கரோனா தொற்றை வெற்றிகொண்ட சித்த மருத்துவம்: மருத்துவர்களின் அயராத சிகிச்சையால் உயிரிழப்புகள் தவிர்ப்பு

By ந. சரவணன்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சித்தா சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்ட 2,100 பேரில் ஒரு உயிரிழப்பு கூட நிகழாமல் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலக மக்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கரோனா என்னும் பெருந்தொற்றை அழிக்க மருத்துவத் துறையினர் கடுமையாகப் போராடிய நேரத்தில் கபசுரக் குடிநீரைச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தலாம் என முதன்முதலாகத் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சித்த மருத்துவர்கள் குரல் கொடுத்தனர்.

அதை, அந்த மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தத் தொடங்கியது. அதில், எதிர்பார்த்த பலன் கிடைத்ததும் சுகாதாரத்துறை மட்டுமின்றி அனைவரது பார்வையும் இந்த சித்த மருத்துவர்கள் பக்கம் திரும்பியது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த அக்ரகாரம் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் ‘கரோனா சித்த சிறப்பு சிகிச்சை மையம்’ கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. முழுக்க, முழுக்க இயற்கை மருந்து, பாரம்பரிய உணவு, உடற்பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றுடன் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கரோனா முதல் அலையின்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தில் 625 பேர் அனுமதிக்கப்பட்டு ஒரு உயிரிழப்புகூட நிகழாமல் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்பிறகு, சிறப்பு சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கரோனா 2-வது அலை வேகமெடுக்கத் தொடங்கியவுடன் மீண்டும் கரோனா சித்தா சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இந்த முறை திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சித்தா சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன.

அதில், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதிகளில் தொடங்கப்பட்ட சித்தா சிறப்பு சிகிச்சை மையம் அனைவரின் பார்வையையும் ஈர்த்தது. காரணம், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் வேறு மாதிரியாக அமைந்தன.

அங்கேயே தயாரிக்கப்பட்ட மூலிகை கசாயம், மூலிகை சூப் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டதால் கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை அதிக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுபோன்ற முயற்சிகள் பெரும் சவாலாகவே அமைந்ததாக வேலூர் புற்று மகரிஷி மருத்துவமனையின் தலைமை சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் கூறினார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் மருத்துவர் டி.பாஸ்கரன் கூறும்போது, ‘‘சித்த மருத்துவத்தில் அகமருந்து 32, புறமருந்து 32 என மொத்தம் 64 வகையான மருந்துகள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டுதான் திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தில் கரோனா நோயாளிகளுக்குப் பாரம்பரியமான உணவுகளும், மருந்துகளும் அளித்தோம். 15 வகையான மூலிகைகளைச் சேகரித்து அதிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை வழங்கினோம். குறிப்பாக, மூலிகை குடிநீர், மூலிகை சூப், மூலிகை கஞ்சி, மூலிகை தேநீர் நோயாளிகளுக்கு நல்ல பலனைத் தந்தது.

ஆடாதொடை குடிநீர், கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர், சுக்குமல்லி சூப், முருங்கை சூப், திப்பிலி சூப், வெற்றிலை மிளகு சூப், காய்கறி சூப், கலவை கீரை சூப், சிறுதானிய கஞ்சி, அரிசி கஞ்சி, பருப்பு கஞ்சி, கொள்ளு கஞ்சி, கிராம்பு கஞ்சி, சுக்கு கஞ்சி, கிராம்பு குடிநீர் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக வழங்கினோம்.

டி.பாஸ்கரன்

காலையில் ராகி இட்லி, ராகி தோசை, கொள்ளு கஞ்சியும், மதியம் சாம்பார், கொள்ளு ரசம், புதினா, தக்காளி சாதம், காய்கறி பொறியல், கீரை வகைகளும், இரவு நேரங்களில் சப்பாத்தி, இட்லி, தோசை இதில் ஏதேனும் ஒன்றை வழங்கி சாப்பிட வைத்தோம். இதனால், நோயாளிகள் முதல் 5 நாட்களிலேயே குணமடைந்து வீடு திரும்பத் தொடங்கினர்.

இப்படியாக கரோனா 2-வது அலையில் சித்தா சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்ட 2,100 பேரில் ஒரு உயிரிழப்புகூட ஏற்படாமல் கிட்டத்தட்ட 2,050 பேர் முழுமையாக கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது, நாட்றாம்பள்ளி மற்றும் திருப் பத்தூரில் செயல்பட்டு வரும் சித்தா மருத்துவமனையில் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பாரம்பரிய உணவும், மருந்தும் அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

59 mins ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்