டிச. 23: பால்ராஜ் நினைவு நாள்
அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழும்போது அதில் தமிழர்கள் இருக்க வேண்டும் என்பது நம் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இருப்பினும் தமிழகத்திற்கு அடையாளம் தெரியாமல் போன தமிழக அறிவியல் அறிஞர்களும் உண்டு.
நிலாவில் முதன்முதலில் இறங்கியவர்கள் யார் என்றால் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் என்று நமக்குத் தெரியும். அவர்கள் சென்ற ராக்கெட்டில் அதன் தலைமையகமாக விளங்கும் கட்டுப்பாட்டுப் பகுதியை (command module) வடிவமைத்தவரும், ராக்கெட்டை இயக்கிய விமானிகளுக்குப் பயிற்சி அளித்தவரைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. அவர் மதுரையைச் சேர்ந்த பால்ராஜ் சொக்கப்பா.
பால்ராஜ் சொக்கப்பா 1930 செப்டம்பர் 20 அன்று மதுரையில் பிறந்தார். அவரின் தந்தை அமெரிக்க மிஷனின் பொருளாளராக இருந்தார். எனவே, அவர்கள் குடும்பம் அவர்கள் வழங்கிய (quarters) வீட்டில் வசித்தது. அவருடைய தாயார் பெண்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். எனவே, அவர் தன் தாயாரின் பள்ளியிலேயே தொடக்கக் கல்வி பயின்றார் பின் இடைநிலைக் கல்வியைப் புகழ்வாய்ந்த சேசுசபையினர் நடத்தும் தூயமரியன்னை பள்ளியில் பயின்றார்.
அக்காலத்தில் அது பி.யூ.சி. (Pre university course) என அழைக்கப்பட்டது. இடைநிலைக் கல்வியை முடித்தபிறகு சென்னைப் பல்கலைக்கழகத்தில் (Electronic Engineering) மின்பொறியியல் துறையில் இளநிலைக் கல்வி பயின்று முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றாலும் அவருக்கு அக்காலத்தில் அவர் படித்த பொறியியல் துறை சார்ந்த வேலை கிடைப்பது அரிதாக இருந்தது. பின் அவர் வேறு வழியின்றி அரசின் உதவித்தொகையோடு கூடிய பயிற்சியை வழங்கும் பிரிட்டிஷ் நூற்பாலை நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார்.
சுமார் ஏழு மாதங்கள் அங்கு பணியாற்றிய அவர் கல்லூரி ஆசிரியராக வேண்டும் என்கிற எண்ணத்தில் மெட்ராஸில் தனியார் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகச் சேர்ந்தார். இருப்பினும் அவரது பணி தற்காலிகமாக இருந்ததால் உதவித்தொகையுடன் உயர்கல்வி கற்கும் பொருட்டு பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்திருந்தார் (அக்காலத்தில் உயர்கல்வி பெற இந்திய மாணவர்கள் இங்கிலாந்து அல்லது அமெரிக்கா செல்வது வழக்கம்). இறுதியில் அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் பயில அழைப்பு வந்தது (1954). அக்காலத்தில் கப்பல் பயணமாகவே அமெரிக்கா செல்ல வேண்டும். எனவே, தன் தந்தை பணியாற்றும் அமெரிக்க மிஷனின் உதவியோடு கப்பலில் போஸ்டன் வந்து அங்கிருந்து கொலம்பஸ் ஓகியோ ரயிலில் ஓகியோ வந்து சேர்ந்தார்.
மூன்று மாதங்கள் அங்கே பயின்றவர், ஒரு நாள் வகுப்புத் தோழர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது, அவருக்கு மூத்த மாணவர் பெர்கலி (Berkeley) பல்கலைக்கழகத்திற்குச் செல்லாமல் ஏன் இங்கே சேர்ந்தீர்கள் என்றார். ஏனெனில், அங்கே (ஓகியோ) குளிர் மிகக் கொடுமையாக மைனஸ் ஐந்து டிகிரிக்கும் குறைவாக இருக்கும். எனவே, அவர் பெர்கலி பல்கலைக்கழகத்தைத் தொடர்புகொண்டார். அங்கிருந்து அழைப்புவர அங்கே தன் படிப்பைத் தொடர்ந்தார். அங்கே மின் பொறியியலில் (Electronic Engineering) முதுநிலைக் கல்வி பயின்றுகொண்டே வாஷிங்டன்னில் உள்ள சேசுசபையினர் நடத்தும் சியாட்டில் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியும் செய்தார்.
அவர் பெர்கலியில் படித்தபோது விருப்ப ஆய்வாக மின் பொறியியலில் மின்னாற்றல் குறித்து ஆராய்சி செய்தார். அவற்றுள் மின் உற்பத்தி, மின்கடத்தல், மின் பகிர்மானம் போன்றவற்றை நுட்ப்பமாக ஆராய்ந்தார். படிப்பை முடித்த பின் இந்தியாவுக்குச் சென்று பணியாற்ற வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. ஆனால், அவருடைய துறைத் தலைவர் அவரை கம்ப்யூட்டர் துறையில் ஆய்வு செய்து டாக்டர் பட்டத்தை நிறைவு செய்யச் சொன்னார். அக்காலகட்டம் கம்ப்யூட்டரின் தொடக்கக் காலம். பெரிய பெரிய அறைகளில் ஒரு கம்ப்யூட்டரின் பாகங்கள் இணைக்கப்பட்டிருக்கும்.
அந்தப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையிலும், வேதியியல் துறையிலும் மிகச்சிறந்த பேராசிரியர்களும், அவர்களுள் நோபல் பரிசு பெற்றவர்களும் இருந்தனர். டாக்டர் பவுலின் (Linus Carl Pauling), 1954ஆம் ஆண்டு வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர். டாக்டர் லாரன்ஸ் (Ernest Orlando Lawrence) இயற்பியல் துறையில் சைக்ளோட்ரோன் எனும் துகள் இயக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக 1939இல் நோபல் பரிசு பெற்றவர். டாக்டர் ஓபன்ஹெய்மர் (Julius Robert Oppenheimer) இரண்டாம் உலகப்போரில் அணு ஆயுதங்களைத் தயாரித்துக் கொடுத்தவர். அவரை அணு குண்டின் தந்தை என்று அழைத்தனர். டாக்டர் எட்வர்டு டெல்லரை (Edward Teller) ஹைட்ரஜன் அணு குண்டின் தந்தை என்று அழைப்பர். இவர்கள் அனைவரும் லாரன்ஸ் ஆய்வகத்தில் அணு ஆற்றல் இயக்கம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். சொக்கப்பாவிற்கு அந்த ஆராய்ச்சியில் ஈடுபட ஆர்வமிருந்தது. ஆனால், வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் அவர் அங்கே பணியாற்ற முடியவில்லை.
அவர் சியாட்டில் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியபோது அவரின் பேராசிரியருக்கு ஒரு ஒப்பந்தப் பணியாற்ற அழைக்கப்பட்டார். சியாட்டில் சிட்டிலைட் எனும் அணைக்கட்டிற்குத் தானியங்கி முறையில் அணைக்கட்டு செயல்படும் வகையில் அதற்கான கம்ப்யூட்டரை உருவாக்க வேண்டியது அவரின் பணி. அப்பணி அவரின் முனைவர் பட்ட ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகவும் இருந்தது. அந்த அணைக்கட்டு நீர்ப்பாசனம், மின் உற்பத்தி, வெள்ளத் தடுப்பு போன்ற அனைத்துச் செயல்களையும் தானியங்கி முறையில் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் கம்ப்யூட்டர் வரத்தொடங்கிய காலம் என்பதால் அதற்கான பிரத்தியேக கம்ப்யூட்டர் மொழி (Machine code) உருவாக்குவதில் சிக்கல் இருந்தது. ஒவ்வொரு முறை சிக்கல் ஏற்படும்போதும் புதிய வகையில் கம்ப்யூட்டர் மொழியை உருவாக்க வேண்டும். அது அவருக்குக் கடினமாக இருந்தது.
அந்த நேரத்தில் விமானங்களைத் தயாரிக்கும் போயிங் (Boeing) எனும் பன்னாட்டு நிறுவனத்திலிருந்து கல்லூரிக்கு உரையாற்ற வந்த ஒரு வல்லுநர் போர்ட்டான் (Fortran) எனும் கம்ப்யூட்டர் மொழி குறித்து விளக்கினார். அம்மொழி இயற்கணித தொகுப்பி மொழி (algebraic compiler language).
அம்மொழியை அறிந்துகொண்ட அவர் மிக விரைவில் கம்ப்யூட்டர் மொழியை உருவாக்கவும் அதோடு தனது முனைவர் பட்டத்தையும் நிறைவு செய்தார். பின்பு மைட்டர் (MITRE Corporation - ராணுவம் மற்றும் பாதுகாப்புக்காக செயல்படும் தொண்டு நிறுவனம்) எனும் நிறுவனத்தில் அமைப்புப் பொறியியல் (systems engineering) துறையில் ஒரு வேலைவாய்ப்பு வந்தது. அவர் மின் பொறியியல் படித்திருந்தாலும் அவருக்குப் பணி வழங்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்திருந்த சமயம் அமெரிக்கா ரஷ்யா மீது அச்சம் கொண்டிருந்தது. குறிப்பாக ரஷ்யாவின் பலிஸ்டிக்ஸ் ஏவுகணைக்குப் (ballistic missile) பயந்தது. எனவே, பாதுகாப்பு கருதி ஏவுகணைகள் எல்லைப் பகுதியில் வந்தால் முன்னெச்சரிக்கை கொடுக்கும் ரேடார்கள் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு கனடா முழுவதும் பொருத்தும் பணியை மைட்டர் நிறுவனமும் விமானப்படையும் சேர்ந்து செய்தன. அதில் சொக்கப்பா விமானப் போக்குவரத்துப் பிரிவில் (Air Force transport system) பணியாற்றினார். அக்காலத்தில் அனைத்து வகை விமானங்களும் ராணுவக் கட்டுப்பாட்டில் இயங்கின. எனவே, ஆயிரக்கணக்கில் பறக்கும் அனைத்து வகை விமானங்களையும் கட்டுப்படுத்தி எந்த விமானம் எப்போது செல்ல வேண்டும், எப்போது இறங்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டியிருந்தது.
அதோடு வானில் பறந்தபடியே எரிபொருள் நிரப்ப வேண்டும். ஏனெனில், அட்லாண்டிக் கடலைப் போர்விமானங்கள் கடக்கும்போது எரிபொருள் தீர்ந்துவிடும். எனவே, வானில் பறந்தபடியே எரிபொருள் நிரப்பப்பட வேண்டும். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துத் தானியங்கிக் கட்டுப்பாட்டு அமைப்பை கம்ப்யூட்டர் மூலம் உருவாக்குவது அவர் வேலை.
அங்கே நான்காண்டுகள் பணியாற்றினார். பிறகு மீண்டும் மைட்டர் நிறுவனத்தில் டாக்டர் ட்ராப்பர் எனும் விமானப் பொறியியல் பேராசிரியர் பொறுப்பு வகித்தபோது அமெரிக்க ஜனாதிபதி கென்னடி முதன் முதலில் நிலாவிற்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை அறிவித்தார். எனவே, அந்நிறுவனம் அப்பலோ ராக்கெட்டை வடிவமைக்க நிபுணர்களை அழைத்தது. அதில் சொக்கப்பா கலந்துகொண்டார். அவரிடம் பாயிண்ட் பிளாங்க் (துப்பாக்கியிலிருந்து புறப்படும் தோட்டாவிற்கும் தாக்கும் இலக்கிற்கும் இடையில் உள்ள தொலைவு) பற்றிக் கேள்வி கேட்கப்பட்டது.
அவர் அதற்கு பதிலுரைத்ததும் அப்பலோ ராக்கெட் உருவாக்கும் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் ராக்கெட்டின் கட்டுப்பாட்டுப் பகுதியின் (command module) இயக்கச் சமன்பாடுகளை (steering equation) உருவாக்கினார். அப்பலோ பெரிய ராக்கெட். ஏற்கெனவே அலபாமா (Alabama) ராக்கெட்டின் பொறுப்பாளராக இருந்த வெர்னர் வான் பிரவுன் (Wernher Magnus Maximilian Freiherr von Braun) எனும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அறிஞர் சனிக் கோளின் வட்டப்பாதையில் ராக்கெட்டை நிறுத்திக் காட்டினார். அதோடு அப்பலோவை ஒப்பிடுகையில் அமெரிக்காவின் சொந்தத் தயாரிப்பாகவும் அளவில் மிகப் பெரியதாயும் இருந்தது.
அப்பலோ சரியான திசைவேகத்தில் சரியான கோணத்தில் சென்று நிலவின் எந்த வட்டப்பாதையில் எப்போது அடைய வேண்டும் என்கிற முழுக் கட்டுப்பாட்டையும் அவர் உருவாக்கினார். அதோடு விமானிகளுக்குப் பயிற்சியும் அளித்தார். அப்பலோ 1969இல் நிலவில் இறங்கியதிலிருந்து இரண்டாண்டுகள் அங்கு பணியாற்றினார். பிறகு அமெரிக்க ஐக்கிய சபை அவரை இலங்கைக்கு விமானப் பொறியியல் கல்லூரி தொடங்க அனுப்பியது. இலங்கை அரசு அதை முன்னெடுக்காததால் மீண்டும் அமெரிக்காவிற்குத் திரும்பி 2000ஆம் ஆண்டில் அனைத்துப் பணிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். இரண்டாண்டுகளுக்கு முன்னால் இயற்கை எய்தினார் சொக்கப்பா.
அவரிடம் உங்களுக்கு மிகவும் வேதனை தரும் நிகழ்வு எது எனக்கேட்டபோது, “பல ஆண்டுகளுக்குப் பின் என் சொந்த நாட்டுக்குச் சென்றபோது என்னால் என் மொழியில் பேச முடியவில்லை. மனத்துக்குப் புரிவதை வார்த்தையாக வெளிப்படுத்த முடியவில்லை. என் தாய்மொழியைப் பேச முடியாததால் என் சொந்த மண்ணில் அந்நியனாக நின்றேன்” என்றார்.
ஓவியர், முனைவர் வே.செந்தில் செல்வன்,
கட்டுரையாளர், ஓவியர், ஆய்வாளர்,
தொடர்புக்கு: vsselvanmdu@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago