கோலிவுட் ஜங்ஷன்: மாறுபட்ட கூட்டணி!

படத்தை எழுதி, இயக்குவதுடன் அதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் சுந்தர்.சி. அதேநேரம், தன்னுடைய படங்களில் ஒரு முன்னணிக் கதாநாயனுடன் கூட்டணி அமைப்பது, ஒன்றுக்கு மேற்பட்டக் கதாநாயகிகள், வித்தியாசமான கதைக்களம் என எதிர்பார்ப்பை உருவாக்கிவிடுவார். இம்முறை நடிகர் ஜெய்யுடன் ‘பட்டாம்பூச்சி’ என்கிற புதிய படத்துக்காக கூட்டணி அமைத்திருக்கிறார்.

‘1980-களில் கதை நடக்கிறது. தொடர் கொலைகளைச் செய்த சைக்கோ ஒருவனுக்கும்,விருப்ப ஓய்வுபெற்று அமைதியாக வாழ நினைக்கும் ஒரு காவல் அதிகாரிக்கும் நடக்கும் ‘மைண்ட் கேம்’ தான் கதை’ என்கிறார் சுந்தர்.சி. கொடூர சைக்கோவாக, எதிர்மறைக் கதாபாத்திரத்தில் முதல்முறையாக ஜெய் நடிக்க, அவரைச் சட்டத்தின் முன் நிறுத்தக் களமிறங்கும் காவல் அதிகாரியாக சுந்தர்.சியும் நடிக்கிறார்கள். வழக்கம்போல் அவ்னி டெலி மீடியா நிறுவனம் சார்பில் குஷ்பூ சுந்தர்.சி படத்தைத் தயாரிக்கிறார்.

புதுமுகம் அறிமுகம்!

முற்றிலும் புதிய முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் தயாரிப்பாளர் சி.வி.குமார். அவருடைய தயாரிப்பில், மனோ கார்த்திக் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகும் படம் ‘ஜாங்கோ’. தமிழ் சினிமாவில் முதல் ‘டைம் லூப்’ கதைக் களத்தைக் கொண்ட இதில், கதாநாயகனாக அறிமுகமாகிறார் கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார். இவருக்கு ஜோடி மிருணாளினி ரவி. தொழிலதிபர் குடும்பத் திலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் இவர், ‘அறிமுகப் படமே எனக்கு ஐந்து படங்களில் நடித்த அனுபவத்தைக் கொடுத்துவிட்டது’ என்கிறார்.

“இதில் அறுவை சிகிச்சை நிபுணராக வருகிறேன். இதற்காக, பிரபலஅறுவை சிகிச்சை மருத்துவரிடம் சென்று, பல நுட்பமான விஷயங்களைக் கற்றுக்கொண்டு நடித்தேன். சில அறுவை சிகிச்சைகளை நேரில் பார்த்தது திக் திக் என்றிருந்தது. கதைபடி, 24 மணி நேரத்தில் நடக்கும் நிகழ்வுகள் எனக்கு திரும்பத் திரும்ப வருகின்றன. இப்படி 17 நாட்கள் நான் காலச் சுழலில் ஏன் சிக்கினேன், எனக்கு வந்தப் பிரச்சினைகளை எப்படிச் சமாளித்தேன் என்பதுதான் திரைக்கதை. ‘கண்டியூனிட்டி’ இந்தப் படத்தில் சவாலாக இருந்தது.” என்கிறார் சதீஷ்.

ஐந்து மாங்காய்!

தமிழ், தெலுங்கு உட்படத் தன்னுடைய அறிமுகப் படத்தை ஐந்து மொழிகளில் இயக்கி யிருக்கிறார் வி.வி.ருஷிகா. ‘இக் ஷு’ எனத் தலைப்புச் சூட்டப்பட்டிருக்கும் இப்படத்தின் டீசரை வெளியிட்டார், தீரச் செயலுக்காக பாராட்டுகளைப் பெற்றுவரும் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி. “உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறேன். அதனால்தான் ராஜேஸ்வரி படத்தின் டீசரை வெளியிட வேண்டும் என நினைத்தேன்.

‘இக் ஷு’ என்றால் சம்ஸ்கிருதத்தில் ‘கண்’ என்று பொருள். வீட்டுக்கும் நாட்டுக்கும் பெண்கள் கண் போன்றவர்கள். எனது தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியில் படம் இயக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. அந்த வகையில் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படம் இயக்கி, ஒரே கல்லில் ஐந்து மாங்காய் அடித்தது மகிழ்ச்சி. இந்தப் படம் உங்கள் இதயத்தில் இடம் பிடிக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE