ஆங்கிலம் அறிவோமே - 96: தூக்கம் என்றால் பயமா?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

என்னுடைய ஒரு நிகழ்ச்சியைக் குறித்து சில நண்பர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அவர்களில் இரண்டு பேர் ஒரே மாதிரி வாக்கியத்தை அனுப்பியிருப்பதால் அதை இந்தப் பகுதியில் சுட்டிக்காட்ட வேண்டுமென்று தோன்றியது.

“Please accept my heartfelt congradualations” என்பதுதான் அந்த வாக்கியம்.

Congratulations என்றுதான் குறிப்பிடவேண்டும். (இதேபோல் ‘t’ க்கு பதிலாக ‘d’ யைத் தவறாகச் சிலர் பயன்டுத்தும் இன்னொரு ‘கடித வார்த்தை’ உண்டு. Please grant me leave என்பதே சரி. (Grand என்றால் விமரிசையான - ‘function grand- ஆக நடந்தது என்போமே அதுதான்)

தவிர Please accept my heartiest (heartfelt அல்ல) congratulations என்பதுதான் சரி. சிலர் congratulation என்று ஒருமையில் குறிப்பிடுகிறார்கள். அதுவும் தவறு. Congratulations-தான்.

வேறு சில கடிதங்களில் நான் கண்ட சில தவறுகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

> Thanks you.

Thank you என்பதே சரியானது. Thanking you என்று வரலாம். ஆனால் Thank you என்பதைத் தொடர்வது முற்றுப் புள்ளி. Thanking you என்பதைத் தொடர்வது கால்புள்ளி (comma).

> Your’s faithfully,

‘Yours faithfully,’ என்பதே சரியான பயன்பாடு. நடுவில் apostrophe வரக்கூடாது. Yours truly என்பதைச் சிலர் Yours truely என்று எழுதுகிறார்கள். Spelling-ஐ மாற்றிக் கொள்ளுங்கள்.

> I am sorry for not answering to your letter.

இதில் to என்ற வார்த்தை நீக்கப்பட வேண்டும். தவிர கேள்விக்குதான் பதில். கடிதத்துக்கு அல்ல. எனவே answering என்பதற்கு பதிலாக replying என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.

> Many a thanks for your letter.

Many a என்பதைத் தொடர்வது ஒருமையாகத்தான் இருக்க வேண்டும். சிலருக்கு வியப்பை அளித்தாலும் Many a thank for your letter என்பதே சரி.

> We regret our unability to accept your quotation.

Ability-க்கு எதிர்ச் சொல் Inability. Able என்பதற்கு எதிர்ச்சொல் Unable. இரண்டையும் கலக்கக் கூடாது.

> Kindly convey my respect to your parents.

Respects என்றுதான் இருக்க வேண்டும்.

> Please come and bless us at the quickest.

Quickest அல்ல earliest.

> I am looking forward to your reply.

Looking forward அல்ல. Look forward.

> With regards.

With regards என்பதைத் தொடர்வது முற்றுப்புள்ளி அல்ல. கமா. ஆனால் வெறுமனே Regards என்று மட்டும் குறிப்பிட்டால் அதைத் தொடர்வது முற்றுப்புள்ளி.

ஜவஹர்லால் நேருவை “A Man of letters” என்று கூறலாம். “Letters from a Father to his Daughter” என்ற பெயரில் ஒரு நூலே வெளிவந்திருக்கிறது. அப்பா நேரு அலஹாபாத்திலும், மகள் இந்திரா முசோரியிலும் இருந்த காலத்தில் எழுதப்பட்ட முப்பது கடிதங்களின் தொகுப்பு.

சில வாரங்களுக்குமுன் நடைபெற்ற சம்பவம் இது. நண்பர் ஒருவர் எங்களுக்கு நன்கு அறிமுகமான டாக்டர் ஒருவரிடம் கேஷுவலாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய சில உடல் பிரச்சினைகளை நண்பர் பகிர்ந்து கொள்ள, டாக்டர் “இதெல்லாம் இன்சோம்னியாவின் அறிகுறிகள். வாழ்க்கை முறையை நீங்க கொஞ்சம் மாத்திக்கணும்” என்று டாக்டர் கூறினார். நண்பரின் முகம் கோபத்தை வெளிப்படுத்தியது. கொஞ்சம் உரத்த குரலில் “எனக்கொன்றும் ‘insomnia’ இல்லை. வேணும்னா என் மனைவிக்குப் போன் போட்டுத் தரேன் கேளுங்க” என்றார்.

நண்பருக்கு ஏன் கோபம் வந்தது என்று டாக்டருக்கும், எனக்கும் முதலில் புரியவில்லை. பிறகுதான் புரிய வந்தது. Insomnia என்பதை somnambulism என்று அவர் புரிந்து கொண்டு விட்டார் என்பது.

தூக்கக் கலக்கத்தில் சில தவறுகளை நாம் செய்திருப்போம். ஆனால் தூக்கம் தொடர்பான வார்த்தைகளில் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருக்கலாமே!

தூக்கம் குறித்த அறிவியல் பிரிவை somnology (இதை ஸாம்னாலாஜி என்று உச்சரிக்கிறார்கள்) என்றும் Hypnology (ஹிப்னாலாஜி) என்றும் குறிப்பிடுகிறார்கள்.

தூக்கம் தொடர்பான வேறு சில சொற்களும் உண்டு.

Apnea அல்லது Apnoea என்றால் தற்காலிகமாக மூச்சு விடுதல் நின்று போவது என்று அர்த்தம். Sleep Apnea என்றால் தூங்கும்போது இந்த நிலை உண்டாவது.

Somnabulism என்றால் தூக்கத்தில் நடக்கும் வியாதி. இதை noctambulism (நாக்டாம்புலிஸம்) என்றும் குறிப்பிடுவதுண்டு. Insomnia என்றால் தூக்கம் வராத நிலை. அதாவது விழித்துக் கொண்டு இருக்கும் போதெல்லாம் insominia-வில் இருக்கிறோம் என்று அர்த்தமில்லை. இரவில் படுக்கையில் படுத்த பிறகும் நெடுநேரத்துக்குத் தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா? இந்த நிலை தொடர்ந்து உங்களுக்கு இருந்து வருகிறதா? அப்படியானால் உங்களுக்கு உண்டாகி இருப்பது Insominia.

அதீத பயத்தை phobia என்பார்கள். Hypnophobia (அல்லது) somniphobia என்றால் தூக்கம் பற்றிய பயம்.

காரணம் எதுவாகவும் இருக்கலாம். தூங்கினால் கெட்ட கனவு வந்துவிட்டால்? தூங்கினால் செய்ய வேண்டிய முக்கிய வேலையைச் செய்ய முடியாது போனால்? தூங்கினால் திட்டமிட்ட நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை என்றால்? ஆக ஏதோ காரணத்தினால் தூக்கத்தின்பால் பயம் உண்டானால் அது hypnophobia.

சில அகராதிகளில் sleep என்பதற்குச் சமமான வார்த்தையாக (Synonyms) அளிக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளைப் படித்தால் நமக்கே hypnophobia வந்துவிட வாய்ப்பு உண்டு. அந்த வார்த்தைகள் coma, hibernation, dullness, lethargy, unconscious state, slumber.

தூக்கத்தில் சிலர் பற்களைக் கடிப்பார்கள். நறநறப்பார்கள். இதை bruxism என்பார்கள்.

அவன் drowsy ஆக இருக்கிறான் என்றால் அவன் தூக்கத்திலும் இல்லை, தெளிவாகவும் இல்லை. பாதித் தூக்கத்தில் இருக்கிறான் என்று அர்த்தம்.

இன்சோம்னியாகாரர்களுக்கு Hypersomnia-க்காரர்களைப் பார்த்தால் எல்லையற்ற எரிச்சலோ, பொறாமையோ உண்டாக வாய்ப்பு உண்டு. பின்னே என்ன தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு எக்கச்சக்கமாகத் தூங்கிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் அழுக்காறு ஆறாகப் பெருகாதா என்ன?

சிலருக்குப் படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வரும். ஆனால் பாதியில் விழித்துக் கொள்வார்கள். அதற்குப் பிறகு தூக்கம் வராமல் தவிப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நேர்ந்திருப்பது middle insomnia.

சிப்ஸ்

> சென்னையில் ஒரு பகுதியை Esplanade என்கிறார்களே அதற்கு என்ன அர்த்தம்?

அந்த வார்த்தைக்குப் பொருள் plain. அதாவது மேடுபள்ளமற்ற சம நிலம். பெரும்பாலும் கடலுக்கு அருகில் அமைந்த பகுதி.

> ரியல் எஸ்டேட்டில் alacrity என்ற பெயரைப் பார்த்திருக்கிறேன். Alacrity என்றால்?

Alacrity என்றால் ஆர்வம், உற்சாகம்.

> ‘Ice melts fastly in the sun சரியா, தவறா?

அறிவியலின்படி சரி. ஆங்கிலத்தின்படி தப்பு. Ice melts fast in the sun என்பதே சரி.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்