ஆங்கிலம் அறிவோமே - 88: விடுதலையா, உடல் மெலிவா?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்துவிட்டு வந்த கையோடு ஒரு நண்பருக்குப் பெரும் குழப்பம் உண்டானது.

காரணம் இதுதான். “ரத்தப் பரிசோதனையின் ரிசல்ட் தெரிய இரண்டு நாளாகும். ஏன்னா culture செய்யணும்” என்று பரிசோதனைச் சாலையில் கூறிவிட்டார்களாம். DNA test போல பண்பாடு குறித்தும் ரத்தச் சோதனையின் மூலம் அறிந்துகொள்ள முடியுமா?

இது வேறு culture என்று எடுத்துரைத்தேன். Culture என்றால் பண்பாடு மட்டுமல்ல, பாக்டீரியாவின் எண்ணிக்கையைப் பெருக வைப்பதையும் அது குறிக்கிறது. சில வகை பாக்டீரியா மிக மிகச் சிறியவை. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட அதிகமாக அவை இருந்தால் மட்டுமே அவற்றை நுண்நோக்கியில் பார்க்க முடியும். ரத்தத்தில் உள்ள பாக்டீரியா அந்த அளவுக்குப் பெருகச் சில நாட்கள் ஆகலாம். எனவே, ரத்தத்தை culture செய்வார்கள். அதாவது, ஒரு செயற்கையான ஊடகத்தில் பாக்டீரியாவை வேறு ரசாயனப் பொருள்களின் மூலம் பல்கிப் பெருக வைப்பார்கள். அதைக் கொண்டு அந்த பாக்டீரியாவின் இருப்பை உறுதி செய்துகொள்வார்கள்.

பாக்டீரியா கூட்டத்தைக் குறிக்கவும் culture என்ற வார்த்தையைச் சிலர் பயன்படுத்துகிறார்கள்.

வேறு சில உயிரினங்களின் கூட்டத்தை எப்படி அழைக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ளலாமா?

Ambush என்பது புலிகள் கூட்டத்தைக் குறிக்கிறது. அதே சமயம் ambush என்பது மறைந்திருந்து எதிர்பாராத தருணத்தில் தாக்குவதையும் குறிக்கிறது. Eight soldiers were killed in an ambush. Ambush என்பது verb-ஆகவும் பயன்படுகிறது. They were ambushed.

Pandemonium என்றால் களேபரம் என்று அர்த்தம். (களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்ட காலம் இருண்ட காலம். இதிலிருந்து வந்த வார்த்தைதான் களேபரம் என்றார் எனது தமிழ் ஆசிரியர்). அதாவது கூச்சலும் குழப்பமும் நிறைந்த நிலை. அதே சமயம் கிளிகள் கூட்டத்தையும் pandemonium என்கிறார்கள். சுவாரசியமாக இருக்கிறது இல்லையா?

விளாசி எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சவுக்கை scourge என்பார்கள். மிகுந்த இன்னல்களைக் கொடுக்கும் ஒருவரையோ ஒன்றையோ scourge என்று கூறுவதுண்டு. The scourge of mass unemployment.

அதே சமயம் ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் கூட்டத்தையும் scourge என்று குறிப்பிடுவார்கள். அது எது தெரியுமா? நம் அனைவரையும் நடுநடுங்க வைக்கும் உயிரினம் அது.

Congress என்பது ஒரு தேசியக் கட்சி என்பது நமக்குத் தெரியும். அமெரிக்க நாடாளுமன்றத்தைக் கூட congress என்பார்கள். The new tax structure requires approval of congress. கருத்தரங்கு, பயிலகம் போன்ற கூட்டங்களையும் congress என்பதுண்டு. International Congress of Scientists. அதேசமயம் Baboon எனப்படும் ஒருவகை வாலறுந்த குரங்குகளின் கூட்டத்தையும் congress என்கின்றனர்.

வேறு சில விலங்குகள் கூட்டம் அழைக்கப்படும் விதமும் சுவையாக இருக்கிறது.

சிங்கக் கூட்டம் - Pride

சிட்டுக் குருவிகள் கூட்டம் - Host

எலிகள் கூட்டம் - Mischief

மீன்கள் கூட்டம் - School

யானைகளின் கூட்டம் - Parade

ஒட்டகச் சிவிங்கிகளின் கூட்டம் Tower

காக்கைகளின் கூட்டம் - Murder

(இவற்றில் சில வார்த்தைகளை வேறு சில விலங்குகளின் கூட்டத்தைக் குறிக்கவும் பயன்படுத்துகிறார்கள்).

ஒரு scourge உங்களை நோக்கிப் படையெடுத்தால் என்ன செய்வீர்கள்? பயந்து ஓடுவீர்களா? வேண்டாம். உங்கள் பகுதியில் கொசு மருந்தைத் தெளியுங்கள். அல்லது கொசு ராக்கெட்டைக் கையில் எடுங்கள்.

“Agony என்றால் தெரியும், Aunt என்றால் தெரியும். ஆனால், ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் Agony Aunt என்று குறிப்பிட்டிருக்கிறார்களே அதற்கு என்ன அர்த்தம்?” என்கிறார் ஒரு வாசகர். .

Agony என்றால் மிகமிக அதிகமான உடல் துன்பம் அல்லது மன உளைச்சல் எனலாம்.

நாளிதழ்களிலோ பருவ இதழ்களிலோ வாசகர்களின் Agony- களை அவர்கள் வெளிப்படுத்த, அவற்றுக்குத் தீர்வுதரும் விதமாகச் சிலர் பதிலளிக்கிறார்கள்.

“சகோதரி! உன் கணவன் உன்னைக் கொடுமைப்படுத்துவதாக எழுதியிருந்தாய். அன்பால் அவனைத் திருத்து. தினமும் விதவிதமாக அவனுக்குச் சமைத்துப் போடு” என்பது போலவோ “குட்டக் குட்டக் குனியக் கூடாது. அவனுக்குத் தக்க பாடம் புகட்டு” என்பது போலவோகூட ஆலோசனைகள் அளிப்பார்களே, அவர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

‘Un’ என்பதற்கும் ‘Dis’ என்பதற்கும் ஒரே அர்த்தம்தானா? எதிர்மறையான பொருளைக் குறிக்க இரண்டையுமே பயன்படுத்துகிறார்களே! என்றும் பல வாசகர்கள் கேட்கிறார்கள்.

Un என்பதற்கு எதிர்மறையாக என்ற அர்த்தம். Safe என்றால் பாதுகாப்பான. Unsafe என்றால் பாதுகாப்பில்லாத. இதே போலத்தான் wanted unwanted, aware unaware ஆகியவை.

Un என்று தொடங்கும் வார்த்தைகளுக்கும் dis என்று தொடங்கும் வார்த்தைகளுக்கும், அந்தத் தொடக்கங்கள் உண்டாக்கும் மாறுதல்கள் அதிகமில்லை. என்றாலும் Un என்பது இயல்பாகவே இப்போதுள்ள இருப்பைக் காட்டுகிறது. Dis என்பது ஒரு செயல்படுதன்மையை உணர்த்துகிறது. Allow disallow, Infect Disinfect என்பதுபோல.

EMANCIPATE EMACIATE

‘Emancipate என்பதற்கு அர்த்தம் தெரியும். Emaciate என்று ஒரு நாளிதழில் படித்தேன். அதற்கு என்ன அர்த்தம்?’’ என்கிறார் ஒரு வாசகர்.

Emancipation என்றால் விடுபடுவதற்கான செயல்முறை எனலாம். அதாவது சட்டம், சமூகம் அல்லது அரசியல் காரணமாக நேர்ந்த கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையாவது. The social emancipation of women is inevitable. The struggle for emancipation from slavery.

Emaciation என்றால் மிகமிக ஒல்லியாகவோ, பலவீனமாகவோ இருக்கும் ஒருவரின் நிலை என்று அர்த்தம். “என்ன இப்படித் தேவாங்குபோல இருக்கிறாயே? என்றோ “அவன் ஆனாலும் ஒல்லிப்பிச்சானாக இருக்கிறான்” என்றோ கூறுகிறோமே அதுபோல. The images of emaciation of the people of Somalia present a painful picture.

Enunciation என்ற மற்றொரு வார்த்தையையும் பார்க்கலாமே. Enunciate என்றால் தெளிவாக ஒன்றை உச்சரிப்பது என்று அர்த்தம். The teacher enunciated each world slowly so that the students can understand better. Enunciation என்பது இதன் noun வடிவம்.

DIFFERENCE DIFFERENTIATION

Difference என்பதும் differentiation என்பதும் ஒன்றா? அல்ல. இரண்டுமே பெயர்ச் சொற்கள்தான். ஆனால் difference என்பது வித்தியாசம். Differentiation என்பது வித்தியாசப்படுத்தும் செயல். சிலவற்றை differentiate செய்து பார்க்கும்போது அவற்றில் உள்ள difference-ஐ நீங்கள் மனதில் கொண்டுதான் அந்தச் செயலைச் செய்கிறீர்கள். எதிரில் இரண்டு பேர் நிற்பதாக வைத்துக்கொள்வோம். “உங்களுக்கிடையே difference இல்லை’’ என்று சொன்னால் அவர்கள் ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இரட்டையர்களாக இருக்கலாம் அல்லது ஒரே மாதிரி எண்ணப் போக்கு கொண்டவர்களாக இருக்கலாம்.

எதிரில் நிற்பவர்களைப் பார்த்து “உங்களை differentiation செய்ய மாட்டேன்” என்று சொன்னால் ‘’என்னைப் பொருத்தவரை நீங்கள் ஒன்று. உங்களை ஒரே மாதிரிதான் நடத்துவேன்” என்பது போன்ற அர்த்தம் அதில் தொனிக்கிறது.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்