கப்பல் அமைதியாகப் போய்க்கொண்டிருக்கிறது. பயணிகள் பேச்சு, பாட்டு, அரட்டை, விளையாட்டு எனப் பொழுதைக் கழித்தார்கள். சிலர் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தார்கள்.
அந்தக் கப்பலில் உலக செஸ் சாம்பியன் ஒருவரும் பயணித்துக்கொண்டிருந்தார். அவரையும் விளையாடக் கூப்பிட்டார்கள். அவரும் விளையாடினார். அவரோடு ஒருசில நிமிடங்கள்கூட யாராலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
ஒரு சிலரைச் சேர்த்துக்கொண்டு ஒரு பயணி சவால் விட்டார். நாங்கள் அனைவரும் ஒரு அணி, நீங்கள் ஒரு அணி என்று விளையாடலாமா என்றார்.
சாம்பியன் ஒப்புக்கொண்டார். ஆட்டம் தொடங்கியது. அவர்கள் மிகவும் யோசித்து ஒரு காயை நகர்த்துவார்கள். சாம்பியன் அதை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தன் காயை நகர்த்துவார். அடுத்த மூவ் பற்றி அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போது அவர் புத்தகம் படித்துக்கொண்டிருப்பார். தன் மூவை உடனடியாகச் செய்துவிட்டு மீண்டும் அவர்கள் ஆலோசிப்பதற்கு அவகாசம் கொடுப்பதற்காக அப்பால் போய்விடுவார்.
இப்படியே சில மூவ்கள் ஆன பிறகு பயணிகளின் காய்கள் அபாயத்தில் இருந்தன. என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது அவர்கள் அருகில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் “நான் ஒரு மூவ் செய்யட்டுமா?” என்று கேட்டார். அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். அவர் ஒரு காயை நகர்த்தினார்.
சாம்பியன் வந்தார். வழக்கம்போல உடனடியாகக் காயை நகர்த்த யத்தனித்தவர் சதுரங்கக் கட்டத்தைக் கவனித்துவிட்டு ஒரு கணம் தயங்கினார்.
“இந்த மூவைச் செய்தது யார்?” என்று கேட்டார். அனைவரும் அந்தப் பெரியவரைக் கைகாட்டினார்கள்.
“நீங்கள் யார், எப்படி இந்த அளவுக்கு செஸ் ஆடக் கற்றுக்கொண்டீர்கள்?” என்றார் வியப்புடன்.
“நான் இதுவரை யாருடனும் செஸ்ஸே ஆடியதில்லை” என்றார் பெரியவர்.
“பிறகு எப்படி…?”
பெரியவர் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
சர்வாதிகார ஆட்சி நடந்த காலம் அது. அரசுக்குக் கட்டுப்படாதவர்கள், அரசின் போக்குடன் முரண்படக்கூடியவர்கள் ஆகியோரைக் கைதுசெய்து கண்காணாத இடத்தில் சிறைவைத்தது அரசு.
அப்படிக் கைதானவர்தான் அந்த விஞ்ஞானியும். முக்கியமான அறிஞர்களில் ஒருவரான அவர் அரசாங்கத்துக்கு வேண்டாதவராகிவிட்டார். தொலைதூரத் தீவில் தனிமைச் சிறைதான் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை.
பெரும் துக்கம் விஞ்ஞானியின் மீது கவிகிறது. எப்போது விடுதலை என்று தெரியாத தனிமைச் சிறையில் எப்படி நாட்களைக் கழிப்பது? அங்கே படிக்கவோ எழுதவோ அனுமதி கிடையாது. பேச்சுத் துணைக்கு யாருமில்லை. என்ன செய்வது?
எப்போதும் ஆராய்ச்சியிலும் விவாதங்களிலும் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியால் இப்படிப்பட்ட சிறைவாசத்தைக் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியவில்லை.
இரும்புக் கோட்டைபோன்ற சிறைச்சாலைக்குள் நுழைந்தபோது அவர் அச்சம் பன்மடங்காகியது. அவரை அழைத்துவந்த அதிகாரி, சிறையில் அவரை அடைப்பதற்கு முன்பு நிர்வாக சம்பிரதாயங்களைச் செய்துகொண்டிருந்தார். அப்போது மேசைக்குக் கீழே இருந்த ஒரு சிறிய புத்தகம் விஞ்ஞானியின் கண்ணில் பட்டது. யாரும் கவனிக்காதவண்ணம் சட்டென்று குனிந்து அதை எடுத்து மறைத்துக்கொண்டார்.
தனிமைச் சிறைக்குள் அடைக்கப்பட்ட பிறகு மெதுவாக அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். தனிமையைக் கொல்ல இது நல்ல துணையாக இருக்கும் என்று நினைத்தவருக்கு, அந்த நூலைப் பார்த்ததும் வாழ்க்கையே வெறுத்துப்போனது.
சதுரங்க விளையாட்டு பற்றிய நூல் அது. விஞ்ஞானிக்கு அந்த விளையாட்டின் அரிச்சுவடிகூடத் தெரியாது. அவருக்கு அந்த விளையாட்டு பிடிக்கவும் பிடிக்காது. ஒரு வரியைக்கூட அவரால் படிக்க முடியவில்லை. புத்தகத்தைத் தூர எறிந்துவிட்டுத் துக்கத்தில் ஆழ்ந்தார்.
சிறிது நேரம் கழித்து அந்த ஓசை அவர் கவனத்தைக் கவர்ந்தது.
சொத்… சொத்… சொத்…
சீரான இடைவெளியில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது அந்த ஓசை. அவரது அறைக்குப் பக்கத்தில் உள்ள குழாய் சரியாக மூடப்படாததால் எழும் ஓசை.
தொடர்ந்து அந்த ஓசையைக் கேட்ட விஞ்ஞானியால் அந்த ஓசையைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. புத்தகத்தை ஒளித்துவைத்துவிட்டுச் சத்தம்போட்டுக் காவலரைக் கூப்பிட்டார். யாரும் வரவில்லை. தொடர்ந்து அவர் கத்திய பிறகு ஒருவர் வந்தார். குழாயைப் பற்றிச் சொன்னார் விஞ்ஞானி. காவலர் இளக்காரமாகப் புன்னகை செய்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.
ஓசை நிற்கவில்லை. ஓசை தந்த எரிச்சல் தாளாமல் சிறிது நேரம் கழித்து விஞ்ஞானி மீண்டும் காவலரைக் கூப்பிட்டார். இந்த முறை காவலர் சிரிக்கவில்லை. “அப்படித்தான் இருக்கும்” என்று கடுமையாகச் சொன்னார். இனிமேல் கூப்பிட்டால் வர மாட்டேன் என்றும் சொல்லிவிட்டுச் சென்றார்.
விஞ்ஞானிக்கு ஒன்றும் புரியவில்லை. ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. தொடர்ந்து, சீராக, ஒரே தாள கதியில் ஒரே மாதிரி கேட்டுக்கொண்டே இருந்தது.
நேரம் ஆக ஆக அந்த ஓசை தந்த எரிச்சல் அதிகரிக்கத் தொடங்கியது. விஞ்ஞானி மீண்டும் கத்தினார். யாரும் வரவில்லை. ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. வேறு எந்த ஓசையும் இல்லை.
சொத்… சொத்… சொத்…
விஞ்ஞானி கடும் மன அழுத்தத்துக்கு ஆளானார். காதுகளைப் பொத்திக்கொண்டார். ஆனால், எத்தனை நேரம் அப்படி இருக்க முடியும்? ஓசை அவரைத் துரத்தியது. வேறு எதையும் யோசிக்க முடியவில்லை. தவித்தார். துடித்தார். அலறினார். பைத்தியம் பிடித்துவிடுமோ என்று பயந்தார்.
சட்டென்று ஒரு விஷயம் அவருக்குப் பொறி தட்டியது. இப்படிப்பட்ட மனநிலையை ஏற்படுத்தத்தான் இந்த ஏற்பாடு என்பது புரிந்தது.
உடனே அவரது மூளை சுறுசுறுப்படைந்தது. இந்தச் சிறையிலிருந்து தான் வெளியேறும்போது மனநலம் குன்றியவனாக ஆகியிருக்க வேண்டும் என்பதே அரசின் திட்டம் என்பதைப் புரிந்துகொண்ட அவர், இந்தப் பொறியில் சிக்கக் கூடாது என்று முடிவுசெய்தார்.
ஓசையிலிருந்து மனதை, கவனத்தை விலக்க வேண்டும். எவ்வளவு முயன்றாலும் சிறிது நேரத்துக்கு மேல் அந்த ஓசையை விட்டு விலக முடியவில்லை. இப்போது மட்டும் கையில் ஒரு புத்தகம் இருந்தால்…?
விஞ்ஞானி துள்ளி எழுந்தார். அந்தப் புத்தகத்தை எடுத்தார். அதை மிகவும் அன்போடு பார்த்தார். தனக்குத் துளியும் அறிமுகமில்லாத, தனக்குப் பிடிக்காத அந்த விளையாட்டைப் பற்றி ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து படித்தார். நாட்கணக்கில் திரும்பத் திரும்பப் படித்தார்.
சதுரங்க ஆட்டத்தின் நுட்பங்களை மிக விரிவாகச் சொல்லும் அந்த நூல் அவருக்கு ஆட்டத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் புரியவைத்தது. ஆனால் படித்ததை எல்லாம் எப்படிச் செய்து பார்ப்பது?
தலைக்கு மேலே மிக உயரத்தில் இருந்த சுவரில் கம்பிகள் பதித்த சிறிய ஜன்னல் இருந்தது. குறுக்கும் நெடுக்குமாக நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்த அந்தக் கம்பிகளின் நிழல் தரையில் விழும்போது அந்த நிழல் சதுரங்கப் பலகையை நினைவுபடுத்தியது. விஞ்ஞானி பெரும் உற்சாகம் அடைந்தார். இந்தக் கட்டங்களை வைத்து தினமும் விளையாடிப் பார்க்கலாம் என்று முடிவுசெய்தார்.
ஆனால் காய்கள்? அதற்கும் ஒரு வழி பிறந்தது.
தனக்குக் கொடுக்கப்படும் ரொட்டித் துண்டுகளில் ஒரு பகுதியைச் சாப்பிடாமல் ஒளித்துவைத்தார். அந்தத் துண்டுகளை உருட்டிப் பிசைந்து பல விதமான உருவங்களாக்கிக்கொண்டார். குதிரை, ராணி, ராஜா, சிப்பாய், மந்திரி, யானை எல்லாம் தயார்.
மறுநாள் அந்தக் கட்டங்களின் நிழல் தரையில் விழும்போது அந்தப் புத்தகத்தில் உள்ள பயிற்சிகளைச் செய்துபார்க்க ஆரம்பித்தார். நிழல் நீங்கிய பிறகு மன அரங்கில் அவற்றைத் தொடர்ந்தார்.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விடுதலை ஆவதுவரை இதையே தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். செஸ் ஆட்டத்தின் சகல நுணுக்கங்களும் அவரது விஞ்ஞான மூளைக்கு வசப்பட்டுவிட்டன.
பெரியவர் தன் கதையைக் கூறி முடித்தார் எல்லோரும் கை தட்டினார்கள்.
இந்தக் கதை நமக்கு எதை உணர்த்துகிறது என்பதற்கு விளக்கம் தேவையா?
(குறிப்பு: இது நான் கேட்ட கதை. யார் எழுதியது என்பது தெரியவில்லை. வாசகர்களுக்குத் தெரிந்திருந்தால் தெரிவிக்கலாம்)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago