என்னைச் செதுக்கிய மாணவர்கள்: தேடிக் கற்பதைப் போதித்த தேவா

By ஆயிஷா இரா.நடராசன்

உங்கள் குழந்தைகள் உங்களூடே தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல. - கலீல் ஜிப்ரான். (லெபனான் கவிஞர்)

ஒவ்வொரு குழந்தையிடத்திலும் இயல்பாக ஒட்டிக்கொண்ட ஒரு சிறப்புத் தேடல் உண்டு. தேடித் தேடித் தனது சின்ன உலகில் கொஞ்சமாகக் கிடைக்கும் அந்தக் கால வெளியில் தன் அடையாளமாக எதையாவது சேர்த்து வைப்பது அவர்களது இயல்பாக உள்ளது. பாடப் புத்தகத்திற்குள் ஒரு குட்டி மயிலிறகையோ அல்லது தன் பென்சில் டப்பாவில் புளியங்கொட்டையையோ பதுக்காத குழந்தைப் பருவம் எவ்வளவு பரிதாபமானது! நமது கல்வியில் குழந்தையின் முதல் தேடலான இந்த விஷயத்திற்கு இடமிருக்கிறதா?

குழந்தையின் முதல் தேடலை பகிஷ்கரித்து தன் முரட்டு சிலபஸ் ஒன்றையே குறியாகத் திணிக்கும் ஒரு கல்வி முறை குழந்தையின் வேண்டாவெறுப்பாக மாறிப்போவது இயல்புதானே. குழந்தைகள் மையக் கல்வி என்று இதை அழைக்கிறார்கள். எந்தத் தனிக் குழந்தையும் இதற்கு முக்கியமல்ல. எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோலவே வரிசையாய் அச்சேற்றி வைத்த பார்பி பொம்மைகளைப் போலக் கடை விரிக்கப்படும் இக்கல்வி முறையின் கூட்டமான சேர்ந்திசைக்குள் ஒரு குழந்தையின் தனிப்பட்ட தேடல்கள் இறக்கமின்றி ஆழப் புதைக்கப்பட்டுவிடுகின்றன.

குழந்தைகளே தேடலில் ஈடுபட்டு சுயமாக ஒரு விஷயத்தைத் தன் வழியில் செய்யவென்று மாற்றுச் செயல்திட்டம் (Project Work) என்ற ஒன்றை அறிமுகம் செய்துவருகிறது. நம் கல்வித் துறை.

ஒரு குழந்தையின் சுதந்திரமான சுயதேடல் வழி கற்றல் மட்டுமே எந்தக் கட்டாயமும் இன்றி ஆர்வத்தோடு நடக்கும் இயல்பான கற்றலைச் சாத்தியமாக்குகிறது. அந்த வழியில் தானாக அடைந்த புரிதலை நிரந்தர அறிவாகக் குழந்தைகள் பேணுகின்றன. இந்த உண்மையை எனக்கு உணரவைத்தவர்தான் தேவா.

செயல்திட்டக் கல்வி

கல்வியில் செயல்திட்ட சுய கற்றல் (Project work) என்பதை அறிமுகம் செய்தவர் இகோர் பெட்ரோவிச் இவானவ் (Igor Ivanov). இவர் சோவியத் ரஷ்யாவின் கல்வியாளர். தான் ஆசிரிய மாணவராக இருந்த 1956 1958 ஆண்டுகளில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு புரன்ஸி கேம்ப் எனப்படும் சுயகற்றல் முகாம்களை அறிமுகம் செய்தார் இவானவ். மாணவர்கள் தாமாகத் தேர்வு செய்த ஒரு புதிய - முன்பின் அறியாத துறை அல்லது தலைப்புகளில் நேரடித் தேடல் நடத்தி விவரங்களைத் திரட்டித் தான் சொந்தமாகக் கண்டுபிடித்த முடிவுகளைப் பட்டியலிடலாம். இதுவே செயல்திட்ட வரையறை ஆகும். அனைத்து வகைக் கற்றல் செயல்பாடுகளையும் பாடநூல் மற்றும் ஆசிரியர் குறுக்கீடு இல்லாமல் ஒரு மாணவரே நிகழ்த்தும்போது அது கற்றலை அற்புத சாகசமாக்குகிறது. என்றார் இவானவ்.

உலகம் முழுதும் 1970-களில் செயல்திட்டக் கற்றல் முறையை புதிய எழுச்சி அலையாகக் கல்வியாளர்கள் சுவீகரித்தார்கள். இவானவின் சிறப்பு வகுப்பு அமைப்புகளுக்கு ஆர்லியோனக் என்றுபெயர். தேடல் திறன் ஒருங்கிணைத்த படைப்பாக்கக் கல்வி முறை (Collective Creative Deeds Methodology) என தனது மதிப்பீட்டு முறையை அழைத்த இவானவ், ஒரு குழந்தையின் தேடலில் உள்ள தபால்தலை சேகரிப்பது முதல் ஏனைய செயல்பாடுகளான பொழுதுபோக்குப் பயன்பாடுவரை யாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டு மதிக்கும் கல்விமுறையை அறிவித்தார்.

ரஷ்யாவில் அறிமுகமாகிய இக்கல்வியில் வருடத்திற்கு ஒரு மாதம் பயணம் செய்தல், கட்டுமான வேலைகளில் இணைதல், மருத்துவமனைப் பணி, ஆய்வுப் பணிகளில் இணைந்து உதவியபடி அந்த அனுபவத்தைப் பெறுதல் ஆகியவை அடங்கும். இந்தத் திட்டத்தின்படி, பள்ளி எனும் கட்டிடத்திற்கு வெளியேயும் கல்வி நடந்தது. இன்றும் பல மேலைநாடுகளில் இவானவ் செயல்திட்டக் கற்றல் முறை பின்பற்றப்பட்டாலும் குழந்தைகளின் சுயதேடல் நமது எதிர்பார்ப்புகளை எல்லாம் மிஞ்சியது என எனக்குக் காட்டியவர் தேவாதான்.

மின் சாதன சேகரிப்பாளர் தேவா

நான் இதற்கு முன்பு பணியாற்றிய அரசு உதவிபெறும் பள்ளியில் மாநில அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தும் பொறுப்பாளர்களில் ஒருவனாக நியமிக்கப்பட்டிருந்தேன். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பெயரில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் நடத்தப்படும் பிரம்மாண்டமான அந்த நிகழ்வு அந்த ஆண்டு எங்கள் ஊரில் நான் பணியாற்றிய பள்ளியில் நடந்தது. திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவருடன் மூன்று அமைச்சர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமான காட்சிப் பொருட்களுடன் கூடிய மாணவர்களில் ஒருவராக எங்கள் பள்ளியிலிருந்து தேர்வாகியிருந்தார் ஒன்பதாம் வகுப்பு மாணவர் தேவா.

வரவேற்புக் குழுவில் இருந்த நாங்கள் கல்வி அமைச்சர் அறிவியல் கண்காட்சியை வித்தியாசமாக ‘திறந்து வைக்க’ ஒரு சுவிட்சை ஏற்பாடு செய்து அதை அவர் ஆன் செய்தால் மேலே இருந்து ஒரு பெட்டி திறந்து சிறப்பு விருந்தினர்கள் மீது மலர்கள் தூவுமாறு செய்திருந்தோம். ரிப்பன் வெட்டுவதைவிட இது அதிகமான பாராட்டுதலைப் பெறும் என்பது எங்கள் கணிப்பு. எல்லாம் சரியாக நடந்தது. அமைச்சர் சுவிட்சை ஆன் செய்த அந்த நொடியில் டப் என ஃப்யூஸ் போய் முழுக் கண்காட்சியிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நாங்கள் முன்பு பலமுறை ஒத்திகை பார்த்தபோது சரியாக இருந்தும் அமைச்சர்மீது தூவப்பட்ட பன்னீர் சுவிட்சில் சிந்தி, திருவிளையாடலை நிகழ்த்திவிட்டது. பிறகுதான் புரிந்தது.

யாருக்கும் என்ன செய்வது எனப் புரியவில்லை. மாவட்ட ஆட்சியர், கல்வி அதிகாரிகளை முறைக்க, கல்வி அதிகாரிகள் எங்கள் தலைமை ஆசிரியரை முறைத்தனர். அவர் செய்வதறியாது எங்களைப் பார்த்து முழித்தார். ‘ மின்சார வாரியத்துக்கு ஃபோன் போடுங்க…’ என்றும் ‘சார்…. ஜெனரேட்டர் இருக்கா’ என இல்லாத ஜெனரேட்டரைத் தேடியும் பல இடங்களிலிருந்து குரல்கள். அப்போது திடீரென்று கண்காட்சியிலிருந்து வெளியே வந்தார் தேவா. ‘சார், இங்க வாங்க சார்’ என்று என்னை அழைத்தார். ‘அந்த மெயின் பாக்ஸ்கிட்ட போகணும். வாங்க’ என்றார். மடமடவென்று எங்கிருந்தோ ஒரு ஏணி எடுத்துவந்து ஏறி மெயின் பாக்ஸ் திறந்து லாவகமாக ஃப்யூஸ் மரைகளைப் பிடுங்கி சோதித்தார். அவரது அறிவியல் ஆசிரியரான நான் ஏணியைப் பிடித்தபடி நின்றேன். ஒரே நிமிடம்தான். பளிச்சென்று எங்கும் ஒளி வெள்ளம்! ‘ஒண்ணுமில்ல சார்.. பியூஸ் போயிடுச்சு… இப்ப ஓ.கே’ என்றவரைப் பார்த்து நம்புவதா வேண்டாமா என வியந்த நான் அவர் வைத்திருந்த காட்சிப் பொருளைக் கண்டு வாய் பிளந்து நின்றேன்.

தேவாவின் சுய தேடல், மின் கருவி அமைப்பாக்கம். தனது மின் சாதனச் சேகரிப்பை வைத்து அந்த அறையில் மினி வானொலி நிலையத்தின் செயல்பாட்டைச் செயல்திட்டமாக (Working Model Project) காட்சிப்படுத்தியிருந்தார். பாடப் புத்தகங்கள் வகுப்பறைப் பள்ளிக் கட்டிடத்திற்கு வெளியே குழந்தைகளின் தேடல் வழி கற்றல் எல்லைகளற்றது என எனக்குக் காட்டிய தேவா தற்போது இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் (பி.எஸ்.என்.எல்) ஆயத்தப் பொறியாளராகி ஆந்திரத்தில் பணிபுரிகிறார்.

(கலீல் ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி’ புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி. தமிழில்: பிரமிள்)

குழந்தைகள் உங்களுடையவை அல்ல. அவை, வாழ்வு தன்னையே தான் அடையக் கொள்ளும் ஏக்கத்தின் மகனும் மகளுமாக ஜனித்தவை.

உங்கள் குழந்தைகள் உங்களூடே தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல.

உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடமைகளல்லர்.

அவர்களுக்கு உங்களுடைய அன்பை நீங்கள் தரலாம், உங்கள் எண்ணங்களை அல்ல.

ஏனெனில், சுயமாக அவர்களிடத்தே எண்ணங்கள் பிறக்கின்றன.

அவர்கள் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம், உயிருக்கு அல்ல.

ஏனெனில், உங்கள் கனவில்கூட நீங்கள் அடைய முடியாத எதிர் காலம்தான் அவர்களது உயிர் உறையும் வீடு.

நீங்கள் அவர்களைப் போல ஆவதற்காக கடின முயற்சி செய்யலாம்.

ஆனால், உங்களைப் போல அவர்களையும் ஆக்கிவிடக் கூடாது.

ஏனெனில், வாழ்வு பின்னடித்துச் செல்வதில்லை. நேற்றைய நாட்களில் சுணங்குவதுமில்லை.

உயிருள்ள அம்புகளாக உங்களிடமிருந்தே எய்யப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் வில்லுகள்.

வில்லாளி, காலாதீதத்தின் மார்க்கத்தில் குறிவைத்து, தனது அம்புகள் அதிவேகத்துடன் தொலை தூரம் செல்லும்படி, உங்களைத் தனது மகாசக்தியால் வளைக்கிறான்.

வில்லாளியின் கரத்தில் உங்கள் வளைவு ஆநந்திக்கட்டும்.

ஏனெனில், பறக்கும் அம்புகளை அவன் விரும்புகிற அளவுக்கு அசைவற்ற வில்லின் உறுதியையும் விரும்புகிறான்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்