காது அறுந்த மஞ்சப் பைகளையும் பிளாஸ்டிக் பைகளையும் சுமந்தபடி சென்றார்கள் சென்னை தரமணியில் பள்ளி மாணவர்கள் சிலர். எளிய மக்கள் வசிக்கும் பகுதி அது. அண்மையில் பெய்த கனமழையால் வீடுபுகுந்து வெள்ளம் அடித்தது. அதில் நோட்டுப் புத்தகங்களைப் பையோடு பறிகொடுத்தார்கள் மாணவர்கள்.
நிவாரணங்கள் முழுமையாகத் தீண்டாத இடம் அது. வெள்ளப் பாதிப்பின்போது பாய், பால், பிரட், துணி, மெழுகுவர்த்தி எனப் பல பொருட்கள் கிடைத்தன. அதில் மாணவர்களுக்குத் தேவையானவை இல்லை.
மருகி நின்ற நேரத்தில் நோட்டுப் புத்தகங்கள், பள்ளி - கல்லூரி பைகள், பேனா, ரப்பர், பென்சில் என 500 பேருக்குத் தேவையான உபகரணங்களுடன் வந்து நின்றார் சமூக சேவகர் சண்முகசுந்தரம். மாணவர்களும் பெற்றோர்களும் நெகிழ்ந்து போயினர். சில மாணவர்கள் நோட்டின் முதல் பக்கத்தில் சண்முகசுந்தரம் என எழுதிவைத்தனர்.
புதுப் பை, புது நோட்டு, புதுப் பேனா என்ற புத்துணர்வு, வெள்ளத்தின் பாதிப்பை மெல்ல மறக்கச் செய்தது. பாதிப்பை மறந்து படிப்பைக் கைகொள்ள வேண்டும் என்பதே இந்த உதவியின் நோக்கமும். இதேபோன்ற உணர்வு கடலூர் மாவட்ட மாணவர்கள் பலருக்கும் இவரால் ஏற்பட்டிருக்கிறது.
வெள்ளம் அரித்துச் சென்ற இடங்களில் எல்லாம் சுயம்புவாகத் துளிர்த்த மனிதநேய மக்கள் சேவகர்களை இந்தப் பேரிடர் காலகட்டம் அறிமுகப்படுத்தியது. அவர்களில் மூத்தவர் இந்த சண்முகசுந்தரம். இவரது சமூகப் பணிக்கு வயது 20 ஆண்டுகளுக்கும் மேல். எத்தனையோ சேவைகள். அவற்றில் முக்கியமானது ஏழை மாணவர்களின் கல்விக்காக மெனக்கெடுவது. இடைநின்ற பள்ளி மாணவர்களைத் தேடிச் செல்வதும் படிப்பு வாசனையே இல்லாத பல கிராமத்துப் பெற்றோரிடம் பேசுவதுமாய் எடுத்த முயற்சிகள்; வேலைக்குப் போகவிருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை இவர் பள்ளிகளில் சேர்த்துள்ளார்.
ஆங்கோர் ஏழைக்கு மட்டுமல்ல, 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு 10 குழந்தைகளைப் படிக்க வைக்க, தனது ஊதியத்தில் பாதியை ஒதுக்கி பட்ஜெட் போட்டு வாழும் வாழ்க்கை, இவருக்கு இப்போது பழக்கப்பட்டுப்போனது.
சகோதரியின் குடும்பம் ஒரு விபத்தில் பலியாகி மனித வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்திய ஒரு தருணத்தில்தான், இறந்த பின்னும் வாழ்வதற்கான வழியைத் தேடியிருக்கிறார். விளைவு: உண்ணுவது, உறங்குவது போல பிறர்க்கு உதவுவதும் அன்றாடக் கடமையானது.
பிடி அரிசி
மதுரை திருமங்கலம் அருகே உள்ள ஹைடெக் அராய் எனும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் சண்முகசுந்தரம். ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்காக வீடுதோறும் ‘பிடி அரிசி’ சேகரித்து அளித்ததை, ‘இப்படியும் ஒரு இளைஞர்’ எனப் பாராட்டாத பத்திரிகைகள் இல்லை.
போலியோ விழிப்புணர்வு இல்லாத காலகட்டத்தில் ஆட்டோ வைத்துக் குழந்தைகளை சொட்டு மருந்து புகட்ட அழைத்துச் சென்றுள்ளார். மாற்றுத் திறனாளிகளும் எச்.ஐ.வி. தொற்றுள்ள குழந்தைகள் பலரும் இவரைத் தங்களின் காப்பாளராகப் பார்க்கின்றனர். இவர் வாங்கித் தந்த வேலைவாய்ப்புகள் பலரின் வீடுகளில் அடுப்பெரியக் காரணமாகியிருக்கின்றன.
ரோசய்யா கவுரவம்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரக் கன்றுகளை நடுவதும் அது வளர்ந்து மரமாகும் வரை பராமரிப்பதும் இவருக்கான விருப்பப் பணி. இதனால் சுற்றுவட்டாரத்தில் பல பகுதிகள் பசுமையைத் தக்க வைத்திருக்கின்றன. தற்போது கருவேல மரங்களை அழிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். இதற்காகவே சுற்றுச்சூழல் ஆர்வலருக்கான சிறப்பு விருதான ‘பசுமை இந்தியா தேசிய விருது’ வழங்கிக் கவுரவித்திருக்கிறார் தமிழக ஆளுநர் ரோசய்யா.
எதனால் இத்தனை தளங்களில் இப்படி ஒரு தீராத சமூகப் பணி எனக் கேட்டால், “ஆத்ம திருப்தி கிடைக்கிறது. எனது பள்ளிப் பருவம் வறுமையானது. ஏழ்மையின் வலியை உணர்ந்தாலே அடுத்தவருக்கு உதவும் எண்ணம் யாருக்கும் வரும்” என்கிறார்.
வாழ்க்கையில் உதவி செய்வது வழக்கமானது தான். ஆனால் உதவி செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டது அபூர்வமானது. இவர் பெற்ற விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் பஞ்சமில்லை.
தனிநபராக அல்லாமல் ஒரு அமைப்பை ஏற்படுத்திச் செயல்படலாமே எனக் கேட்டால், “அது பதவி ஆசைக்கு வழிவகுக்கும். எந்த நெருக்கடியும் இல்லாமல் சொந்தமாகவும் தேவைப்பட்டால் பிறரிடம் உதவியும் பெற்று சேவை செய்வதில்தான் ஆனந்தம்” என்கிறார்.
இவருக்குப் பக்கபலமாக இருக்கின்றனர் 98 வயதான தந்தை வள்ளிநாயகமும் சண்முகசுந்திரத்தின் மனைவி ராஜராஜேஸ்வரியும். வேலை நேரத்தை வீதிகளில் கழித்தாலும் ஏனென்று கேட்காமல் ஊக்கப்படுத்து கிறார் நிறுவன முதலாளி பி.டி.பங்கேரா.
ஏழை மாணவர்களின் கல்வி மேம்பட வேண்டிய இன்றைய காலகட்டத்தில் நாட்டுக்கு நிறைய சண்முகசுந்தரங்கள் தேவைப்படுகிறார்கள். அவரை 9843116617 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago