வாதநோய் வராமல் தடுப்பது எப்படி?

By செய்திப்பிரிவு

உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு தினம்

வாதநோய் என்பது மூளை - நரம்பியல் நோய். பேச்சு வழக்கில் இதன் பெயர் பக்கவாதம். உலகில் ஒவ்வொரு ஐந்து விநாடிக்கும் ஒருவர் வாதநோய் காரணமாக இறக்கிறார். உலகில் அதிகமானோர் உயிரிழக்கும் இரண்டாவது நோய் இதுதான். ஒவ்வோராண்டும் இந்தியாவில் 18 லட்சம் பேர் வாதநோயால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 2019ஆம் ஆண்டில் 6.99 லட்சம் பேர் இந்த நோயால் உயிரிழந்தார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது இந்நோய். என்றாலும், பெண்கள் - முதியவர்கள் மத்தியில் வாதநோய் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மாரடைப்புக்கு அடுத்தபடியாக மக்களை அதிகம் பாதிக்கும் வாதநோய் வராமல் தடுப்பது எப்படி?

ஏன் வருகிறது?

ஒருவரின் இதய ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு, இதயத் தசைகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் சிக்கல்தான் மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்). இதேபோன்று ஒருவரின் மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படுவதால் மூளைத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடல், கை, கால் செயலிழப்பதுதான் வாதநோய் (ஸ்ட்ரோக்).

ஒருவரின் இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தம், கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் வழியாகப் பாய்ந்து மூளைத் திசுக்கள் ஆரோக்கியத்துடன் செயல்பட உதவுகின்றன. இதனால் ஒருவரின் உடல் உறுப்புகளில் ஏற்படும் அங்க இயக்கங்கள், பேச்சுத்திறன், சிந்தனைத் திறன், மனநிலை, பார்வை, கேட்கும் திறன், உடல் உணர்வுகளின் தன்மை என எல்லாமே சீராகச் செயல்படுகின்றன. அதனால்தான் அன்றாடப் பணிகளை நம்மால் சரியான சுயசிந்தனையுடன் செய்ய முடிகிறது.

டாக்டர் எம்.ஏ. அலீம்

மூளைத் திசுக்களிடையே பரவியுள்ள ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் ஏற்படும் அடைப்புகள், ரத்தக் குழாய்களில் பாயும் ரத்தம் உறைதல், சில நேரம் மூளை ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு மூளைத் திசுக்களிடையே ரத்தம் கசிதல் போன்ற காரணங்களால் மூளைச் செல்களுக்குத் தேவையான ரத்தம் பாய்வதில் தடை ஏற்பட்டுவிடும். மூளையில் ஏற்படும் இந்தப் பாதிப்பால், அதன் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட உடல் பகுதி செயல் இழந்துவிடும். இப்படித்தான் வாதநோய் ஏற்படுகிறது.

இந்தப் பாதிப்பு மூளையின் வலது பக்கம் இருந்தால் உடலின் இடது பகுதியிலும், மூளையின் இடது பக்கம் பாதித்தால் வலது பக்கத்திலும் வாதத்தன்மை, பேச முடியாமை போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.

அறிகுறிகள் என்ன?

தலைவலி, குமட்டல், வாந்தி, தலைசுற்றுதல், இரட்டைப் பார்வை, பார்வைக் குறைபாடு, மனநிலை மாற்றம், சுய உணர்வில் தடுமாற்றம், உடல் உணர்வில் மாற்றம், தள்ளாட்டம், நடையில் தடுமாற்றம், வலிப்பு போன்ற அறிகுறிகளும் தொந்தரவுகளும் திடீரென ஏற்படக்கூடும். இவை வாதநோயின் பொதுவான அறிகுறிகள்.

தவிர, உடலின் ஒரு பகுதியில் கை, கால்களை அசைக்க முடியாதபடி செயல் இழப்பு ஏற்படும். செயலிழந்த பகுதியில் முகம் கோணலாகி, வாயும் அசைக்க முடியாமல் போகலாம். முகப் பகுதியும் வாதத்தால் பாதிக்கப்படும்போது பேசுவதில் சிரமம் ஏற்பட்டு, பேச்சு உளறலைப் போல இருக்கும்.

சிகிச்சைகள் என்ன?

முன்பு வாதநோய்க்கு சிகிச்சை அளிப்பது கடினமாக இருந்தது. அந்த நிலை தற்போது மாறிவிட்டது. வாதநோயைக் குணப்படுத்த முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. வாதநோயால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்க நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

மூளையில் ரத்தம் உறைந்து வாதநோய் ஏற்படும்போது, அந்த ரத்த உறைவைக் கரைக்கவும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் மேம்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உண்டாகும் வாதநோயைக் குணப்படுத்தவும் மேம்பட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எப்படித் தடுப்பது?

வாதநோய் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், ரத்த அழுத்த நோயைத் தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்த நோய்க்குச் சரியான சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க உணவில் உப்பைக் கணிசமாக்க குறைக்க வேண்டும். பொட்டாசியம் சத்து நிறைந்த காய்கறி, பழங்களை உட்கொள்வதன் மூலம் வாதநோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கொழுப்புச் சத்துள்ள இறைச்சியையும் சாப்பிடக் கூடாது. மது அருந்துவது, புகை பிடிப்பது, போதை மருந்து பழக்கம் போன்றவற்றையும் கைவிடுவதன் மூலம் வாதநோய் வருவதைத் தவிர்க்கலாம்.

மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு உடற்பயிற்சி, தியானம், நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. மலச்சிக்கல் வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு மூக்கு அடைப்பு தொந்தரவு இருந்தால், மூக்கு சொட்டு மருந்து, அலர்ஜி நீக்கி மருந்து ஆகியவற்றை மருத்துவர் ஆலோசனையுடன் பெறுவது நல்லது.

இந்த அம்சங்கள் அனைத்தையும் கடைப்பிடித்தால் வாதநோய் வருவதைத் தடுக்கலாம்.

கட்டுரையாளர்: டாக்டர் எம்.ஏ.அலீம்,

மூளை மற்றும் நரம்பியல் நோய் நிபுணர்,

திருச்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்