நீங்கள் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு அதற்கான பணத்தை எப்படி செலுத்துகிறீர்கள்? பணமாகவா அல்லது போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற மொபைல்போன் செயலிகளின் வழியாகவா? ஸ்மார்ட்போன், இணையம் சார்ந்து புழங்கிக்கொண்டிருக்கும் நபர் என்றால் பெரும்பான்மையான நேரங்களில் நீங்கள் இத்தகைய செயலிகளின் வழியே பரிவர்த்தனை செய்பவராக இருக்கக்கூடும்.
போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகள் மூன்று வருடங்களுக்கு முன்பு டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகம் புழக்கத்தில் இருந்தன. ஆனால் தற்போது கிராமங்கள் வரையில் இச்செயலிகள் பரவியுள்ளன. பெட்டிக்கடை, தெருவோரக் கடைகளில் இச்செயலிகள் மூலம் பணம் செலுத்துவதற்கான க்யூஆர் கோட் (QR Code) அட்டையை பார்க்க முடியும்.
இந்தச் செயலிகள் நம் அன்றாட பணப் பரிவர்த்தனை செயல்பாட்டை எளிதாக்கியது மட்டுமல்ல, இந்தியாவின் பணப் பரிவர்த்தனைக் கட்டமைப்பை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதில் நாம் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இத்தகைய பரிவர்த்தனை முறையில் உலகின் முன்னோடி நாடு இந்தியா என்பதுதான். பல வளர்ந்த நாடுகளில் இன்னும் கார்டு மூலமான பரிவர்த்தனையே முதன்மையானதாக இருக்கிறது. எப்படி இந்தியா இத்தகையதொரு பரிவர்த்தனை கட்டமைப்பை உருவாக்கியது? ஒரே பதில், யுபிஐ. போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற செயலிகள் இந்தியா உருவாக்கிய யுபிஐ அடிப்படையாகக்கொண்டு செயல்படுவதால் தான் அச்செயலிகளின் வழியே எளிதாக பரிவர்த்தனை மேற்கொள்ள முடிகிறது.
யுபிஐயின் தோற்றம்
இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பணப் பரிவர்த்தனை முறைகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கில் 2009-ம் ஆண்டில் நேஷனல் பேமெண்ட் கார்பரேசன் ஆஃப் இந்தியா (NPCI) என்ற லாப நோக்கற்ற அமைப்பை மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு இணைந்து உருவாக்கின. 2011-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 1 கோடிக்கு மேற்பட்ட சில்லறை வணிகர்கள் கார்டு மூலமான பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்பவர்களாக இருந்தனர். ஆனால், அந்த சமயத்தில் ஆண்டுக்கு சராசரியாக 6 முறை மட்டுமே அத்தகைய பரிவத்தனையில் மக்கள் ஈடுபட்டனர். அவ்வளவு குறைவான பயன்பாட்டுக்கு முக்கியக் காரணம், அந்த சமயத்தில் 14.5 கோடி இந்திய குடும்பங்கள் வங்கி சேவையை பெற முடியாத நிலையில் இருந்தன.
இந்தச் சூழலில் 2012-ம் ஆண்டு ஆர்பிஐ ஒரு இலக்கை நிர்ணயித்தது: அடுத்த நான்கு ஆண்டுகளில், நேரடி பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக, பாதுகாப்பான அதேசமயம் மிக எளிமையான, அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பணப் பரிவர்த்தனை அமைப்பை உருவாக்க வேண்டும். ஆர்பிஐ-யின் வழிகாட்டுதலின் கீழ் என்பிசிஐ அந்தப் பணியை மேற்கொண்டது. அப்படி உருவானதுதான் யுபிஐ. ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை அமைப்புதான் யுபிஐ(Unified Payment Interface) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டமைப்பானது இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளை ஒரே குடைக்குள் இணைத்து அவற்றுக்கு இடையிலான பரிவர்த்தனை நடைமுறையை எளிதாக்குகிறது. மொபைல்போன் செயலி வழியே ஒரு வங்கியிலிருந்து எந்த வங்கிகளுக்கு வேண்டுமானாலும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதை இது சாத்தியப்படுத்துகிறது.
யுபிஐயின் அசுர வளர்ச்சி
யுபிஐ 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது. யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது. யுபிஐ அறிமுகமான ஓரிரு ஆண்டுகளிலே அது மக்களின் பணப் பரிவர்த்தனை நடைமுறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் யுபிஐ வழியே மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை மதிப்பு ரூ.707 கோடி. 2018 டிசம்பரில் அது ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்தது. 2021டிசம்பர் டிசம்பரில் அது ரூ.8.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மொத்தமாக சென்ற ஆண்டில் மட்டும் யுபிஐ மூலம் ரூ.73 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிவர்த்தனை எண்ணிக்கை 3,800 கோடி ஆகும். 2016 டிசம்பரில் யுபிஐயின் கீழ் 35 வங்கிகள் இருந்தன. 2018 டிசம்பரில் அந்த எண்ணிக்கை 129-ஆக உயர்ந்தது. தற்போது யுபிஐயின் கீழ் 282 வங்கிகள் உள்ளன.
தற்போது இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட யுபிஐ செயலிகள் புழக்கத்தில் உள்ளன. யுபிஐ சந்தையில் போன்பே மற்றும் கூகுள்பே தலா 43 சதவீதம் அளவில் பங்கு வகிக்கின்றன. பேடிஎம் 8 சதவீதம் பங்கு வகிக்கிறது. யுபிஐ மூலம் ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரையில் அனுப்ப முடியும். எனினும், யுபிஐ பரிவர்த்தனையில் 50 சதவீதம் ரூ.200 க்கு கீழான தொகை ஆகும். கூகுள் ஒரு உலகளாவிய நிறுவனம் என்பதால், கூகுள் பே மூலம் ஏனைய நாட்டு மக்களும் நம்மைப் போல எளிமையான முறையில் பரிவர்த்தனை மேற்கொள்வார்கள் என்று நினைத்துவிட வேண்டாம்.
கூகுள்பே இந்தியாவில் செயல்படும் முறையும் ஏனைய நாடுகளில் செயல்படும் முறையும் ஒன்றல்ல. ஏனைய நாடுகளில் கூகுள்பே ஒரு வாலட்டாக (wallet) செயல்படுகிறது. அதாவது நம்முடைய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை அதில் பதிவேற்றம் செய்யவேண்டும். கடைகளில் பில் செலுத்தும்போது கார்டுக்குப் பதிலாக கூகுள்பே மூலம் பணம் செலுத்தலாம். கூகுள்பே போன்று பல செயலிகள் உலகெங்கும் புழக்கத்தில் உள்ளன. ஆப்பிள்பே, சாம்சங் பே ஆகியவற்றை உதாரணமாக கொள்ளலாம். இவை அனைத்தும் வாலட்டாக செயல்படுபவை. இந்த இடத்தில்தான் இந்தியாவின் யுபிஐ தனித்துவம் பெறுகிறது.
யுபிஐயின் தனித்துவம்
நெட்பேங்கிங் முறையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் வழியே நாம் யுபிஐயின் தனித்துவத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.நெட் பேங்கிங்கைப் பொருத்தவரையில் நாம் எந்தக் கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அந்த வங்கிக் கணக்கு விவரங்களை நம்முடைய நெட்பேங்கின் கணக்கில் பதிவு செய்ய வேண்டும். வங்கி அதை ஏற்றுக் கொள்வதற்கு சற்று நேரம் பிடிக்கும். அதன் பிறகுதான் பணம் அனுப்ப முடியும்.
அனைத்துக்கும் மேலாக, நெட்பேங்க் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ள அதற்கான இணையதளத்துக்கோ அல்லது நம் வங்கியின் பிரத்யேக செயலிக்கோ செல்ல வேண்டும். நாம் நான்கு வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், அந்தந்த வங்கிக்கான தளத்துக்கோ அல்லது செயலிக்கோ தனித்தனியே சென்றுதான் பணம் அனுப்ப முடியும். ஆனால், யுபிஐயானது ரியல் டைம் பேமெண்ட் என்றழைக்கப்படும் உடனடி பரிவர்த்தனையை சாத்தியப்படுத்துகிறது.
நெட்பேங்கிங்கில் உள்ள சிரமமான நடைமுறை எதுவும் யுபிஐயில் இல்லை. நமது மொபைலில் யுபிஐ தொடர்பான ஏதேனும் ஒரு செயலியை (போன்பே, கூகுள்பே, பேடிஎம்….) டவுன்லோட் செய்து, நம் மொபைல் எண்ணை அதில் உள்ளிட்டால், அந்த எண் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கு - ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நாம் கணக்கு வைத்திருந்தாலும் அவை அனைத்தும் - அந்தச் செயலியில் வந்துவிடும். அதன் பிறகு நம்முடைய மொபைல் எண்ணுக்கு என்று தனியே யுபிஐ ஐடி உருவாக்கிக் கொள்ளலாம்.
நாம் யாருக்காவது பணம் அனுப்ப விரும்பினால் அவர்களின் வங்கிகள் விவரங்கள் எதுவும் தேவையில்லை. அவர்களின் யுபிஐ ஐடி அல்லது மொபைல் எண் இருந்தால் மட்டும்போதும். அதைப் பயன்படுத்தி அந்த நபருக்கு பணம் அனுப்பலாம். நாம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், எந்த வங்கியிலிருந்து பணம் அனுப்ப வேண்டும் என்பதை நாம் அந்த செயலியில் இருந்தே தேர்வு செய்துகொள்ளலாம். அதேபோல் நமக்கு யாராவது பணம் அனுப்ப வேண்டுமெனில், அது எந்த வங்கிக் கணக்கு ஏற வேண்டும் என்பதே நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.
இதில் உள்ள க்யூஆர் கோடு வசதியானது பணப் பரிவர்த்தனையை மேலும் எளிமை ஆக்குகிறது. ஓட்டலில், சாலையோரக் கடைகளில், சூப்பர் மார்க்கெட்டில், பில் செலுத்துவதற்கு அவர்களுடைய யுபிஐ ஐடியை கூட நாம் உள்ளிடத் தேவை இல்லை. அவர்கள் வைத்திருக்கும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் போதும். அவர்கள் கணக்கு நம் செயலியில் தோன்றி விடும். அதன் மூலம் நாம் பணம் அனுப்பலாம். யுபிஐ கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பிம் (BHIM) செயலி மூலம், ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பணம் அனுப்ப முடியும். அதாவது, நாம் பணம் அனுப்பும் நபருக்கு மொபைல் போன் இல்லையென்றால், அவர்களின் ஆதார் எண்ணை உள்ளிட்டு அதற்கு பணம் அனுப்பலாம். அந்தப் பணம் அவர்கள் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கு சென்றுவிடும்.
நாம் அன்றாடம் புழங்குவதால் இந்த நடைமுறை எல்லாம் நமக்கு எளிதாக தோன்றக்கூடும். ஆனால், வங்கிகளை ஒரே குடைக்குள் கொண்டுவருவதும், பெரிய நடைமுறைகள் ஏதும் இல்லாமல் அவற்றுக்கிடையே பணப்பரிவர்த்தனையை சாத்தியப்படுத்துவதும், வங்கி விவரங்கள் இல்லாமல் மொபைல் எண்ணுக்கு, ஆதார் எண்ணுக்கு பணம் அனுப்பி அது வங்கிக் கணக்கில் வரவாகச் செய்வதும் அவ்வளவு எளிதானது இல்லை.
அமெரிக்கா, சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சி ரீதியாக பின் தங்கிய நாடு. ஆனால், யுபிஐ வழியே - இப்படியான ஒரு கட்டமைப்பை கற்பனை செய்து, அதை சாத்தியப்படுத்தியதில் - இந்தியா உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனாவில் அலிபே, வீசேட் போன்ற செயலிகள் இருந்தாலும் அவை இந்தியாவின் யுபிஐ அளவுக்கு எளிமையானவை அல்ல.
யுபிஐ: ஒரு முன்னுதாரணம்
இந்தியா உருவாக்கிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளில் யுபிஐ மிக முக்கியமான ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகிறது. எஃப்ஐஎஸ் (Fidelity National Information Service) என்ற ஆய்வு நிறுவனம் 2018-ம் ஆண்டில், உலக அளவில் 40 உடனடி பணப் பரிவர்த்தனை அமைப்புகளை ஆய்வு செய்து, அதில் இந்தியாவின் உடனடி பணப் பரிவர்த்தனை அமைப்புதான் சிறந்தது என்று மதிப்பிட்டது. இந்தியாவின் யுபிஐ முறையை முன்னுதாரணம் காட்டி 2019-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வுக்கு கடிதம் எழுதியது.
அதில் இந்தியாவில் யுபிஐ மிகுந்த திட்டமிடலுடன் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்தியாவைப் போல அமெரிக்காவும் யுபிஐ போலான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் கூகுள் குறிப்பிட்டிருந்தது. தற்போது அமெரிக்கா யுபிஐ போல் பெட்நவ் (FedNow) என்றொரு பரிவர்த்தனைக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. அது 2023-ம் ஆண்டில்தான் முழுமையான பயன்பாட்டுவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா யுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு சிங்கப்பூர் அரசும் அந்நாட்டில் பேநவ் (PayNow) என்றொரு கட்டமைப்பைக் கொண்டுவந்தது. பேநவ் மூலம் யுபிஐ போலவே எந்த வங்கியிலிருந்து எந்த வங்கிக்கும் நொடியில் பணம் அனுப்பலாம். தற்போது இந்திய அரசும் சிங்கப்பூர் அரசும் யுபிஐ மற்றும் பேநவ் இடையே இணைப்பை உருவாக்கி இரு நாடுகளுக்கிடையிலான பணப்பரிவர்த்தனை நடைமுறையை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளன.
சமீபத்தில் பூடான் அரசு அந்நாட்டில் இந்தியாவின் யுபிஐ முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
தற்போது யுபிஐ வழியே முதன்மையாக இந்தியாவுக்குள் செயல்படும் வங்கிகளுக்குள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் யுபிஐ கட்டமைப்பை உலகளாவிய தளத்துக்கு விரிவுபடுத்தும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. ஒட்டுமொத்த அளவில், தொழில்நுட்ப கட்டமைப்பு ரீதியாக, இந்தியாவுக்கு புதிய நம்பிக்கையையும் ஆற்றலையும் யுபிஐ கொடுத்துள்ளது!
riyas.ma@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago