CORPS CORPSE - CORPUS
இறந்த மனிதனின் உடலை பிரேதம் என்கிறார்கள். அது ஆங்கிலத்தில் Corpse எனப்படுகிறது. இறந்த விலங்கின் உடலை carcass என்பார்கள். த்ருஷ்யம் அல்லது பாபநாசம் திரைப்படம் பார்த்தவர்கள் இப்படியும் பதிய வைத்துக் கொள்ளலாம். காவல் துறையினர் கமலின் வீட்டு வளாகத்தைத் தோண்டுவார்கள். Corpse கிடைக்கும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. ஆனால் கிடைப்பது carcass.
Cadaver என்றாலும் இறந்தவரின் உடல்தான். இது கொஞ்சம் தொன்மையான வார்த்தை. இந்த வார்த்தையை மருத்துவ உலகில் பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். “முன்பெல்லாம் cadaver transplantation- தான் சட்டப்படி செய்ய முடியும். இப்போதெல்லாம் brain death ஆனால்கூட போதுமானது’’ என்பதுபோல.
Corps என்பது ராணுவம் தொடர்பானது. பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளைக் கொண்டது.
Corps என்பதை ‘கோர்’ என்று உச்சரிக்க வேண்டும். அதாவது கடைசியில் நீங்கள் ‘p’ என்று கூறுவது கேட்பதும், கேட்காததுமாக இருக்க வேண்டும். ‘s’ என்பது இங்கே மவுன எழுத்து. உச்சரிக்கக் கூடாது.
Corpse என்பதை ‘கோர்ப்ஸ்’ என்று உச்சரிக்க வேண்டும்.
ஒருவர் இறந்தால் அவர் உடலை அறுத்து மருத்துவ சோதனை செய்வதை Post-mortem என்பார்கள். இறப்பின் காரணத்தையோ எந்த அளவுக்கக் குறிப்பிட்ட நோய் பரவி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவோ இப்படிச் செய்தால் அது autopsy.
கிரேக்க வார்த்தையான autopsia என்பதிலிருந்து வந்தது இந்த வார்த்தை. அந்த மொழியில் autos என்றால் ‘தானே’ என்றும், optos என்றால் ‘பார்க்கப்பட்டது’ என்றும் அர்த்தம்.
Corpus (கோர்பஸ்) என்றால் ஒரு உடலின் முக்கியப் பகுதி. ஒரு கட்டிடத்தின் முக்கியப் பகுதியையும் இப்படிக் குறிப்பிடுவதுண்டு.
நிறுவனங்களைப் பொருத்தவரை Corpus Fund என்ற ஒன்றைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எளிமையாகச் சொல்வதென்றால் Corpus Fund என்பது ஒருவிதத்தில் மூலதனம் போலத்தான். பொதுவாக இந்த நிதியை வேறு வழியே இல்லை என்றால் தவிர, செலவழிக்க மாட்டார்கள். அதிலிருந்து பெறப்படும் வட்டியைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
நாவல் ஒன்றில், பிணங்கள் கிடத்தப்பட்டிருக்கும் அறையை morgue என்று குறிப்பிட்டிருந்தார்கள். Morgue என்பதும், Mortuary என்பதும் ஒன்றுதானே?” என்ற ஒரு வாசகரின் கேள்விக்கான விளக்கம் இதோ.
“ஆங்கில இறந்தவர்களின் உடல்கள் அவற்றில் இருக்கும் என்கிற கோணத்தில் உண்மைதான். ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு.
சிலரது இறப்பில் ஏதோ ஒரு குற்றம் நடத்தப்பட்டிருக்கலாம் (கொலை அல்லது தற்கொலை) என்ற சந்தேகம் எழுந்திருக்கும். Morgue எனும் இடத்தில் அப்படிப்பட்ட சடலங்களை வைத்திருப்பார்கள். அல்லது அடையாளம் தெரியாத சடலங்களை (அவர்களது உற்றார் உறவினர் வந்து இன்னார் என்று அடையாளம் சொல்லும்வரை) அங்கு பாதுகாத்து வைப்பார்கள்.
Mortuary என்பதில் பதப்படுத்தப்பட்ட பிரேதங்கள் அவர்கள் உறவினர்களால் எடுத்துச் செல்லப்படுவதற்கான தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
தொடக்க காலத்தில் ஃபிரான்ஸ் நாட்டின் சிறையின் உட்பகுதியிலுள்ள ஒரு பகுதியை Morgue என்றனர். புதிய கைதிகளை அங்கு சில நாட்கள் வைப்பார்கள். அந்தச் சிறையின் காவல் அதிகாரிகள் அனைவரும் அவர்களை நன்கு பார்த்து மனதில் பதிய வைத்துக்கொள்ளும்வரை வைத்திருப்பார்கள்.
Morgue என்ற வார்த்தையை வட அமெரிக்காவிலும், Mortuary என்ற வார்த்தையை இங்கிலாந்திலும் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்று என்பதுபோல் பொதுவாகவும் பயன்படுத்துகிறார்கள்!
வேறொரு வாசகரின் கேள்வி இது. Ghostwriter என்பவர் யார்?
பிரபலங்கள் சிறந்த எழுத்தாளர் களாகவும் இருக்கலாம்தான். எனினும் சில வி.ஐ.பி.க்களுக்கு எழுதுவதற்கான விஷயங்கள் நிறைய இருக்கும். ஆனால் எழுத்தாற்றல் இருக்காது. அல்லது நேரம் இருக்காது. இப்படிப்பட்டவர்கள் வேறொருவரைக் கொண்டு தன் எண்ணங்களை எழுதச் சொல்வார்கள். ஆனால் இதை எழுதியது அந்தப் பிரபலம்தான் என்றே வெளிப்படுத்தப்படும். இப்படித் திரைமறைவில் பணத்துக்காகவோ, செய்நன்றிக்காகவோ தங்கள் எழுத்தாற்றலை வேறொருவருக்கு ‘விற்பவரைத்தான்’ Ghostwriter என்பார்கள். சில சமயம் பலவித ஆராய்ச்சிகள் செய்துகூடத் தாங்கள் எழுதுவதற்கு Ghostwriters வலிமை சேர்ப்பார்கள்.
அமெரிக்காவிலுள்ள ஒரு இந்தியர் இப்படிப் பிறருக்கு எழுதியே மாதம் ஆறு லட்சம் சம்பாதிக்கிறாராம். இவர் எழுதிய புத்தகங்களின் ‘ஆசிரியருக்கு’ அதனால் கிடைக்கும் புகழே போதுமானதாக இருக்கிறது.
இது ஏமாற்று வேலைதான். என்றாலும் பெரும்பாலான திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளிலும் சாகசக் காட்சிகளிலும் கதாநாயகனுக்கு பதிலாக அவர் போன்ற வேறொருவரை நடிக்க வைப்பதில்லையா? அதை ஒப்புக்கொள்பவர்கள் இதையும் ஒப்புக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்ப்பு இருக்கலாம் அல்லவா?
Ghostbuster என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோமே. பேய்களை விரட்டுபவர்களை இப்படிக் குறிப்பிடுவார்கள். ஆனால் சுவையான வேறொரு பயன்பாடும் இதற்கு இருக்கிறது. வரி ஏய்ப்பு விவகாரங்களைத் தோண்டிக் கண்டுபிடிக்கும் அதிகாரியையும் ghostbuster என்கிறார்கள்.
Bust என்றால் என்ன? Burst என்பதிலிருந்து அது எப்படி மாறுபடுகிறது?
Bust என்றால் ஒன்றை உடைப்பது. Burst என்றால் தானாக உடைவது. அதாவது உள்ளுக்குள் ஏற்படும் அழுத்தத்தால் உடைவது. பலூன், டயர் போன்றவை வெடிக்கும்போது burst என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
ஆனால் bust என்பதை noun ஆகப் பயன்படுத்தும்போது அதற்கு வேறு அர்த்தம். சில சிலைகளைப் பார்த்திருப்பீர்கள். தலை மற்றும் தோள்கள் மட்டுமே இருக்கும். இந்த மாதிரிச் சிலையை bust என்பார்கள்.
திட்டமிட்டுச் செய்யவில்லை என்றாலும் இந்தப் பகுதியில் பயமுறுத்தும் விஷயங்கள் நிறையவே இடம் பெற்றுவிட்டன. அந்த வரிசையில் மேலும் கொஞ்சம் பயணிக்கலாமே.
Incubus என்பது ஒருவித ஆண் அரக்கனைக் குறிக்கிறது. மேலை நாட்டின் புராணங்களின்படி தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணுடன் இவன் உடலுறவு கொள்வானாம். Succubus என்பது உறங்கும் ஆண்களுடன் உறவு கொள்ளும் பெண் அரக்கி.
Poltergeist என்பது பொருள்களையெல்லாம் தூக்கி எறியும் ஆவியைக் குறிக்கிறது. ஜெர்மானிய மொழியில் Poltern என்றால் சப்தம் எழுப்புவது. Geist என்றால் ஆவி அல்லது பேய். Poltergeist எனப்படும் ஆவி எக்கச்சக்கமான சப்தத்தைக் கிளப்பக் கூடியது.
Spectre (ஸ்பெக்டர்) என்று ஒரு வார்த்தை இருக்கிறதா? இந்தக் கேள்வியை எழுப்பியுள்ள வாசகர் ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகராக இருக்க வாய்ப்புக் குறைவு.
கேள்விக்கான விடை “இருக்கிறது’’. அதாவது Spectre என்ற வார்த்தை ஒன்று இருக்கிறது. Spectre இருக்கிறதா என்று கேட்டால் அதற்கான பதிலை உறுதியாகச் சொல்ல முடியாது.
Spectre என்றாலும் பேய்தான். விரும்பத்தகாத அல்லது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய என்ற அர்த்தத்திலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. The spectre of nuclear holocaust.
ஆங்கில tautograms-ஐ எழுதி அனுப்பலாமே என்று வாசகர்களிடம் கேட்டிருந்தோம். கணிசமானவர்கள் அனுப்பியிருந்தாலும் பத்தாம் வகுப்பு மாணவி தயாயின் முயற்சி பாராட்டத்தக்கது. அவர் அனுப்பியுள்ளவை எளிமையாக இருந்தாலும் முழு வாக்கியங்களாக உள்ளன. அவற்றில் சில. 1) Lorraine loves lobsters
2) Anitha's aunty ate an apple 3) She saw some snakes.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago