனித்துவம். அந்த வகையில் 2021இல் பெண்கள் எழுதிய, பெண்கள் சார்ந்து எழுதப்பட்டுக் கவனம் ஈர்த்த புத்தகங்களில் சில இவை:

வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி
நக்கீரன், காடோடி வெளியீடு, ரூ.70, தொடர்புக்கு: 8072730977

இதயம்கூட வெறும் சதையாகவே பார்க்கப்படும் பெண்களைப் பற்றிய குறுநாவல் இது. சிதைக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கை, அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டது. உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட, குருதிக்கறை படிந்த அந்த வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்நாவல் புரட்டிக்காட்டுகிறது.

பேய் மொழி, மாலதி மைத்ரி கவிதைகள்
தொகுப்பு: க. ஜகவர், ரூ. 450, எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 04259 - 226012, 99425 11302

ஆண்நிலையால் உருவாக்கப்பட்ட பெண்நிலை மொழியைத் தகர்த்து பெண்மொழிப் பொருளுள்ள உலகை உருவாக்கி, முரண்படுதலின் வழி பெண்ணிய எழுத்தின் வலிகளைக் களைந்து எழுகிறது பேய்மொழி. இடமற்ற இடத்தையும் மொழிகலைந்த மொழியையும் கடந்து மொழிபெருகும் மொழியால் இடம் பெருகும் இடத்தை உருவாக்குதலும் கண்டடைதலுமே பேய் அலைச்சல். இதுதான் பெண்மொழியா என்கிற கேள்விக்கு, இருக்கட்டும் அது பேய் மொழியாகவே என்கின்றன மாலதி மைத்ரியின் கவிதைகள்.

கழிவறை இருக்கை
லதா, நோராப் இம்ப்ரிண்ட்ஸ் வெளியீடு, ரூ.225, தொடர்புக்கு: 97909 19982.

குடும்ப அமைப்புக்குள் மலிந்து கிடக்கிற ஆதிக்கத்தையும் பெண்ணுடல் மீதான சுரண்டலையும் அலசுகிறது இந்நூல். ஆங்கிலத்தில் ‘The toilet seat’ என்கிற தலைப்பில் தான் எழுதிய நூலைத் தமிழில் ‘கழிவறை இருக்கை’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார் லதா. ஆண் - பெண் உறவு குறித்து இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் கற்பிதங்களைக் கேள்விகேட்பதன் வாயிலாக, எந்தவொரு அமைப்புக்குள்ளும் கட்டற்ற சுதந்திரத்துடன் வளையவரும் ஆணாதிக்கச் சிந்தனையைத் தோலுரிக்கிறார்.

சோளம்
சந்திரா தங்கராஜ், எதிர் வெளியீடு, ரூ. 399, தொடர்புக்கு: 04259 - 226012, 99425 11302

சந்திராவின் சிறுகதைத் தொகுப்பு இது. கதைகள் முழுக்க வெக்கை மிகுந்த வாழ்வின் நசநசப்பையும் குரூரத்தையும் மிக மிக அருகிருந்தும் அனுபவித்தும் எழுதியிருக்கிறார். முல்லைப் பெரியாறு நதியிலிருந்து இரு கை நிறைய தண்ணீரை அள்ளிக்கொண்டு ஒரு சொட்டுகூடச் சிந்தாமல் ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவு கடந்து வந்து சென்னையில் சேர்த்ததுபோல் இருக்கின்றன இவரது கதைகள்.

மாத்தா ஹரி (புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை)
நாகரத்தினம் கிருஷ்ணா, பரிசல் வெளியீடு, ரூ. 350, தொடர்புக்கு: 93828 53646

புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பவானி தேவசகாயத்தின் வாழ்க்கையே இந்நாவல். தன் தாய் பவானியின் மரணம் குறித்த ஹரிணியின் தேடலும் அவள் சந்திக்கும் மனிதர்களும் நாவலை நகர்த்துகிறார்கள். பெண்கள் பிறரைச் சார்ந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் உடன்பாடில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்த பவானி, புதுச்சேரியில் வழக்குரைஞராகச் செயல் பட்டவர். அவரை தேவசகாயம் மணந்துகொண்ட பிறகு என்னவானது, பவானிக்கும் மாத்தா ஹரிக்கும் என்ன தொடர்பு என்கிற புதிரை அவிழ்க்கிறது இந்நாவல்.

பெண்மைய வாசிப்பும் அரசியலும்
முனைவர் அரங்கமல்லிகா, புலம் வெளியீடு, ரூ.150, தொடர்புக்கு: 98406 03499

இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் பெண் மொழி, உடல், தன்னிலை, அரசியல் எனும் நிலைகளில் பெண் படைப்புகளை நோக்குகின்றன. காத்திரமான மொழியில் தனித்துவமான பார்வையைக் கொண்ட இக்கட்டுரைகள், நவீன இலக்கியத்தைப் பெண் நோக்கோடு காண்பதற் கான ஆதார நூலாகவும் வளரும் ஆய்வாள ருக்கு ஆய்வுப் பார்வையை வழங்குவதாகவும் இருக்கிறது.

மூச்சே நறுமணமானால் (மொழி பெயர்ப்பு கவிதை)
அக்கமகாதேவி, தமிழில்: பெருந்தேவி, காலச்சுவடு, ரூ. 225,தொடர்புக்கு: 82206 66111

பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப் பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை.

சுகிர்தராணி கவிதைகள்
காலச்சுவடு, ரூ. 375, தொடர்புக்கு: 82206 66111

பெண் வாசனை வீசும் சொற்களால் உருவானவை இந்தக் கவிதைகள். ஒடுக்கு முறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுகிர்தராணி 1996 முதல் 2016 வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இந்நூல்.

சாலாம்புரி (நாவல்)
அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, ரூ.400, தொடர்புக்கு: 98426 37637

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியைத் தொடங்கி, பேரறிஞர் அண்ணா தலையிலான குழு முதல் தேர் தலைச் சந்திக்கும் காலகட்டமது. அச்சூழலில் கொள்கையும், அரசியல் சித்தாந்தமும் மனிதர்களின் அன்றாட வாழ்வில் எவ்வகையான தாக்கத்தையும், சிக்கல்களையும் உண்டாக்குகின்றன என்பது குறித்தத் தேடலின் புள்ளி யிலிருந்தே இந்நாவல் தொடங்குகிறது. அதிலும், நெசவுத் தொழிலில் ஈடுபடும் ஒரு குடும்பத்தை முன்வைத்து, அந்தக் குடும்பத்தின் மூத்த மகன், திமுக-வின் செயல்பாடுகளில் ஈடுபடுவதும், அதன் காரணமாகக் குடும்பத்தோடும் உறவு களோடும் உண்டாகும் சச்சரவுகளும், விவாதங்களுமே நாவலாக விரிகிறது.

ரோஸா பார்க்ஸ்
(மிருதுவாய் ஒரு நெருப்பு), மா. லைலா தேவி/ச. மாடசாமி, பாரதி புத்தாலயம், ரூ.50, தொடர்புக்கு: 94980 02424

நிறவெறிப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாதவர் ரோஸா பார்க்ஸ். 1960, 70களில் அமெ ரிக்காவில் நிலவிய பாகுபாடுகள் குறித்தும் அதற்கு எதிராக அமெரிக்க ஆப்ரிக்கர்கள் நடத்திய கள – சட்டப் போராட்டங்கள் குறித்தும் இந்நூல் பேசுகிறது. பேருந்து இருக்கையில் இருந்து எழுந்துகொள்ள மறுத்த ரோஸா பார்க்ஸின் போராட்டத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பரவிய பேருந்து புறக்கணிப்புப் போராட்டம் 386 நாள்கள் நடந்தது. இது போன்ற பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் இந்நூல் எடுத்துரைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE