நம் வாழ்வு நமதென்போம்!
இயல்பிலேயே ஒவ்வொருவரும் ஆற்றல் மிகுந்தவர்கள். சவால்கள், சங்கடங்கள், கொந்தளிப்புகளைச் சமாளித்து முன்னேறுகிறவர்கள். ஆனாலும், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர், குறிப்பாக ஆண்களைவிட அதிகமான பெண்கள் மன அழுத்தத்தால் (stress) அவதிப்படுகின்றனர்.
நாள்பட்ட மன அழுத்தம் பதற்றம், மனச்சோர்வு, தூக்கக் கோளாறு, செரிமானப் பிரச்சினை, மது மற்றும் போதைப் பழக்கம் உள்ளிட்ட மனநலச் சிக்கல்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் இட்டுச் செல்வதால், மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளைக் கற்பிக்கவும்1998 முதல் ‘உலக மன அழுத்த விழிப்புணர்வு நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
நிகழ்வுகளும் எதிர்வினைகளும்
தேர்வு காலம், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளின் அருகாமை, அலுவலகத்துக்குச் செல்லும் காலைப்பொழுது, போக்குவரத்து நெரிசலில் வாகனம் ஓட்டுதல், கூட்டத்துக்குத் தாமதமாதல், மறுக்க முடியாமல் பல்வேறு பணிகளை ஏற்றுக்கொள்ளுதல், நாம் பேசும்போது மற்றவர்கள் கவனிக்காதது, வாகனம் பழுதடைவது, செல்பேசியில் சார்ஜ் இல்லாதது, குழந்தை அல்லது இணையருடன் ஏற்படும் வாக்குவாதம் உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகளின் மீதான நம் எதிர்வினைகளே மன அழுத்தமாகின்றன. வருவதும் போவதும் தெரியாமல் நம் நிகழ்பொழுதைச் சீரற்றதாக்கும் இவை நுண்கடும் (acute) மன அழுத்தம் எனப்படுகின்றன.
யாருக்கு ஏற்படும்?
வீடுகளில், காப்பகங்களில் நீண்ட நாட்கள் நோயுற்றிருப்பவர்களையும், மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள் மற்றும் சிறப்புக் குழந்தைகள் போன்றோரைப் பல ஆண்டுகளாகப் பராமரிக்கிறவர்கள் நாள்பட்ட (chronic) மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
கல்வி, பணி உயர்வு, வெற்றி, எதிர்பார்ப்புகள், திருமணம், நோயுறுவது, விபத்து, வேலை இழப்பு, நெருங்கியவரின் இறப்பு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ளும்போது, ‘இந்த மாற்றங்கள் இயல்பானவைதாம், நல்வாழ்வுக்கான அச்சுறுத்தல் இல்லை’ என்கிற புரிதல் உள்ளவர்கள் புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள். மற்றவர்கள் மன அழுத்தத்திற்கு இரையாகிறார்கள். அதைப் பற்றியே தொடர்ந்து தீவிரமாக யோசிப்பதால், கவலைப்படுவதால் மனச்சோர்வுக்கு உள்ளாவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
எதிர்கொள்ளும் விதம்
நம் எதிர்பார்ப்புக்கு மாறான நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ளும் விதமே எந்த அளவுக்கு மன அழுத்தத்தில் நாம் அமிழ்ந்திருக்கிறோம் என்பதைச் சொல்லிவிடும். குறிப்பாக, சாதாரண பிரச்சினைகூட உயிர்போகிற காரியம்போல செயல்படுகையில் மிக மோசமானதாக மாறிவிடுகிறது. குழப்பச் சூழலைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும், வெவ்வேறு வழிமுறைகளைச் சிந்திக்கவும் விடாமல் தடுக்கிறது. சொல்ல நினைத்ததைக் கடைசிவரை சரியாகச் சொல்ல முடியாமல் போகிறது. அதேபோல, இரவு பகலாக நாம் விரும்பிச் செய்து முடித்த ஒன்றை மகிழ்ந்து அனுபவிக்க இயலாத மனநிலையில் மருகுகிறோம்.
கையாளும் விதம்
“மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளை எப்படிப் பார்க்கிறீர்கள், எப்படி அதைக் கையாள்கிறீர்கள் என்பதே, அந்நிகழ்வு மன அழுத்தத்துக்கு இட்டுச் செல்லுமா செல்லாதா என்பதை முடிவு செய்யும்” என்கிறார் உளவியலாளர் செலிக்மன். உதாரணமாக, தொடர்வண்டியில் ஏறுவதற்கு முன்பாக பணம் எடுக்க ஏ.டி.எம்., சென்றார் நண்பர் ஜெகன். நீண்ட வரிசையில் நின்றார். நேரம் ஆனது. பணம் எடுக்கத் தெரியாமல் சிலர் தடுமாறினார்கள்.
காத்திருந்த பலரும் அதைப் பெரிதுபடுத்தாமல் அலைபேசியில் பரபரப்பாக இருந்தார்கள். ஜெகனால் ஒரு நிலையில் நிற்க முடியவில்லை. மணியை அடிக்கடி பார்த்தார். தரையை உதைத்துக்கொண்டே நின்றார். தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருந்தவர் ஒருகட்டத்தில், “வேகமா எடுத்துட்டு வாங்கங்க. எப்படி எடுக்குறதுன்னு தெரியலைன்னா, தெரிஞ்சவங்களக் கூட்டிட்டு வந்திருக்க வேண்டியதுதானே” எனக் கத்தினார். வரிசையில் நின்ற சிலர் அவரை விசித்திரமாகப் பார்த்தார்கள்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு தம் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெகன் விபத்தில் சிக்கினார். ஜெகனுக்கு அதிக அடி இல்லை. நண்பர் உயிருக்குப் போராடினார். விரைந்து எழுந்த, ஜெகன் உடனடியாக தன் சட்டையைக் கழற்றி நண்பரின் காயத்தின் மீது கட்டுப் போட்டார். ஆம்புலன்சுக்கும் வீட்டுக்கும் தகவல் சொன்னார். ஆம்புலன்ஸ் வந்த பிறகே உடலும் மனமும் களைத்து அமர்ந்தார். எல்லோரும் அவரின் தைரியத்தைப் பாராட்டினார்கள். தான் சுறுசுறுப்பாக இயங்கியதை ஜெகனாலேயே நம்ப இயலவில்லை.
இரண்டு நிகழ்வுகளுமே மன அழுத்தத்திற்கான காரணிகள்தாம் என்றாலும் இரண்டையும் ஜெகன் பார்த்த, கையாண்ட விதம் வெவ்வேறானவை. முதல் நிகழ்வில், சரியான திட்டமிடல் இல்லாமல் ஏ.டி.எம்., சென்றதால் எழுந்த அழுத்தத்தில் கத்தினார். இரண்டாவது நிகழ்வில், நண்பரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற வேகம் மட்டுமே இருந்தது.
வீடு, அலுவலகம், கடைகள், கூட்டங்களில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் வெவ்வேறு கோணங்களில் பார்க்கப் பழகினால், பல நிகழ்வுகள் மன அழுத்தத்துக்குரியவையாகவே இருக்காது அல்லது குறைந்த மன அழுத்தத்திற்குரியவையாக இருக்கலாம். பயனுள்ள நிகழ்வாகத் தோன்றலாம், மேலும் அச்சூழலைச் சமாளிக்கும் வழிமுறைகள் வசப்படலாம்.
ஆரோக்கியமாக வாழலாம்
ஆரோக்கியமான உணவு, தினமும் உடற்பயிற்சி, தியானம், நிகழ்காலத்தில் கவனம் செலுத்தும் பயிற்சி, போதுமான தூக்கம், அன்பும் ஆதரவுமான குடும்பம், நண்பர்கள், உறவினர்களுடனான நெருக்கம், இணக்கமான உறவு, உதவுதல், மன்னித்தல், நற்சிந்தனையுடன் ஒன்றிணைந்திருக்கும் குழுக்களுடன் செயல்படுவது, புத்தகங்கள் வாசிப்பது போன்றவை மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஆற்றலை நமக்கு அளிக்கும்.
இவற்றுடன் சவால்களைக் கையாளும் நம் திறமை மீதான நம்பிக்கை, ஒரு மனிதராக நம்மைப் பற்றிய நமது எண்ணம், மாற்றங்களின் மீதான நமது பார்வை, பல்வேறு வாய்ப்புகள் குறித்த நமது தேடல் உள்ளிடவை சேரும்போது மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும். இந்தப் பண்புகளை நாம் தினமும் பின்பற்றினால், அவற்றால் கிடைக்கும் ஆற்றலை தினமும் சேமித்தால், அதன் பலன்களை ஆண்டு முழுவதும் நாம் அறுவடை செய்ய முடியும். ஆரோக்கியமாக வாழ முடியும்.
சூ.ம.ஜெயசீலன்,
கட்டுரையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago