வரலாறு காணாத சரிவு 

By செய்திப்பிரிவு

கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மைனஸ் 7.3 சதவீதமாக சரிந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் இது மிக மோசமான சரிவாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீவிரமெடுக்கத் தொடங்கிய கரோனா, நாட்டின் சுகாதாரத்தையும், பொருளாதாரத்தையும் அடியோடு புரட்டிப்போட்டுவிட்டது. கரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால் பல தொழில்கள் முடங்கின; மக்கள் வேலையிழப்பு, ஊதியக் குறைப்பை எதிர்கொண்டனர்.

விளைவாக, 2020-21ம் நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ஜிடிபி -23.9 சதவீதமாகவும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் -7.5 சதவீதமாகவும் இருந்தது. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் ஜிடிபி 0.4 சதவீதமாக உயர்ந்தது.

அதைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காம் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 1.6 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக 2020-21ம் நிதி ஆண்டில் ஜிடிபி -8 சதவீதமாக சரியும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது அது -7.3 சதவீதமாக சரிந்துள்ளது. 1965 முதல் இதுவரையில் இந்தியாவின் ஜிடிபி ஐந்து முறை மைனஸுக்குச் சென்றுள்ளது. 1965ல் -2.64%, 1966ல் மைனஸ் 0.06%, 1972ல் -0.55%, 1979ல் மைனஸ் 5.24%. ஆனால், தற்போது எதிர்கொண்டிருக்கும் சரிவுதான் உச்சமாகும்.

கரோனா இந்தியாவில் மட்டுமில்லை உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இந்தியாவின் ஜிடிபி சரிவுக்கு கரோனாவை மட்டும் காரணம் காட்டிவிட்டு நாம் கடந்துவிட முடியாது. கடந்த 5 வருடங்களாக இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்துகொண்டிருக்கிறது. 2008ம் ஆண்டு உலகளாவிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்தியா மட்டுமல்ல ஏனைய நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டன. ஆனால் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா விரைவிலே அந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டது.

அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இந்தியப் பொருளாதாரம் பயணித்தது. இந்நிலையில்தான் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. இந்த இரண்டு முடிவுகளும் இந்தியாவின் பொருளாதாரத்தில், தொழிற்செயல்பாட்டில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவற்றின் விளைவுகளைதாம் நாம் இப்போது வரையில் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

2015-16-ல் இந்தியாவின் ஜிடிபி 8.2 சதவீதமாக இருந்தது. 2019-2020ம் நிதி ஆண்டில் அது 4.2 சதவீதமாக குறைந்தது. அதாவது நான்கே ஆண்டுகளில் ஜிடிபி பாதியாக குறைந்துள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில் வேலையின்மை, வருமானம் இழப்பு, தொழில் முடக்கம் ஆகியவை தீவிரமடைந்தன. மக்களின் நுகர்வுத் திறன் குறைந்தது. இவற்றின் நீட்சியாகவே 2019-2020ம் ஆண்டில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டன. 2014ம் ஆண்டில் டாலருக்கு நிகரான இந்தியாவின் ரூபாயின் மதிப்பு ரூ.59ஆக இருந்தது. தற்போது அது ரூ.73 ஆக உள்ளது.

கரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பையும் வேலைவாய்ப்புக் கட்டமைப்பையும் இன்னும் தீவிரமாக பாதித்திருக்கிறது. கடந்த மே மாதத்தில் 1 கோடி பேர் வேலையிழப்பைச் சந்தித்து இருக்கின்றனர். சூழலின் தீவிரத்தை உணர்ந்து உரிய முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லையென்றால், மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE