தமிழக யானைப் பாதுகாவலர் கரோனாவுக்கு பலி

By செய்திப்பிரிவு

இந்திய வன உயிரின அறக்கட்டளையின் (WTI) முன்னணி ஆய்வாளரான முனைவர் ராம்குமார் (43) ஜூன் 1ஆம் தேதி காலமானார். கரோனா நோய்த்தொற்று காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருந்தார். ஓர் ஒப்பற்ற காட்டுயிர் ஆய்வாளரை, பாதுகாவலரை இந்தியா இழந்திருக்கிறது.

ராம்குமாரின் சொந்த ஊர் சீர்காழி (புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம்). மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் வன உயிரின அறிவியலில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். கோவை வனக் கோட்டத்தின் நில அமைப்பு, யானைகளின் வாழ்விடம், வழித்தடங்கள், யானை - மனிதர்களுக்கு இடையிலான எதிர்கொள்ளல் ஆகியவற்றை உள்ளடக்கி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். ஜி.ஐ.எஸ். (GIS) புவியிடத் தகவல் அமைப்பு சார்ந்த நவீனத் தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் வல்லமை படைத்தவர்.

நாடு முழுவதும் யானை - மனிதர் எதிர்கொள்ளல் அதிகரித்து வந்த நிலையில், டபிள்யு.டி.ஐ. நிறுவனமும் மத்திய அரசின் யானைகள் பாதுகாப்புத் திட்டமும் (Project Elephant) இணைந்து இந்தியா முழுவதும் உள்ள யானைகளின் வழித்தடங்களைக் கண்டு ஆவணப்படுத்தின. இந்தப் பணியில் முக்கியப் பங்காற்றியவர் ராம்குமார். அவருடைய இந்தப் பணி ‘Right of Passage’ எனும் ஆவண நூலாக வெளிவந்துள்ளது. அந்த நூலில் இடம்பெற்றுள்ள 108 யானை வழித்தடங்களின் வரைபடங்களையும் ஆவணப்படுத்தியதில் ராம்குமாரின் பங்களிப்பு உள்ளது.

இந்தியாவில் உள்ள யானை வழித்தடங்களைப் பாதுகாப்பதில் இந்திய வன உயிரின அறக்கட்டளை பெரும் பணியாற்றிவருகிறது. தனியார் வசமுள்ள சில யானை வழித்தடங்களை விலை கொடுத்து வாங்கி, யானைகளுக்கு மீட்டுக் கொடுக்கும் பணியை இந்த அமைப்பு செய்து வருகிறது. கேரளத்தின் வயநாடு பகுதி, கர்நாடகத்தின் சில யானை வழித்தடங்கள் இவ்வாறு மீட்டெடுக்கப்பட்டன. அந்தப் பாதைகளை மீட்டெடுப்பதில் ராம்குமாரின் பங்களிப்பு மிக முக்கியமானது. களத்தில் விரிவாகப் பணியாற்றி அதனைச் சாத்தியப்படுத்தினார்.

ராம்குமார் கடினமான உழைப்பாளி. இரவு முழுவதும் விழித்திருந்து பணியாற்றக்கூடியவர். டெல்லியில் பல ஆண்டுகள் தங்கி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளை மையப்படுத்தி காட்டுயிர் சார்ந்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். நாடு முழுவதுமுள்ள பல காட்டுயிர் பாதுகாப்பு அமைப்புகளோடும் அறிஞர்களோடும் தொடர்பில் இருந்தவர். பட்டமேற்படிப்பு முடித்து கோவை WWF நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ‘ஓசை’ அமைப்பின் அலுவலகத்திலேயே பல மாதங்கள் தங்கியிருந்தவர். எனது நெருங்கிய நண்பர். எங்களுடைய அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆதரவாக இருந்தவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதில் அவருடைய பங்களிப்பு ஈடுஇணையற்றது. காட்டுயிர் கணக்கெடுப்பு, ஆய்வுப்பணிகள், விழிப்புணர்வுப் பணிகள் எனக் கடந்த 16 ஆண்டுகளாக அவரோடு இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாதவை. ஒரு மாதத்திற்கு முன்பு கோவை வந்திருந்து யானைகள் வழித்தடங்கள் தொடர்பாகச் செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆலோசனை கூறிச் சென்றார். அதன் பின்னர் அவரைத் திரும்பவும் பார்க்க முடியாது என்று நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

பழகுவதற்கு இனிய, பண்பான மனிதர். அவர் கடிந்து பேசி நான் பார்த்ததில்லை. எளிதில் எல்லோருடனும் நட்பாகிவிடக் கூடியவர். பல நூறு மனிதர்களை ஆட்கொண்ட ஓர் அறிவியலாளரை இழந்து நிற்கிறோம். காட்டுயிர் பாதுகாப்பு மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு இது.

- ‘ஓசை‘ காளிதாசன்,
கட்டுரையாளர் தொடர்புக்கு: pasumaiosai@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE