கங்கை கொண்ட வரலாற்றைத் தேடி... 3 - கல்லாய் நிற்கும் ‘சதி’ தீ

By குள.சண்முகசுந்தரம்

சுத்தமல்லீஸ்வரத்திலிருந்து கொல்லேகால் சாலையில் பயணிக்கிறோம். வெகுசீக்கிரத்திலேயே, நாம் ஆவலோடு எதிர்நோக்கிய கலியூர் வந்துவிடுகிறது.

கொல்லேகாலுக்கு ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கலியூர். இங்குதான் சோழப்படைகளுக்கும் கங்கர் படைகளுக்கும் இடையே கடும் போர் நடந்திருக்கிறது. ஊருக்குள் நுழைந்ததுமே சாலையோரம் வேணுகோபாலசாமி கோயில். இந்தச் சிறிய கோயிலின் வடக்குச் சுவரின் அருகே மண்ணில் வீழ்ந்து கிடந்த கல்வெட்டில் கலியூர் போர்க்களக் காட்சிகள் விவரிக்கப்பட்டிருந்தன. கலியூர் போர்க்களத்தில் இப்போது மக்கள் குடியேற்றங்கள் வந்துவிட்டபோதும், அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்தபோது எலும்புத் துண்டுகள் கிடைத்ததாகவும் அவற்றை ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாகவும் சொல்கிறார் வெங்கடேசன். இங்கிருந்த இன்னும் சில கல்வெட்டுகளும் பெங்களூரு அருங்காட்சியகத்தில் வைத்துப் பராமரிக்கப்படுவதாக அவர் சொல்கிறார்.

தழைக்காடு வெற்றி

விக்கிரம சோழன் உலா - சோழர்களின் வீர பராக்கிரமங்களைச் சொல்லும் ஒட்டக்கூத்தர் எழுதிய நூல். இதில், ‘தூதர் காப்புண்டு பகல் ஒன்றில் ஈரொன்பது சிரமும் கொண்டு மலைநாடு கொண்டோனும்’ என்ற செய்யுள் வரிகள் வருகின்றன. ராஜேந்திரன் ஒரே பகலில் 18 காடுகளைக் கடந்து மலைநாட்டை வென்றதாக இதற்குப் பொருள் சொல்கிறார்கள்.

ஆனால், வெங்கடேசனோ, “தங்களது தலைநகரான தழைக்காட்டை சோழர்கள் நெருங்கிவிடக் கூடாது என்பதற்காக கங்கர்கள் கலியூரில் பெரும் படையை நிறுத்தி சோழப் படைகளோடு மூர்க்கத்தனமாய் மோதினார்கள். இந்தப் போரை சோழப் படைத் தளபதி அப்ரமேயன் வழிநடத்தினார். போரில் கங்கர் படையின் முக்கிய போர்த் தளபதிகள் 18 பேரைக் கொன்று தலைநகர் தழைக் காட்டை கைப்பற்றினார் ராஜேந்திர சோழன். இதைத்தான் விக்கிரம சோழன் உலா அப்படி விவரிக்கிறது’’ என்கிறார்.

கலியூரில் சோழர் காலத்துக்குப் பிந்தைய நடுகற்களையும் பார்க்க முடிந்தது. வேணுகோபாலசாமி கோயிலுக்கு எதிரே சாலை ஓரத்தில், ஆறடி உயரத்திலான இன்னொரு கல்வெட்டும் இருந்தது. விஜயநகரப் பேரரசு காலத்துக் கல்வெட்டான அதில், கோயிலுக்கு நிலங்களைத் தானம் கொடுத்த விவரங்கள் தமிழில் பொறிக்கப்பட்டிருந்தன. இவை தவிர, ஊரின் மையத்தில் உள்ள பண்ணாரி அம்மன் (இது கர்நாடக பண்ணாரி) கோயில் பகுதியிலும் ஊரின் வடக்குப் பகுதியில் உள்ள மல்லிகார்ஜுனர் கோயிலின் பின்பகுதியிலும் சோழர் மற்றும் விஜயநகர காலத்து நினைவுக் கற்களும் கடவுளர் சிற்பங்களும் நம் கண்ணில் பட்டன.

முக்கூடலில் கல்வெட்டு

கலியூரிலிருந்து மீண்டும் மைசூரை நோக்கித் திரும்புகிறது பயணம். வழியில் டி.நரசிப்பூர். கபினியும் காவிரியும் சங்கமிக்கும் இப்பகுதியை ‘முக்கூடல்’ என்கிறார்கள். ‘இரண்டு ஆறுகள்தானே கூடுகின்றன எப்படி முக்கூடல் ஆகும்?’ என்று கேட்டால், ‘வெளியில் கண்ணுக்குத் தெரிவது இரண்டு. பூமிக்கடியில் ஸ்படிகா நதி என்று இன்னொரு ஆறும் ஓடுவதாக ஐதீகம். அதனால்தான் இது முக்கூடல்’ என்று விளக்கம் தருகிறார்கள்.

ராஜேந்திர சோழனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அதிராஜேந்திரன் போரில் கொல்லப்பட்டதால் ராஜேந்திர சோழனின் மகள் அம்மங்காதேவி நாச்சியாரின் மகனும் கீழைச் சாளுக்கியருமான முதலாம் குலோத்துங்க சோழனிடம் சோழ ராஜ்ஜியம் ஒப்படைக்கப்படுகிறது. ராஜராஜன் மற்றும் ராஜேந்திரன் காலத்தில் அடிக்கடி போர்கள் நடந்துகொண்டிருந்ததால் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அதைச் சமாளிக்க அதிகமான வரிச்சுமை மக்கள் தலையில் சுமத்தப்பட்டது. ராஜேந்திரனுக்குப் பிறகு அவரது வாரிசுகள் கொல்லப்பட்டதற்கும் சோழநாட்டில் ஏற்பட்ட குழப்பங்களுக்கும் இதுவும் முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதே சமயம், குலோத்துங்க சோழன் ஆட்சிக்கு வந்த பிறகு, கூடுதலாக சுமத்தப்பட்ட வரிகள் முழுவதுமாக நீக்கப்பட்டன. இதனால், ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று புகழப்பட்டார் குலோத்துங்கன்.

முக்கூடல் கரையிலும் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலுக்கு அருகிலேயே கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் உள்ள பதினோராம் நூற்றாண்டு தமிழ் எழுத்துக்களில் ‘திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்கன்’ என்ற பெயரும் வருகிறது. “ராஜேந்திரனுக்குப் பிறகும் இந்தப் பகுதிகள் சோழ சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. அப்படி இருந்ததால்தான் இங்கே இந்தக் கல்வெட்டு குலோத்துங்கன் காலத்தில் வைக்கப்பட்டிருக்கிறது’’ என்கிறார் வரலாற்று ஆர்வலர் கோமகன்.

முக்கூடலுக்கு சற்றே முன்பாக சாலையின் இடது ஓரத்தில் மூன்று நடுகற்கள் எங்கள் கண்ணில் படுகின்றன. கீழே இறங்கிப் பார்த்ததுமே, “இது வீரக்கல் இல்லை; சதிக் கல்’’ என்கிறார் பேராசிரியர் கண்ணன். அதில் சோழர்களின் சிற்பக் கலையம்சத்துடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மூன்று பெண்கள் ஒரே நேரத்தில் தீயில் விழுவது போன்ற காட்சி தெரிகிறது. “மூன்று மனைவிகளைக் கொண்டிருந்த ஒருவன் இறந்ததும் அவனது மனைவிகளும் தீயில் தள்ளப்படுகிறார்கள். இறந்தவன் ஊர்த் தலைவனாகவோ முக்கியப் பிரதிநிதியாகவோ இருந்திருக்க வேண்டும். அதனால்தான், அவனும் அவனது மனைவிகளும் இறந்ததை நடுகல்லாக்கி வைத்திருக்கிறார்கள்’’ என்று விளக்குகிறார் கண்ணன். பெண்களை உயிரோடு எரித்த ஒரு சமூகக் கொடுமையின் சாட்சியாக அந்த சதிக்கற்கள் நிற்கின்றன.

அதக்கூர் வரலாறு

தசரா கொண்டாட்டங்களுக்காக ஒளிர்ந்துகொண்டிருந்த மைசூர் அரண்மனையின் எழிலை ரசித்தபடி டி.நரசிப்பூரிலிருந்து மைசூரை வந்தடைகிறோம். மறுநாள், ஆந்திர மாநிலத்தின் ஹேமாவதியை நோக்கிப் புறப்பட்டோம். வழியில் எதிர்ப்பட்டது ரங்கப்பட்டணம் - திப்பு சுல்தானின் தலைநகரம். காவிரி இரண்டாக பிரிந்து கூடும் மூன்று இடங்களில் ரங்கநாதருக்குக் கோயில் உள்ளது. அதில் முதலாவதாக ஆதிரங்கன் - ரங்கப்பட்டணம், இரண்டாவது மத்தியரங்கன் - சிவசமுத்திரம், மூன்றாவது அந்தரங்கன் - தமிழகத்தின் ரங்கம்.

ரங்கப்பட்டணத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திப்பு சுல்தான் கோட்டையின் பெரும் பகுதி சிதைந்துவிட்டது. ஆனால், திப்புவின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தை முறையான பராமரிப்பில் வைத்திருக்கிறார்கள்.

1799 மே 7-ம் தேதி ஆங்கிலேயப் படையினரால் திப்பு கொல்லப்படுகிறார். ஆனால், அவரது உடல் உடனடியாகக் கிடைக்கவில்லை. மூன்று நாட்கள் கழித்துக் கோட்டை அருகே உடல் அடையாளம் காணப்படுகிறது. அவ்விடத்தில் சிறிய பூங்காவும் கல்வெட்டும் அமைத்துப் பராமரிக்கப்பட்டுவருகிறது. இதற்கு மிக அருகிலேயே, பளிச்செனக் கம்பீரமாய் நிற்கிறது திப்பு எழுப்பிய பிரம்மாண்டமான மசூதி.

மீண்டும் மைசூர் - ஹேமாவதி சாலையில் பயணம் தொடர்கிறது. பெங்களூரு - மும்பை ஆறு வழிச் சாலையை நெருங்குவதற்கு முன்னதாக தும்கூர் மாவட்டத்தில் அதக்கூர் நம்மை எதிர்கொள்கிறது. இந்த அதக்கூரை ஒதுக்கிவிட்டு நாம் வரலாற்றைப் பேசமுடியாது. அதுகுறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.

(பயணம் தொடரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்