அச்சமற்ற குழந்தை மட்டுமே கற்றலில் ஈடுபட முடியும். வகுப்பறைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதே அச்சத்தைப் போக்கும், விதிகளைக் கடக்கும் வகுப்பறை சுயகட்டுப்பாட்டை போதிக்கும்.
எஸ்.எஸ். ராஜகோபாலன் (மூத்த கல்வியாளர்)
நம் கல்வியும் விதிகளும்
எழுதப்படாத விதிகள் நம் வகுப்பறைகளில் எப்போதும் மோசமான ஒரு வேலையைச் செய்கின்றன. ஆசிரியரையும் மாணவர்களையும் ஒருவருக்கு எதிராக ஒருவராய்த் திருப்பிவிடுகின்றன. மாணவர்களது அன்றாட நடத்தைகளைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு எந்தச் சட்டமும் சொல்லவில்லை. ஆனாலும் அர்த்தமற்ற அந்தப் பணி எத்தனையோ வகுப்பறை வன்முறைகளுக்குக் காரணமாகிவிடுகிறது.
வகுப்பறையை இயக்குவது எது? வகுப்பறை விதிகள் பாடநூல், பயிற்றுமுறை, கற்றல் செயல்பாடு இவற்றை நடக்காமல் செய்துவிடுவது நியாயமா? ஆசிரியர் அனுமதி பெறாமல் மாணவர் வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டார், கேள்வி கேட்க எழுந்து நிற்கவில்லை, அனுமதி பெறாமல் தண்ணீர் குடித்தார், இடம் மாறி உட்கார்ந்துவிட்டார், பேசிவிட்டார்… இவற்றையெல்லாம் குற்றங்களாகப் பார்த்துப் பழகிவிட்டது. கண்டிப்பான ஆசிரியர் வகுப்பில் இதில் ஏதும் நடக்காது; இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பவர் நல்ல ஆசிரியர் கிடையாது எனும் தீர்மானங்கள் நம் கல்வியின் வன்முறையைத் தூண்டும் வினை ஊக்கிகள்.
சைக்கிளில் போகும்போது அதிலிருந்து இறங்கி எதிரில் வரும் ஆசிரியருக்கு வணக்கம் வைப்பது மாணவர் காட்டும் மரியாதையாக இருக்கலாம் . ஆனால் அப்படிச் செய்யாத ஒருவரை ‘கொஞ்சமாவது பயம் இருக்கா பாருங்க’ எனச் சான்றளிப்பதும், மரியாதை கெட்டவன் என முத்திரை குத்துவதும் அதை விதியாக்கிவிடுகின்றன என்பதுதானே உண்மை. யாரிடம் பேசலாம், யாரிடம் பேசக் கூடாது எனப் பேசுவது பற்றி மட்டுமே வகுப்பறைகளில் எழுதப்படாத விதிகள் உண்டு என்றால் மற்ற விஷயங்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
ஆசிரியர் மாணவர் நல்லுறவு கற்றலில் மாணவர் பின்தங்குவதால் பாதிப்பதைவிட இந்த எழுதப்படாத விதிகளை மீறுவதாலேயே பெரும்பாலும் பாதிப்படைந்துவிடுகிறது என்கிறார்கள் கல்வியாளர்கள் . இந்த நிலையைக் கடந்து ஜனநாயகம் வகுப்பறையில் பூக்க என்ன செய்ய வேண்டும் என எனக்குக் காட்டியவர்தான் மாணவர் உமர்ஃபாரூக்.
சுய கட்டுப்பாடும் பள்ளியும்
அதற்காக மாணவர்களை அப்படியே விட்டுவிடுவதா, ஒழுங்கை வகுப்பறையில் எப்படித்தான் கொண்டுவருவது என ஆசிரியர்கள் கேட்கிறார்கள். எவ்விதமான சுதந்திரமும் இல்லாமல் முழுக் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் வகுப்பறையில் ஆசிரியரின் பணி எளிமை ஆகிறது. ஆனால் சுதந்திரமற்ற சூழலில் குழந்தைகள் எதையுமே கற்பது இல்லை. இந்தச் சவாலை சுய-நிர்வாக வகுப்பறைகள் எனும் கல்விமுறைப்படி தீர்த்து வைத்தவர் ஏ.எஸ்.நெய்ல் (A.S. Neill).
அவரது முழுப் பெயர் அலெக்சாந்தர் சதர்லாண்ட் நெய்ல். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். குழந்தைகளைக் கட்டுப்படுத்தவோ கண்காணிக்கவோ தேவையில்லை; தண்டனைகள் மூலம் வலி ஏற்படுத்துவதும் அவசியமில்லை என்று அறிவித்தவர். உணர்வுபூர்வமான கல்விமுறை (Emotional Education) எனும் தனித்துவக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியவர். பாடத்திட்டம், புத்தகங்களைச் சரியாக அளிப்பதுதான் கல்வித் துறையின் கடமை.
அதிகாரம் செலுத்தக் கூடாது என்றார். ஒவ்வொரு வகுப்பறையும், ஏன் ஒவ்வொரு குழந்தையும்கூட வேறுவேறானவை. உணர்வுபூர்வமாகப் பேசி, குழந்தைகளையும் கலந்துகொண்டு கற்றல்முறை, தேர்வுகள் போன்றவற்றை முடிவு செய்வதை சுய-நிர்வாக வகுப்பறைகள் என அழைத்தார்.
மரத்தடியில் பொதுக் கூட்டம்
தான் உருவாக்கிய ‘சம்மர் ஹில்’ (Summer Hill) பள்ளியில் இரண்டு முக்கிய மாற்றங்களை விதைத்தார். ஒன்று வகுப்பறைகள் பின்பற்ற வேண்டிய விதிகள் என்ன என்பதை மாணவர்களே தங்களுக்குள் பேசிப் பட்டியலிடுவார்கள். இதனால் யாரும் விதிமீறல்களில் ஈடுபட மாட்டார்கள் என்பதோடு பொருந்தா விதிகளைத் தூக்கி எறிந்துவிடலாம். இரண்டாவது, பள்ளி மரத்தடியில் கூடி வாரப் பொதுக் கலந்தாய்வுக் கூட்டம். மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி தலைமை தாங்குவார்.
மாணவர் சிக்கல்களும் பிரச்சினைகளும் பொது விவாதம் மூலமும் ஓட்டெடுப்பு மூலமும் தீர்க்கப்பட்டும். இதை நடைமுறைப்படுத்தியபோது, விதிமுறைகளை விவாதித்துக் குழந்தைகள் ஏற்றதால் ஒவ்வொருவருமே பொறுப்புடன் அதனை மீறாமல் நிறைவேற்றினார்கள். நமது சூழலில் இந்த ஜனநாயக வகுப்பறையை எப்படிக் கொண்டுவருவது என எனக்குக் காட்டியவர் உமர் ஃபாரூக்.
மதிய உணவு இடைவேளையும் விபத்துகளும்
இதற்கு முன் நான் பணிசெய்த அரசு உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பில் அறிமுகமானவர் உமர்ஃபாரூக். சுமாராகப் படிப்பவர் என்று எல்லாரிடமும் பெயர் பெற்றவர். வகுப்பு ஆசிரியராக எனக்கு ஒரு பிரச்சினை வந்தபோதுதான் அவரது அருமை புரிந்தது. மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்கள் வீட்டிற்குச் சென்று, மணி அடிக்கும்போது பள்ளி திரும்ப வேண்டும். அவ்வாறு வீட்டிற்குப் போகும் வழியில் விபத்தில் சிக்குவது, சில சமயம் திரும்பி வராமல் போய் மதியம் விடுப்பு எடுப்பது, பள்ளிக்கு வராமல் எங்காவது போய்விடுவது எனப் பல பிரச்சினைகள்.
சூழலை சமாளிக்க மதிய உணவைப் பள்ளி வகுப்பறையிலேயே சாப்பிடச் சொன்னேன். தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த முடிவைக் கட்டளையாகப் பிறப்பித்தேன். மாணவர்கள் ஏற்க மறுத்தனர். பெற்றோர்களும் இதை அறிந்திருக்க வேண்டும். விரைவில் தலைமை ஆசிரியர் அழைத்து எச்சரித்தார். நானும் மனவருத்தத்துடன் பின்வாங்கினேன். மதிய உணவை முடித்து, கையெழுத்துப் பயிற்சி, வாய்ப்பாடு சொல்வது என வீட்டுக்குப் போய் வரும் நேரத்தை உருப்படியாகச் செலவு செய்யலாமே என்ற என் சமாதானமும் எடுபடவில்லை. உசுப்பிவிடப்பட்ட சர்வாதிகாரிபோலப் பார்க்கிறவர்கள் மீதெல்லாம் எரிந்து விழுந்தேன்.
விரும்புவோர், விரும்பாதவர்
இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஒருநாள் வகுப்பறைக்குள் நுழைந்தபோது மேசைமீது ஒரு காகிதம் இருந்தது. தற்செயலாக எடுத்துப் பார்த்தேன். அதில் ஒரு சிறு பட்டியல்: வகுப்பறையிலேயே மதிய உணவு சாப்பிட விரும்புவோர் 36, விரும்பாதவர் 7 (வீடு அருகிலேயே உள்ளது). நான் அதிர்ச்சி அடைந்தேன். கூடவே இன்னொரு கருத்துக் கணிப்பு: 2) சாப்பிட்ட பிறகு கையெழுத்துப் பயிற்சி, வாய்ப்பாடு பயிற்சியை விரும்புவோர் 0, விளையாட விரும்புவோர் - 43 (வகுப்பு மாணவரின் முழு எண்ணிக்கையும்) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது!
இது யார் செய்த வேலை என விசாரித்தேன். உமர்ஃபாரூக் எழுந்து நின்றார். நான் என் தவறை உடனே உணர்ந்தேன். குழந்தைகளிடம் கருத்து கேட்கத் தவறியது என் தவறு. விரைவில் யாருமே மதிய உணவுக்கு பள்ளி விட்டுச் செல்லவில்லை; நானும் அவர்களை வகுப்பறைக்கு வெளியே திறந்த வெளியில் மணி அடிக்கும்வரை விளையாட அனுமதித்தேன்.
வகுப்பறை ஜனநாயகம் என்றால் என்னவென்று எனக்குப் புரியவைத்த உமர் ஃபாரூக் இப்போது சென்னையில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறை விரிவுரையாளர்.
- தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago