தொற்றுக் கால அனுபவம்: கூப்பிடும் குரலுக்கு ஓடிவரும் தேவதை

’ரம்யா... ரம்யா...’ என்று பழநி அரசு மருத்துவமனையின் கோவிட்-19 வார்டுகளில் ஆண், பெண் குரல்கள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கூப்பிடும் குரலுக்கு ஓடி ஓடிப் போய், அவர்களின் தேவைகளைச் செய்துகொண்டிருக்கிறார் அந்த இளம்பெண்.

யார் இந்த ரம்யா? தன்னலம் பாராமல் உழைக்கும் வெகு சிலரால்தான் இந்த உலகமே இயங்குவதாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட வெகு சிலரில் ஒருவர்தான் ரம்யா. இவர் மருத்துவமனை ஊழியர் அல்ல. இவரின் அம்மா கோவிட் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அம்மாவைக் கவனித்துக் கொள்வதற்காக வந்தவர், இன்று பலரின் மகளாகவும் சகோதரியாகவும் இருந்து நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

தொற்று பயம் காரணமாக நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே நோயாளிகளுடன் தங்கியிருக்கிறார்கள். மற்றவர்கள் உதவி செய்ய ஆட்கள் இன்றித் தவிக்கிறார்கள். கோவிட் வார்டுக்குள் நோயாளிகள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற அளவில் மருத்துவப் பணியாளர்கள் இல்லை. இருப்பவர்களும் அளவுக்கு அதிகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் செவிலியர்களின் பணிச் சுமையைக் கொஞ்சம் குறைக்கும் விதத்தில் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார் ரம்யா.

சென்னையில் உள்ள வேலம்மாள் பள்ளியில் அகடமிக் கோ-ஆர்டினேட்டராகப் பணிபுரியும் ரம்யா, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர். குழந்தைகளை அழைத்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு விடுமுறைக்காக வந்தார். திடீரென்று ரம்யாவின் அம்மாவும் அப்பாவும் தொற்றுக்கு ஆளானார்கள். அப்பா ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தேறி வருகிறார். அம்மாவுக்கு நீரிழிவும் ரத்தக்கொதிப்பும் இருந்ததால் தீவிரமாக பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

“எனக்கும் மருத்துவமனைக்கு வருவதற்கு முன் தொற்றை நினைத்து பயம் இருந்தது. ஆனால், அம்மாவை நான்தானே பார்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவப் பணியாளர்களை நினைத்தபோது தைரியம் வந்தது. என்னை மிகவும் கவனமாகப் பாதுகாத்துக்கொண்டுதான் இந்தப் பணிகளைச் செய்து வருகிறேன். ஒருவருக்கு ஆக்சிஜன் குறைக்க வேண்டியிருக்கும். இன்னொருவருக்குச் சாப்பிட வைக்க வேண்டும். வேறொருவருக்கு உட்கார வைக்க வேண்டும். மற்றொருவருக்கு டயப்பர் மாற்ற வேண்டும். இப்படி ஒவ்வொன்றுக்கும் நர்ஸ்களை அழைத்து வருவது கஷ்டம். அதனால் கூப்பிடுபவர்களிடம் சென்று, அவர்களின் தேவையைச் செய்து கொடுக்கிறேன். அதனால் என் மீது எல்லோரும் அன்பாக இருக்கிறார்கள். நான் சொல்வதைக் கேட்கிறார்கள்” என்கிறார் ரம்யா.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரம்யாவின் தம்பி விபத்தில் பாதிக்கப்பட்டு மாதக்கணக்கில் மருத்துவனையில் இருந்தார். அப்போது ரம்யாதான் அவருடன் இருந்து கவனித்துக்கொண்டார். அங்கும் வார்டில் இருந்த மற்ற நோயாளிகள் கேட்பதைச் செய்துகொடுத்திருக்கிறார். அந்த அனுபவம் இப்போது கைகொடுக்கிறது என்று சொல்லும் ரம்யா, சில விஷயங்களைச் செவிலியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு செய்து வருகிறார்.

கோவிட் நோயாளிகளில் ஒருவர் வசதியானவர். 200 மனிதர்களுக்கு இறுதிச் சடங்குகளைத் தன் செலவில் செய்தவர். இன்று அவருடன் தங்குவதற்கு ஆட்கள் இல்லை. இப்படிப்பட்ட ஒரு மனிதருக்கு உதவி செய்யும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததை எண்ணி மனம் நிறைவடைகிறார் ரம்யா.

“நான் பார்த்தவரையில் கரோனா வார்டில் போட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் தாமதமாக வந்து, உயிரிழப்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள். என் அம்மா உட்படப் பலரும் தங்களுக்கு கோவிட் கிடையாது என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். என் அம்மாவுக்காக நான் நாள் முழுவதும் இங்கேதான் இருக்கிறேன். தூங்கி ஒரு வாரமாகிவிட்டது. எந்த நேரமும் என் பெயரை யாராவது கூப்பிட்டுக்கொண்டேதான் இருப்பார்கள். அம்மாவை வேறு வார்டுக்கு மாற்றிவிட்டாலும் பழைய வார்டில் இருப்பவர்களையும் பார்த்துக்கொள்கிறேன். இறுக்கமாகவும் விரக்தியாகவும் இருப்பவர்கள் என்னைப் பார்த்ததும் முகம் மலர்வார்கள். குணமாயிடுவேனா என்று கேட்பார்கள். அன்பாகக் கைகளைப் பிடித்துக்கொள்வார்கள். ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேசினால் போதும். தைரியமாகிவிடுவார்கள்.”

ரம்யாவைப் பற்றிக் கேள்விப்படும் நோயாளிகளின் உறவினர்கள், இவரின் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். அவர்களைப் பற்றிய தகவல்களை ரம்யாவிடம் கேட்டுக்கொள்கிறார்கள். அவர்களுக்குச் செய்ய வேண்டியவற்றையும் இவரையே செய்யச் சொல்லிவிடுகிறார்கள். அதனால் எப்பொழுதும் ரம்யாவுக்கு வேலை இருந்துகொண்டேயிருக்கிறது.

”நோயாளிகளின் உறவினர்கள் நான் செய்யும் உதவிக்கு ஏதாவது எனக்குச் செய்ய வேண்டும் என்று நினைகிறார்கள். அவர்களிடம் தண்ணீர் பாட்டில்கள், மாஸ்க், சானிடைசர் போன்றவற்றை மருத்துவமனைக்கு வாங்கித் தரச் சொல்லிவிடுகிறேன். வார்டில் இருப்பவர்களையும் பார்க்க வருகிறவர்களையும் மாஸ்க் போடச் சொல்லிக் கட்டாயப்படுத்துவேன். எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுப்பேன். கல்யாணம் ஆன மூன்றாவது நாளே கணவன் இங்கே அட்மிட் ஆகிவிட்டார். அவர் மனைவி கட்டிலில் அமர்ந்து, கைகளைப் பிடித்தபடி அழுதுகொண்டிருந்தார். இப்படி நெருக்கமாக இருந்தால் உனக்கும் பாதிப்பு வரலாம் என்று சொன்னால், அதைக் கேட்கும் மனநிலையில் அவர் இல்லை. இந்தக் கொடுங்காலத்தில் திருமணம், குழந்தை போன்றவற்றைத் தள்ளி வைக்கலாம்” என்கிறார் ரம்யா.

ரம்யா மட்டும் தைரியமாக இல்லை, அவர் குழந்தைகளும் தைரியமாக இருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் வீட்டில் சமைத்து, தம்பியையும் பார்த்துக்கொண்டு, மருத்துவமனைக்கும் உணவு கொடுத்துவிடுகிறார். குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த தானமும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூந்தல் தானமும் செய்து வருகிறார் ரம்யா.

“இந்த தைரியம் பாட்டியிடமிருந்து வந்தது. போகும்போது எதை எடுத்துக்கொண்டு செல்லப் போகிறோம், அதனால் இருக்கும் வரை பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார் பாட்டி. இங்கே வந்தபோது அது எவ்வளவு உண்மை என்று புரிந்தது. வசதி இருப்பவர்களையும் இல்லாதவர்களையும் தொற்று ஒரே மாதிரிதான் பாதிக்கிறது. என்னிடம் பேசிக்கொண்டிருப்பவர்கள் திடீரென்று இறந்துவிடுகிறார்கள். இந்த நிச்சயமற்ற வாழ்க்கையில் அடுத்தவர்களுக்கு ஆறுதல் அளிப்பதைவிட வேறு என்ன பெரிதாக இருந்துவிட முடியும்?” என்று கேட்கிறார் ரம்யா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE